இந்திய வம்சாவளியினர் தேர்தலில் பிரசாரம் செய்யலாமா?
பதிவு செய்த நாள்21ஆக
2017
01:00
புதுடில்லி: 'வெளிநாடுகளில் வாழும், இந்திய வம்சாவளியினர், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், பிரசாரம் செய்வது, 'விசா' விதிகளை மீறும் செயலா' என, வெளியுறவு அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது.
சமீபத்தில், பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர், பிரசாரத்தில் ஈடுபட்டனர்; இது, விசா விதிகளை மீறும் செயலா என, தலைமை தேர்தல் கமிஷனுக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட அமைச்சகத்திடம், தலைமை தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலக உயரதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில், வெளிநாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பிரசாரம் செய்தனர். அது பற்றி, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், அது, விசா விதிமீறல் ஆகாதா என, விளக்கம் கேட்டு, மாநில தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விஷயத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது தேர்தல் விதிகளில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகத்திடம், வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. சட்ட அமைச்சகம், தக்க பதிலை இன்னும் அளிக்கவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment