Sunday, November 12, 2017

மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் ரத்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க நீதிபதி அறிவுரை

 நவ 12, 2017 00:42

சென்னை, மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், 'டெங்கு' ஒழிப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மனு தாக்கல்
சேலத்தைச் சேர்ந்த, 'சண்முகா மருத்துவமனை' மற்றும், 'சேலம் கேன்சர் இன்ஸ்டிடியூட்' நிறுவன நிர்வாக இயக்குனர், டாக்டர் பன்னீர்செல்வம் மற்றும் சுந்தரேசன் தாக்கல் செய்த மனுக்கள்:

சேலம் மாநகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசில், மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும், சுந்தரேசன் என்பவருக்கு, 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும்  தனியார் இடத்தில், சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதால், இந்த அபராதம் விதிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் இடத்தை ஆய்வு செய்யாமல், எங்களிடம் விளக்கம் பெறாமல், நேரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளன.

இம்மனுக்களை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்.

சேலம் மாநகராட்சி தரப்பில் ஆஜரான, சிறப்பு பிளீடர், திவாகர், ''தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள், தங்கள் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை. அதனால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

அபராதம் விதிப்பதற்கு முன், அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்பதால், மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மனுதாரர்கள், நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

பாதிப்பு
மனுதாரர்களும், தங்கள் தரப்பு விளக்கத்தை, உடனடியாக அளிக்க வேண்டும்; அளிக்கவில்லை என்றால், அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து, புகைப்படங்கள், வீடியோ எடுத்து, தங்கள் தரப்பு நிலையை, மாநகராட்சி உறுதி செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவினால், நோயாளிகள் மட்டுமல்லாமல், மருத்துவமனை உதவியாளர்கள், பணியாளர்கள் என, அனைவரும் பாதிக்கப்படுவர்.
எனவே, மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு உடனடியாக, தண்ணீர் வினியோகம் வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு, அரசு மற்றும் அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை, இந்த நீதிமன்றமும் பரிந்துரைக்கிறது.

 கொசுக்கள் உற்பத்தியாகும் முட்டைகளை தின்னும், 'மின்னுாஸ்' மீன்களை வளர்க்க வேண்டும்
 தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
 மேல்நிலை தண்ணீர் தொட்டி, தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்
இவை உள்ளிட்ட பரிந்துரைகளை கடைபிடிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., நடித்த, திருடாதே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரம் எழுதிய பாடலான, 'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பாடல், திருட்டுக்கு மட்டும் அல்ல, சுற்றுச்சூழலை மீறுபவர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பொருந்தும். 

ஏனென்றால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தார்மீக பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.

இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

news today 15.01.2025