கொலை முயற்சி வழக்கில் 'ஆசிப்' அகமது மீண்டும் கைது
சென்னை: கூலிப்படையினரை ஏவி, சினிமா பைனான்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கில், 'ஆசிப்' பிரியாணி ஓட்டல் உரிமையாளர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஆசிப் அகமது, 45. இவர், சென்னை ஆலந்துார் உட்பட, 17க்கும் மேற்பட்ட இடங்களில், 'ஆசிப் பிரியாணி' என்ற பெயரில், ஓட்டல்கள் நடத்துகிறார்.
தொழிலை விரிவுபடுத்த, 2014 - 16 வரை, இரண்டாவது மனைவி, நந்தினி என்பவருடன், சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, சினிமா பைனான்சியர், கோதண்ட ராமன், 52, என்பவரிடம், 5.70 கோடி ரூபாய் கடன் வாங்கினார்; அதற்கு வட்டி செலுத்தவில்லை என, கூறப்படுகிறது.
இதனால், பணத்தை திரும்ப தரும்படி, கோதண்டராமன் பலமுறை கேட்டதால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின், ஆசிப் அகமது, இரு தவணைகளில், நான்கு கோடி ரூபாய்க்கு, காசோலை மற்றும் வரைவோலை கொடுத்துள்ளார்.
காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது; வரைவோலை போலி என, தெரிய வந்தது.
இந்நிலையில், 2017 ஜன., 5ல், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, கோதண்டராமன், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மர்ம நபர்கள், அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், வெட்டிக் கொல்ல முயன்றனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர், உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து, கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், ஆசிப் அகமது, நந்தினி ஆகியோர், கூலிப்படையை ஏவி, கோதண்டராமனை கொல்ல முயன்றது தெரிந்தது. இந்த வழக்கில், அப்போதே, நந்தனி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். ஆசிப் அகமது, 'எஸ்கேப்' ஆகி வந்தார்.
இதற்கிடையே, கோதண்டராமனுக்கு, போலி வரைவோலை மற்றும் காசோலை கொடுத்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், நவ., 4ல், ஆசிப் அகமதுவை கைது செய்தனர்.
கோடம்பாக்கம் போலீசார், கூலிப்படையை ஏவி, கோதண்டராமனை கொல்ல முயன்ற வழக்கில், ஆசிப் அகமதுவை நேற்று கைது செய்து, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்
No comments:
Post a Comment