Thursday, November 23, 2017


இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்


Added : நவ 23, 2017 00:46

திருப்பதி: திருமலைக்கு வரும் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையை, தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க, தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. விரைவு தரிசன பக்தர்கள், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள், திவ்யதரிசனம் உள்ளிட்ட பக்தர்களுக்கு, நேர ஒதுக்கீடு முறைப்படி, ஏழுமலையான் தரிசனத்தை, தேவஸ்தானம் வழங்கி வருகிறது.


தற்போது, இந்த நேர ஒதுக்கீடு முறையை, தர்ம தரிசன பக்தர்களுக்கும் அறிமுகப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம்,10 - 12ம் தேதி வரை சோதனை ரீதியில், இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக திருமலையில், 21 இடங்களில், 150 கவுண்டர்களை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.


இந்த கவுண்டர்களில், பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து, டோக்கனை பெறலாம். டோக்கன் பெற, ஆதார் அட்டை கட்டாயம். ஒருமுறை டோக்கன் பெற்ற பக்தர்கள், மீண்டும், 48 மணிநேரம் கடந்த பின் மட்டுமே, டோக்கன் பெற முடியும்.


அதன் மூலம், தினசரி, 38 ஆயிரம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு காத்திருப்பு அறைக்கு சென்றால், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். 


டோக்கன் பெறாமல், காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களும், தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.



இதன் மூலம், திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும், இனி நீண்ட நேரம் காத்திருக்காமல், இரண்டே மணிநேரத்தில், ஏழுமலையானை தரிசிக்க முடியும். அடுத்தாண்டு, பிப், மாதம் முதல், இம்முறை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024