குழந்தைகள் நல குழு தலைவர் ஆஜராகாவிட்டால், 'வாரன்ட்'
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குழந்தைகள் நல குழு தலைவர், ௧௩ம் தேதி ஆஜராகவில்லை என்றால், 'வாரன்ட்' பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, பரங்கிமலையில், 'அசிசி இல்லம்' உள்ளது. இந்த இல்லத்தின் பராமரிப்பில் இருந்த, ஐந்து குழந்தைகளை, போலீஸ் உதவியுடன் வலுக்கட்டாயமாக, குழந்தைகள் நலக்குழு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஐந்து குழந்தைகளையும் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அசிசி இல்லம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி, துரைசாமி, ஐந்து குழந்தைகளையும், இல்லத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், குழந்தைகளை ஒப்படைக்காததால், சமூகநலத் துறை இயக்குனர், குழந்தைகள் நலக்குழு தலைவர், மணிகண்டன் உள்ளிட்டோருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த, நீதிபதி, எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை; எனவே, குழந்தைகள் நல குழு தலைவரை ஆஜர்படுத்த, ஜாமினில் வரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்க, பதிவுத் துறை நடவடிக்கை எடுக்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எஸ்.வி.ஜெயராமன், '௧௩ம் தேதி ஆஜராவார்' என, தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் கூறியதால், ௧௪க்கு பின், வாரன்ட்டை அமல்படுத்துவதை பார்த்து கொள்ளலாம். விசாரணை, ௧௩க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment