Thursday, November 23, 2017

மாநில அரசின் உத்தரவால் பீஹார் ஆசிரியர்கள் கோபம்

Added : நவ 22, 2017 23:10

பட்னா: 'திறந்தவெளியில் அசுத்தம் செய்வோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்; அவ்வாறு அசுத்தம் செய்வோரை படம் எடுக்க வேண்டும்' என்ற மாநில அரசின் உத்தரவால், பீஹாரில், ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் துாய்மை இந்தியா மற்றும் நிதிஷ் குமாரின் ஏழு இலக்குகள் திட்டங்களின் கீழ், பீஹாரில் துாய்மைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திறந்தவெளியில் அசுத்தம் செய்யாத மாநிலமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'இது தொடர்பாக மக்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பீஹார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர், சத்ருகன் பிரசாத் சிங் கூறியதாவது:


ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஆசிரியர் பணியைத் தவிர, மற்றப் பணிகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் பணியும் வழங்குவது அவர்களுக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும்; இது, ஆசிரியர்களை அவமதிக்கும் செயலாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


மாநில கல்வி அமைச்சர், கிருஷ்ண நந்தன் பிரசாத் வர்மா கூறியதாவது:
இது, ஆசிரியர்களை அவமதிக்கும் செயல் அல்ல. ஆசிரியர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ளது. அவர்கள் சொல்வதை மக்கள் கேட்பர். 


மேலும், காலை அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது, மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கும்படி கேட்டுஉள்ளோம். இதனால், அவர்களது ஆசிரியர் பணி எந்த வகையிலும் பாதிக்காது. துாய்மைப் பணியில் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024