மகா தீபத்தில் மலையேற தடை : கலெக்டருக்கு வலுக்கும் எதிர்ப்பு
திருவண்ணாமலை,நவ. 11-
'திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்தன்று, மலை ஏற விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்படாது' என, கலெக்டர் கந்தசாமி திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை காண, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். டிச., 2 அதிகாலை, கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
பக்தர்கள் மாலை அணிந்து, நெய் குடம் தலையில் சுமந்து, மலை உச்சிக்கு சென்று, மகா தீப கொப்பரையில், நெய் காணிக்கை செலுத்தி வருவர்.
மலை உச்சியில், மூன்று லட்சம் விதைப் பந்துகள் துாவப்பட்டுள்ளன. மலையேறும் பக்தர்கள், தீபம் ஏற்றி முடிந்தவுடன், மரங்களுக்கு தீ வைக்கின்றனர்.
வயதானவர்கள், நெஞ்சு வலி உடையோருக்கு உரிய நேரத்தில், மருத்துவ உதவி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, ஆண்டுதோறும், 10க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.
மேலும், விலங்குகள் அருந்தும் சுனை நீரில், மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை கலப்பதால், விலங்குகள் குடிக்கும் போது உயிரிழிப்பு ஏற்படுகிறது.
'எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, மலை ஏறுவது தடை செய்யப்படுகிறது. இதில், எந்தவித மாற்றமும் இல்லை' என, கலெக்டர் கந்தசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதற்கு ஹிந்து முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment