மகளால் கைவிடப்பட்ட மூதாட்டி கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
கோபி : கல் நெஞ்ச மகளால் புறக்கணிக்கப்பட்ட தாய், 18 நாட்கள் சிகிச்சைக்கு பின், கருணை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயலட்சுமி, 75; கணவர் இறந்து விட்டதால், மகள், பத்மாவுடன் வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்க்கு, சிகிச்சை அளிப்பதாக கூறி, ஈரோடு மாவட்டம், கோபி அருகே பச்சமலை சாலையில், மகள் விட்டு சென்றார். நஞ்சகவுண்டன்பாளையம் கருணை இல்ல நிர்வாகிகள், ஜெயலட்சுமியை மீட்டு, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. 18 நாட்களாக, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தாயை, மகளோ அல்லது ரத்த சொந்தங்களோ வந்து பார்க்கவில்லை.
உடன் சிகிச்சை பெற்ற பெண் நோயாளிகள், கருணை இல்ல நிர்வாகிகள், ஆதரவுக்கரம் நீட்டினர்.
சிகிச்சை முடிந்த நிலையில், திண்டுக்கல் கருணை இல்லத்துக்கு, தனியார் ஆம்புலன்சில், மூதாட்டி நேற்று அனுப்பி வைக்கப்பட்டார். கருணை இல்லம் சார்பில், 25 கிலோ அரிசி, சோப்பு, தேங்காய் எண்ணெய், மூன்று புடவை, இரு நைட்டிகள் வழங்கப்பட்டன.
ஆம்புலன்ஸ் டிரைவர் ரகமதுல்லா, ''வாடகை வேண்டாம், பெட்ரோல் மட்டும் ஏற்பாடு செய்தால் போதும்,'' எனக்கூறி விட்டார். கருணை இல்ல நிர்வாகிகள், மக்கள் ஒன்று சேர்ந்து, பெட்ரோல் செலவுக்கு ஏற்பாடு செய்தனர். வயதான தாயை தவிக்க விட்ட மகள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, கருணை இல்ல நிர்வாகி சந்தோஷ் காந்தி, கோபி போலீசில் புகார் செய்துள்ளார்.
No comments:
Post a Comment