Friday, November 10, 2017

நல்லியல்புகளைப் போற்றுவோம்!


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 10th November 2017 01:37 AM 
மனிதர்கள் ஒருவரையொருவர் எள்ளி நகையாடுவது, கேலி செய்தல், நையாண்டி செய்தல், மற்றவர்களைப் போல் நடித்துக் காட்டுதல் போன்றவை சர்வ சாதாரணமாகி விட்டது. அவ்வாறு செய்வது மற்றவர்களைப் புண்படுத்தும் என்பதை உணராதவர்கள் மட்டுமல்ல, தெரிந்தும் கூட சிலர் இதனையே வேலையாக வைத்துள்ளனர். 
திரைப்படங்களில் நகைச்சுவை என்கிற பெயரில் நிறம், உயரம், உடல் பருமன் ஆகியவற்றைக் குறித்து கேலி, கிண்டல் செய்யும் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. இத்தகைய காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கும் மக்களின் ரசனையை என்னவென்று சொல்வது?
பெரியவர்களின் தவறான வழிகாட்டுதலால் வீட்டில் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என்று தொடங்கும் கேலி, நக்கல் போன்றவை பள்ளியிலும் தொடர்கிறது. ஒருவரின் உருவத்தைக் கேலி செய்பவர்கள் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று நினைப்பதாலும், அடுத்தவர்களைப் பற்றி மட்டமாக எண்ணுவதாலும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். சுற்றி இருப்பவர்கள் சிரித்துவிட்டால் போதும், இவர்களுக்கு உற்சாகம் பீறிடுகிறது.
மாறுகண், திக்குவாய், வழுக்கைத் தலை போன்ற சிறு குறைகளுடன் இருக்கும் சிலரைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தகைய குறைகள் உள்ளவர்கள் இயல்பிலேயே மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதற்குத் தயக்கம் காட்டுவர். கேலி செய்யும் மக்களால் இவர்கள் தன்னம்பிக்கை இழந்து இன்னும் துவண்டு போய்விடுவர். அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, விசேஷ நிகழ்ச்சிகள் என்று எல்லா இடங்களிலும் உருவத்தை வைத்து ஏளனம் செய்வது நடைபெறுகிறது. 
ஏளனம் செய்பவர்கள் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்காததுடன், பிறர் துன்பத்தில் இன்பம் காணும் மோசமான புத்தி உடையவர்கள் என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட மக்களை அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அந்த இடத்திலேயே யாராவது ஒருவர் கண்டித்தால், அடுத்த முறை கேலி செய்யும்முன் யோசிப்பார்கள். 
ஒருமுறை இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியின் தாய், 'என் குழந்தை மாநிறமாக இருப்பதால் பக்கத்து இருக்கை மாணவன், நீ கருப்பு என் அருகில் உட்காராதே என்று சொல்கிறானாம். பள்ளிக்கே செல்ல மாட்டேன் என்று சொல்பவளை சமாதானப்படுத்திதான் அனுப்பி வைக்கிறோம்' என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார். பின்னர் நான் அந்த மாணவனை என் அறைக்கு அழைத்து அறிவுரை கூறினேன். ஆனால், இன்றுவரை பெற்றோரிடமிருந்து இதே காரணத்திற்காக அவ்வப்பொழுது புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு வீடுதான் முதல் பள்ளிக்கூடம். தாயும், தந்தையுமே முதல் ஆசான். குழந்தைகளுக்குப் புரியும் வயது வரும்பொழுது நல்ல விஷயங்களை அவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எடுத்துச்சொல்ல வேண்டும். இன்னும், அவர்கள் முன்னிலையில் பிறரிடம் பேசும் சந்தர்ப்பங்களில், ஒருவரின் அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில், 'குண்டாக இருப்பாரே, கருப்பாக இருப்பாரே, கத்தரிக்காய்க்கு கை, கால் முளைத்தது போல் இருப்பாரே' என்று கண்டிப்பாகச் சொல்லக் கூடாது. உறவினர்களைக் குறிப்பிடும்பொழுது கூட, உன் குண்டு சித்தப்பா, நெட்டை மாமி, வழுக்கைத் தலை மாமா என்று சொல்லும்பொழுது பெற்றோரோ குழந்தைகளுக்குத் தவறான முன்னுதாரணம் ஆகிவிடுகிறார்கள். 
இதற்குப் பதிலாக, முகம் முழுக்கச் சிரிப்பாக இருப்பாரே, எல்லோருக்கும் ஓடி, ஓடி உதவி செய்வாரே, ருசியாக சமைப்பாரே என்று மற்றவர்களின் நல்லியல்புகளைச் சொல்லி மனிதர்களை அடையாளப் படுத்தினால், குழந்தைகள் ஒருபோதும், யாரையும் உருவத்தை வைத்து ஏளனம் செய்யமாட்டார்கள்.
பொதுவாக அழகான தோற்றம் உடையவர்களைப் பார்த்து 'நல்ல பர்சனாலிட்டி உள்ள ஆள்' என்று கூறுவது தவறான வார்த்தைப் பிரயோகமாகும். ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி என்பது ஒருவரது அருங்குணங்களையும், ஆளுமைப்பண்புகளையுமே குறிப்பதாகும், புற அழகை அல்ல. 
வடிவு கண்டு யாரையும் இகழ்தல் கூடாது என்பதை திருவள்ளுவர் அழகாகக் கூறியுள்ளார். புற அழகு அழிந்துவிடக் கூடியது, நம்முடைய குணநலன்களே நாம் மண்ணை விட்டு மறைந்தாலும், இவ்வுலகில் வாழக்கூடிய மக்கள் நம்மை நினைவுகூர்வதற்குக் காரணமாக அமையும் என்று குழந்தைகளுக்குப் புரிய வைப்பதால், அவர்கள் மற்றவர்களின் புற அழகைக் கேலி செய்யாததுடன், மற்றவர்களால் அவர்கள் கேலி செய்யப்பட்டாலும் அதற்காகத் துவண்டுவிடவும் மாட்டார்கள். 
வீட்டில் மட்டுமின்றி பள்ளிக்கூடத்திலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பட்டப்பெயர் சூட்டி அழைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஏளனப் பேச்சுகளால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். தாங்கள் குறை உடையவர்கள், தங்களால் எதுவும் சாதிக்க முடியாது என்ற நினைப்பு அவர்களை வாழ்க்கையில் உயர விடாது. இப்படிப்பட்ட மனப்பாங்கை வளர்த்துக் கொண்டவர்களுக்குத் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டவேண்டும்.
உயரம் குறைந்தவர்களும், மாநிறம் கொண்டவர்களும், மாற்றுத் திறனாளிகளும் சாதனையாளர்கள் பட்டியலில் நிறைந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
மற்றவர்களின் கேலிப் பேச்சுகளுக்கு ஆளானவர்கள், மலை ஏறுபவர்கள் கயிறைப் பற்றிப் பிடித்து, விடாமுயற்சி செய்து சிகரம் தொடுவதைப் போல ஏளனம் செய்பவர்களின் வார்த்தைகளையே மலையேறுவதற்கான கயிறு போல எண்ணி, விடாமுயற்சியுடன் அயராது உழைத்து, கேலி, கிண்டல் செய்தவர்கள் வியக்கும் வண்ணம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும்.
 

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...