உலகின் எந்தப் பெருநகரமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து சிக்னலில் சில நிமிஷங்கள் நின்று சாலையைக் கடக்க முயற்சி செய்யுங்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர் அளவுக்கு நீங்களும் வலிமையும் சுறுசுறுப்பும் உள்ளவராக இருந்தால்தான் சாலையை பச்சை சிக்னல் எரிந்து முடிவதற்குள்ளான நேரத்தில் கடக்க முடியும். சில விநாடிகள் தாமதித்தாலும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் பெருங்குரலெடுத்து உறுமத் தொடங்கிவிடும்.
வேகமாக நடக்க முடியாமல் உங்களுக்கு உடலில் கோளாறு இருந்தாலோ, மிக கனமான சூட்கேஸ் அல்லது பையை நீங்கள் வைத்திருந்தாலோ, வயதான வராக இருந்தாலோ பொறுமையில்லாத இந்த வாகன ஓட்டிகள் நம்மை இடித்துத் தள்ளிவிடுவார்களோ என்ற அச்சத்துடனும் மரண பயத்துடனும்தான் கடக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான உலக நாடுகளில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளின் வேகம் விநாடிக்கு 1.2 மீட்டர் என்று கணக்கிட்டு, சிக்னல்களில் விளக்குகள் எரியும் நேரத்தை நிர்ணயித்துள்ளனர். ஆனால், வயதானவர்களின் வேகம் விநாடிக்கு 0.7 மீட்டர் முதல் 0.9 மீட்டர் வரையில்தான்!
ஆரோக்கியத்துக்கு மட்டுமே அனுமதி
நகரங்களின் சாலை, போக்குவரத்து சிக்னல், நடை மேம்பாலங்கள், பாதையோர நடைமேடைகள், சுரங்கப் பாதைகள், ஒரு சிக்னலுக்கும் இன்னொரு சிக்னலுக்குமான இடைவெளி, சாலையின் நடுவே கடப்பதற்கான இடைவெளிகள் என்று எல்லாமும் நல்ல ஆரோக்கியமும் இளமையும் வலிமையும் உள்ள மனிதர்களை மட்டுமே மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. ஊன்றுகோலோ, சக்கர நாற்காலியோ தேவைப்படாத, மின்னல் வேகத்தில் சுற்றிவரக்கூடிய ஆரோக்கியமான மனிதர்கள் மட்டுமே நகரங்களில் வசிப்பார்கள் என்ற அடிப்படையில் எல்லாம் கட்டப்படுகின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன.
2030-வது ஆண்டில் உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நகரங்களில் மட்டுமே அதுவும் அதிக வருவாய் உள்ள சமூகங்களுடன் சேர்ந்து வாழப் போகின்றனர். நகர மக்களில் கால்வாசிப் பேருக்கு 60-க்கும் மேல் வயதாகியிருக்கும்.
வெளியிடங்களுக்குச் செல்வது எளிதல்ல
வயதானவர்கள் தங்களுடைய குடும்பங்களிலும் வெளியிடங்களிலும் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க நினைப்பார்கள், அனைவருடனும் கலந்து பழக விரும்புவார்கள், எல்லா இடங்களுக்கும் செல்ல விரும்புவார்கள் என்ற எண்ணம் பொதுவாக நிலவுகிறது. ஆனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேருக்கு வீட்டைவிட்டு வெளியே செல்வது எளிதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நகரம் என்பது அவர்களுக்கு விரோதமான இடம். பொதுப் போக்குவரத்து அனைத்துமே முதியோரால் எளிதில் பயன்படுத்த முடியாத வகையில் இருக்கின்றன. பேருந்து அல்லது ரயில்களில் - அவை புறப்படுவதற்குள் ஏறுவது, உட்கார இடம் பிடிப்பது, மற்றவர்களால் இடிக்கப்படாமல், தள்ளப்படாமல், மிதிக்கப்படாமல் பயணிப்பது போன்றவை பெரிய சவால்கள். வீதியில் இறங்கி நடக்கலாம் என்றால் மேடு பள்ளமான நடைமேடைகள், கரடுமுரடான சாலைகள், இரவில் போதிய விளக்கொளி இல்லாமல் மங்கிய பகுதிகள், தெளிவாகத் தெரியாத அடையாள போர்டுகள், இடித்துத் தள்ளிவிடுவதைப் போல வரும் வாகனங்கள், முகப்பு விளக்கினால் கண்களைக் கூசச் செய்யும் வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க முடியாதவாறு வீதி இரைச்சல்கள், சாலைத் தடைகள், வேகத் தடைகள், குப்பைக் கூளங்கள், அசுத்தங்கள், மூடிகள் கழன்ற பாதாளச் சாக்கடைத் திறப்புகள், இருட்டில் காத்திருக்கும் நாய், மாடுகள், கழுதைகள் போன்ற பிராணிகள்தான் பெரும்பாலும் வரவேற்கின்றன.
பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் வந்து நிறுத்தாத நகர பேருந்துகள், கால் வைத்து ஏற முடியாத உயரத்தில் பேருந்து படிகள், அப்படியே சமாளித்து ஏறினாலும் உள்ளே வந்து பாதுகாப்பாக நிற்கவோ, உட்காரவோ விடாமல் உடனே வேகம் எடுக்கும் டிரைவர்கள் என்று இந்த அவதிகளைச் சில முறை அனுபவித்த பிறகு, வீட்டிலேயே அடைபட்டுவிடத் தீர்மானிக்கிறார்கள் முதியவர்கள். இதனால், தனிமையும் விரக்தியுமே அவர்களை அதிகம் ஆட்கொள்கிறது என்கிறார், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூக முதியோரியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் கிறிஸ் பிலிப்சன்.
நகர மையங்களில் இளைஞர்கள் ஆதிக்கம்
ஏழை, நடுத்தரக் குடும்பத்து முதியோர் இப்படி வீதிகளுக்கே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால், நகரின் மையப் பகுதிகளில் இளைஞர்களை மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. மற்றபடி பணம், பதவி, செல்வாக்கு உள்ள முதியவர் களை மட்டுமே நகரங்களில் அடிக்கடி காண முடிகிறது.
வசதியும் இளமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே நகரின் முக்கியப் பகுதிகள், முதியவர்களுக்கு அல்ல என்பது புதுவிதமான சமூக அநீதி. இப்போது நம் சமூகத்தில் இது நிரந்தரமாகிவிட்டது. ஏழைகளும் முதியவர்களும் செல்ல முடியாத (ஷாப்பிங் மால் போன்ற) பகுதிகளும் நகரங்களுக்குள் உருவாகி வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது, சில சமுதாயங்களை வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வழி செய்கிறோம் என்கிறார் பிலிப்சன்.
உலக சுகாதார அமைப்பு இதைத்தான் 2006-ல், ‘முதியவர்களுக்கு உகந்த நகரங்கள்’ என்ற திட்டம் மூலம் அமல்படுத்த விரும்பியது. இதில் உலகம் முழுக்க 258 நகரங்களும் சமூகங்களும் இணைந்தன. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரம் முதலாவதாக இணைந்தது. வடக்கு லண்டனில் உள்ள ஐலிங்டன் சமுதாயத்தையும் இணைக்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. நகரக் கட்டமைப்புகளில் முதியவர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே இம்முயற்சியின் நோக்கம்.
வீடுகள், அடுக்ககங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று ஒவ்வொரு இடமும் எல்லாவித வயதினரும் பயன்படுத்த எளிதான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். எல்லாத் திட்டமிடல்களிலும் முதியவர்களின் உடல் நிலைமைகளையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், அரசும் பெருநிறுவனங்களும் இதில் அக்கறை காட்டுவதில்லை.
மான்செஸ்டர் நகரின் ஒரு பகுதியில் உள்ள கடைகளில், கடைகளுக்கு முன்பாக ஓரிரு இருக்கை களைப் போட ஆரம்பித்திருக்கின்றனர். வயதானவர்கள் நீண்ட நேரம் நின்று எதையும் பார்த்து வாங்கச் சிரமப் படுவார்கள் என்பதால் வந்ததும் உட்கார இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் வெயில், மழையிலிருந்து காக்க மேற்கூரைகளும் வயதானவர்கள் அமர இருக்கைகளும் போடப்படுகின்றன.
பிற நாடுகளிலும் முதியவர்களுக்கு எப்படியெல்லாம் பொது இடங்களில் வசதிகள் செய்து தரலாம் என்று சிந்திக்கின்றனர். அடேக், கைசர் என்ற சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் ஜெர்மனியில் முதியோர் களுக்காகவே அகலமான ஜன்னல்கள், வழுக்காத தரைகள், உயரக் குறைவான ஷெல்ஃபுகள், பிரகாசமான விளக்குகள், பெரிய எழுத்தில் அச்சிடப்பட்ட லேபிள்கள் என்று வசதி செய்துள்ளன. எழுத்துகளைப் பெரிதாக்கிப் படிக்க உதவும் பூதக் கண்ணாடிகளையும் கயிறு கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளன.
ரசிப்பதற்கான வசதிகள்
தனியார்களுக்குச் சொந்தமான இடங்களில் முதியவர்கள் தங்கி சிறிது நேரம் இளைப்பாறவும், நண்பர்களுடன் பேசி மகிழவும், வேடிக்கை பார்க்கவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டிட வடிவமைப்பாளர்கள், முதியோருக்கு இயன் முறை மருத்துவம் செய்வோர், குடியிருப்போர் சங்கத்தவர் சேர்ந்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தெரு விளக்குகளின் கீழேயே வசதி யாக உட்கார்ந்துகொள்ளவும், நடைமேடைகளில் சிறிதுநேரம் அமரவும் சாய்வான இருக்கைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. ஒரு குடியிருப்புக்கும் அடுத்த குடியிருப்புக்கும் இடையிலான வேலிகூட முதியோரை வருத்தாத வகையிலும் அவர்கள் விரும்பினால் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நடக்கவும் ஏற்றபடி வடிவமைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக நகரங்களில் முதியவர்களை வீட்டுக்குள் விரட்டி அடிப்பதற்குப் பதிலாக அவர்களையும் நம்மோடு சேர்த்து எல்லாவற்றையும் ரசிக்க அனுமதிக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை அரசு, தனியார் துறை, சமுதாயம் என்று அனைத்துத் தரப்பும் இணைந்து தொடர வேண்டும்.
© ‘தி கார்டியன்’, | தமிழில் சுருக்கமாக: சாரி |
No comments:
Post a Comment