Tuesday, November 14, 2017

 துவங்கியது!  சசி கும்பல் விசாரணை...


வருமான வரி சோதனையில் சிக்கிய சசி கும்பலிடம், கிடுக்கிப்பிடி விசாரணை, நேற்று துவங்கியது. ஜெ., உதவியாளர், பூங்குன்றன், பெங்களூரு புகழேந்தி, 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர், சிவக்குமார் மற்றும், 'ஜாஸ் சினிமாஸ்' தலைமை அதிகாரி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.

ஐந்து நாட்கள் விடாமல் நடந்த தேடுதலில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மூட்டை மூட்டையாக சிக்கிய, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், கல்லுாரி மாணவர்கள், வேலையாட்கள் பெயர்களில், கோடிக்கணக்கில் பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.


போலி நிறுவனங்கள் துவங்கி, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தை பதுக்கி, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்த, வருமான வரித்துறையினர், நவ., 9 காலையில், சென்னை, மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, பெங்களூரு, புதுச்சேரி, ஐதராபாத் என, 187 இடங்களில், 'ஆபரேஷன் கிளீன் மணி' என்ற, அதிரடி சோதனையை துவக்கினர்.

ஆயிரம் ஊழியர்கள்:

அதில், வரலாறு காணாத வகையில், ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள், ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டனர்.சென்னையில், ஜெயா, 'டிவி' மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள ஜாஸ் திரையரங்கங்கள் மற்றும் அவற்றின் தலைமை அதிகாரி விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அவரது சகோதரியும், இளவரசியின் மகளுமான கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், தினகரன் வீடு என, 111 இடங்களில் சோதனை நடந்தது.


அதேபோல, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் நடராஜன் வீடு, நாமக்கலில் வக்கீல் செந்தில் வீடு மற்றும் நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.இதில், சில இடங்களில் நடந்த சோதனை, நான்கு நாள் நீடித்தது.

வைரம் சிக்கியது

ஆனால், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா, 'டிவி', காஞ்சி மாவட்டம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், ஐந்தாவது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இந்த சோதனையில், சில இடங்களில், தங்கம், வைரம் நகைகள் சிக்கின. எனினும், வருமான வரித்துறையினர், 'நாங்கள், போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்த பணம், அதன் வாயிலாக, சசி கும்பல், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்த சொத்துகள் மற்றும்முறைகேடான பணப் பரிவர்த்தனையை தான் முக்கியமாக விசாரிக்கிறோம்' என்றனர்.
அவர்கள் குறிவைத்த படியே, ஐந்து நாள் சோதனையில், ஏராளமான, போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வாங்கி குவித்த சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர். அவை அனைத்தும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மதிப்பிடும் பணிகளில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவேக் உள்பட நால்வரிடம்...

இந்நிலையில், சோதனைக்கு உள்ளான, 20 முக்கிய நபர்களுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதில், முதல் கட்டமாக, நேற்று மிடாஸ் ஆலை சிவகுமார், பெங்களூரு புகழேந்தி, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி விசாரணைக்கு, அடுத்தடுத்து ஆஜராகினர்.
அவர்களை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில், இளவரசி மகன் விவேக், வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அப்போது, மீண்டும் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்களையும், விவேக்குடன் சேர்த்து வைத்து, ஒரே அறையில், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Advertisement


அதில், எந்தெந்த போலி நிறுவனங்கள் பெயரில், எங்கெங்கு யார் பெயரில் முதலீடுகள்
செய்யப்பட்டுள்ளன; போயஸ் இல்லத்தில் மிரட்டி எழுதி வாங்கப்பட்ட சொத்துகள் போன்றவற்றை விசாரித்தனர். இந்த சோதனை, இரவு, 10:00 மணி வரைநீடித்தது.

மாணவர்கள் கணக்கில்...

தற்கிடையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மன்னார்குடியில், செங்கமலத்தாயார் கல்லுாரியில் படித்த மாணவர்கள் கணக்கில், பல கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்தும், திவாகரனிடம் விசாரிக்க உள்ளனர். இதேபோல், உதவியாளர்கள், வேலையாட்கள், டிரைவர்கள் பெயரில், கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது குறித்தும், விசாரணை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணபிரியா, கலியபெருமாள், பாஸ்கரன், பிரபா, அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம், இன்று விசாரணை நடக்கவுள்ளது. அதன்பின், முழு விபரங்கள் வெளியாகும்.

மிடாஸில் தொடரும் சோதனை

தமிழகம் முழுவதும் நடந்த வரித்துறை சோதனை முடிந்தாலும், மிடாஸ் மதுபான ஆலையில், நேற்று இரவுக்குப் பிறகும் சோதனை தொடர்ந்தது. ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. அங்கு, முக்கிய ஆவணங்கள் இருக்கக்கூடும் என்பதால், தொடர் விசாரணை நடைபெறுகிறது.

வாக்குமூலம் சரிபார்ப்பு

சென்னை, அலுவலகத்தில் ஆஜரான விவேக் உள்ளிட்ட நான்கு பேர், அவரவர் வீடுகளில் வாக்குமூலம் அளித்திருந்தனர். அதை, உயர் அதிகாரிகள், நேற்று சரிபார்த்தனர். வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மதிப்பை உறுதிப்படுத்தவே, இந்த குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வடிவேலு போல போஸ்


சென்னை, வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரான பூங்குன்றன், சிவகுமார் போன்றோர், முகம் காட்டாமல் வந்து சென்றனர். ஆனால், கர்நாடக சிறையில், ஜெ., மற்றும் சசிக்கு உதவி செய்த, பெங்களூரு புகழேந்தி, வடிவேலு பாணியில் போஸ் கொடுத்தார். சிரித்த முகத்துடன், 'என்னிடம் ஒன்றும் இல்லை' என, பேட்டி அளித்தார். மற்றவர்களிடம், அதிகமாக இருப்பதை சூசகமாக உணர்த்தி சென்றார்.

ஒரு நிறுவனம்: 10 வங்கி கணக்கு

வரித்துறையினர், சசி கும்பலின், 50 நிறுவனங்களில் நடந்த பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், சில நிறுவனங்களில் நடந்த பணப்புழக்கம், பெரும் புதிராக உள்ளது. ஒரு சில நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக, பரிவர்த்தனை மேற்கொண்டி ருந்ததும் தெரிய வந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...