Thursday, November 9, 2017


அசுத்தத்தை மறுபடியும் மார்பில் பூசுவதேன்? 


By தி. இராசகோபாலன்  |   Published on : 09th November 2017 01:36 AM  
சமுதாயமும் நம் சரீரத்தைப் போன்றதுதான்! வயதான ஒரு சரீரத்தில் ஏற்பட்ட ஒரு நோயைக் குணப்படுத்திவிட்டு வருவதற்குள், அடுத்த பக்கத்தில் ஒரு நோய் தோன்றும். அதுபோல சமுதாயத்தில் மதக்கலவரத்தைத் தீர்த்துவிட்டு வருவதற்குள், சாதிக்கலவரம் தோன்றும். சாதிக்கலவரத்தைத் தீர்த்துவிட்டு வருவதற்குள் தொற்றுநோய் பிரச்னை தோன்றும். தேவதாசி முறைமை ஏற்படுத்தியிருக்கும் புண் புற்றுநோயைப் போன்ற புண்ணாகும். ஒரு பக்கத்தில் அடைத்தால், மறுபக்கத்தில் பொத்துக்கொண்டு வரும்.
அண்மையில் ஆந்திரா மற்றும் திருவள்ளூரை அடுத்துள்ள சித்தூர் மாவட்டங்களில் 'மாத்தம்மா' கோயிலுக்குப் பெண்களை நேர்ந்து விட்டிருக்கின்றனர். அப்படி விடப்பட்ட பெண்களுடைய ஆடைகளை ஐந்து வயதுச் சிறுவர்களை விட்டு அவிழ்க்கச் செய்திருக்கின்றனர். பிறந்த மேனிக்கு அப்பெண்கள் அங்கேயே விடப்படுகின்றனர். அப்படி விடப்பட்ட பெண்கள் கோயிலின் பொதுச் சொத்தாகக் கருதப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கோயில் வளாகத்திலேயே அப்பெண்கள் உறங்க வேண்டும். பெற்றோர்களிடம் திரும்பி வர முடியாது. தேசிய மனித உரிமை ஆணையம் இதனை, ஓர் அறிக்கையாகவே தந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், 22 மண்டலங்களில் புத்தூர், நகரி, நாகலாபுரம், பிச்சாட்டூர், கே.வி.பி. புரம், ஸ்ரீ காளஹஸ்தி, எர்பேடு, தொட்டம்பேடு, பி.என். கந்த்ரிகா, நாராயணவனம் ஆகிய இடங்களில் இவ்வழக்கம் இருக்கிறது. மேற்கு மண்டலங்களான பாபிரெட்டிபள்ளி, தவனம்பலே, பங்காருபாலெம் ஆகிய இடங்களையும் இவ்வழக்கம் ஆக்கிரமித்திருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் இவ்வழக்கம் சம அளவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டிலிருந்து சித்தூர் மாவட்டத்தில் ஏழு பேர் எயிட்ஸ் நோயால் மடிந்திருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் 'மாத்தம்மா'க்களாக உள்ளனர். அதில் 363 பெண் பிள்ளைகள் 4 வயதிலிருந்து 15 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்து விடுதலுக்கு எதிரான சட்டம், இந்த மாவட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
1926-இல் சென்னை மாகாண சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, முதன் முதலில் தேவதாசி முறைக்கு எதிராகப் போர்வாளைத் தீட்டினார். 1929 வரை வாதாடி, போராடி 'டெடிகேஷன் பிரிவென்ஷன் ஆக்ட்' (Dedication Prevention Act) எனும் பெயரில் தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றினார். என்றாலும், 1947-ஆம் ஆண்டுதான் சட்ட விதி எண்.31 இன்படி தேவதாசி ஒழிப்புச்சட்டம் அமுலுக்கு வந்தது. 
கோயிலுக்குப் பெண்களை நேர்ந்துவிடும் வழக்கத்தைக் கர்நாடக அரசு 1982-ஆம் ஆண்டு தடை செய்தது. ஆந்திரப்பிரதேசம் 1987-ஆம் ஆண்டுதான், தேவதாசி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. என்றாலும், புற்றுநோய் பொத்துப் பொத்துக்கொண்டு வருவதுபோல், சித்தூர் - திருவள்ளூர் எல்லையோரங்களில் மாத்தம்மா வடிவத்தில் புற்றுக்கட்டிக் கொண்டுதானிருக்கிறது, தேவதாசி முறைமை.
அதிகாலையில் எழுந்திருந்து கோயிலுக்கு அலகிட்டு, மெழுக்குமிட்டு, கோலமிட்டுத் தூப தீபங்கள் ஏற்றுவதற்காகக் கன்னிப்பெண்கள் நேர்ந்துவிடப்பட்டனர். தேவதாசி என்ற சொல்லுக்கு 'இறைப்பணி செய்யும் பெண்' என்பது பொருள். கோயிலுக்குத் தொண்டு செய்வதற்கென்று பெரும்பாலும் உருத்திரகணிகையர் குலத்திலிருந்தே தேர்ந்தெடுத்தனர். இதனை அப்பரடிகள் 'அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர், உரிமையில் தொழுவார் உருத்திரப் பல்கணத்தார்' எனப் பாடுவார், தேவாரத்தில்! 
மணிவாசகர் தம் திருவெம்பாவையில், 'கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்' என அவர்களைக் குறிப்பார். பிணாப்பிள்ளைகள் என்றால், 'பெண் பிள்ளைகள்' எனப் பொருள். அவர்களுடைய நேரிய தூய்மை வாழ்க்கையைக் குறிக்க, 'கோதில் குலத்து அரன் தன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்' என்றார். சுந்தரமூர்த்தி நாயனார் மணம்புரிந்த பரவை நாச்சியார், உருத்திர கணிகைக் குலத்தைச் சேர்ந்தவரே ஆவார்.
தேவதாசி முறைமை சோழர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் நடைமுறைக்கு வந்தது எனலாம். முதலாம் இராஜராஜசோழன் தாம் படையெடுத்துச் சென்ற நாடுகளை வென்ற பிறகு, அந்நாட்டுப் பெண்களை தஞ்சைக்குக் கொண்டு வந்தான். 
இப்படிக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் அவர்களைத் தங்களுடைய அந்தப்புரங்களுக்குக் கொண்டு செல்வதுதான் வழக்கம். ஆனால், அருண்மொழிச் செல்வராகிய இராஜராஜசோழன் பகைப்புலத்துப் பெண்களை தஞ்சைப் பெருவுடையாருக்குத் தொண்டு செய்வதற்கென்று அர்ப்பணித்தான்! தஞ்சைப் பெருவுடையாருக்குத் தொண்டு செய்ய அர்ப்பணிக்கப்பட்ட பெண்களுக்கு 'வேளத்துப் பெண்டிர்' எனவும் பெயரிட்டான். 
அடுத்து வந்த காலத்தில் அவர்கள் 'தளிச்சேரி பெண்டிர்' எனவும் அழைக்கப்பட்டனர். 'தளி' என்ற சொல்லுக்குக் கோயில் என்பது பொருள்.
'தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தெற்குப் பக்கத்தில் வாழ்ந்த அப்பெண்களுக்குத் 'தெற்குத்தளிச்சேரி பெண்கள்' என்றும், வடக்குப்புறத்தில் வாழ்ந்த பெண்களுக்கு 'வடக்குத் தளிச்சேரி பெண்கள்' என்றும் பெயர். கோயிற் பணிகளுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட பெண்களுக்குச் சோழ அரசு முத்திரையும் (இலச்சினை) பொறித்தது. சைவக் கோயிலில் தொண்டாற்றும் தேவதாசிகளுக்குச் சூல இலச்சினையும், வைணவக் கோயில்களில் பணியாற்றும் தேவதாசிகளுக்குச் சக்கரச் சின்னமும் பொறிக்கப்பட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு எட்டாவது: கல்வெட்டு எண்.169).
ஆலயத்திற்குள் இருக்கும் கோகுலத்திற்கு ஆன்மிக அன்பர்கள் பசுக்களை வாங்கித் தானம் கொடுப்பது போல், பக்தி மேலிட்டால், பெண்களை வாங்கியும் கோயிற் பணிக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இராஜராஜன் காலத்தில் ஒருவன் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கி, திருவாலங்காட்டு இறைவனுக்குத் தேவரடியாராக அர்ப்பணித்த செய்தி, அவ்வூர்க் கல்வெட்டால் வெளிப்படுகிறது. மன்னராட்சிக்குப் பிறகு திருக்கோயில்களில் நிலவுடைமைக்காரர்களின் ஆதிக்கமும், ஜமீன்தார்களின் ஆதிக்கமும் மேலோங்கியது. கோயிற் பணிகளில் ஈடுபட்டிருந்த தேவரடியார்கள் நடனம், இசை போன்ற லலித கலைகளிலும் வல்லவர்களாக இருந்ததால், நிலவுடைமைக்காரர்கள் அவர்களை சுகபோகத்திற்கும் ஏகபோகத்திற்கும் குத்தகை எடுத்திருந்தனர். அதுதொட்டு, தேவனுக்குத் தொண்டு செய்ய வந்த தேவரடியார்கள், தேவதாசிகளாகவும் மாறத் தொடங்கினர்.
கோயிற்பணிக்கென்று தம்மை ஒப்படைத்துக்கொண்ட தேவதாசியர் குலத்தில் வம்சாவளி தோன்றியதால், பொட்டுக் கட்டும் பழக்கமும் வழக்கத்திற்கு வந்தது. 
ஒரு தேவதாசியின் மகள், தேவதாசியாக மாற்றப்படுகிறாள் என்பதன் அடையாளம்தான் 'பொட்டுக் கட்டுதல்' ஆகும். பொட்டு என்பது திருமாங்கல்யத்திற்கு இணையான ஒன்றாகும். ஒரு பெண் தேவதாசிக்குப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவள் தேவதாசி ஆக முடியாது. முறைப்படி பொட்டுக்கட்டி, அவளைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலமே அவள் தேவதாசி ஆவாள்.
இவ்விதம் பொட்டுக்கட்டும் சடங்கு அவள் தொண்டாற்றும் திருக்கோயிலில் மட்டுமே நிகழ்த்தப்பெறும். தேவதாசியாகும் பெண்ணுக்கு அவள் குடும்பத்தைச் சார்ந்த வயதான பெண்மணியால் கோயிலில் மூலவர் சந்நிதியில் இச்சடங்கு நிகழ்த்தப்படும். சில சமயங்களில் கோயிலின் அர்ச்சகராலும் இச்சடங்கு நிகழ்த்தப்படுவது உண்டு. இதனால், அப்பெண் இறைவனுக்குத் தாலி கட்டிக் கொண்டவள் என அர்த்தமாகும். இச்செய்தி, பெருந்தனக்காரர்களுக்கும், நிலச்சுவான்தாரர்களுக்கும், பெற்றவளால் தெரிவிக்கப்படும்.
'தேவதாசி ஒழிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்' என்று நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பேயே மகாத்மா காந்தியடிகள் தம் ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார். பெண்ணினத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அபாயங்களை நன்குணர்ந்த ஒரு சான்றோர், ஆங்கில ஆட்சிக் காலத்தில் ஒரு பெரிய பதவியில் இருந்தார். அவர் பெயர் தாதாபாய். 
பிரிட்டிஷ் இந்திய அரசுச் செயலாளராக இருந்த தாதாபாய், 'பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்' எனும் பெயரில் 18.09.1912 அன்று சட்ட வடிவை அறிமுகம் செய்தார். 1947-ஆம் ஆண்டு தேவதாசி தடுப்புக் குழுவின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிந்துரையினால், முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் அதனைச் சட்ட வடிவில் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
என்றாலும், தேவதாசி முறை பூவும் பொட்டோடும் பாமர மக்களிடத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தேவதாசி முறையின் தேய்மானமே இன்றைய மாத்தம்மா முறைமை! 'மாதிகா' எனும் சமூகத்தினரிடம்தான் 'மாத்தம்மா' எனும் முறைமை இன்றும் நூற்றுக்கு நூறு வெற்றிகரமாக நடைபோடுகிறது! மாதிகா இனத்தவர், கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்கள். இவர்கள் இனத்திலிருந்துதான் 2000-த்துக்கும் மேற்பட்டவர்கள் கோயிலுக்கு நேர்ந்துவிடப் பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 19 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டோர் 400 பேர்கள் இருக்கிறார்கள். 15 வயதுக்குக் குறைவான சிறுமியர் 350 பேர்கள் இருக்கிறார்கள். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக, ஆந்திர அரசுகளிடமிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தகவலைக் கேட்டிருக்கிறது.
தேவதாசி என்ற சொல் இந்தியாவில் பலவிடங்களில் பலவிதமாக வழங்கப்படுகிறது. ஆந்திரப் பகுதியில் மாதங்கி அல்லது விலாசினி. 
மராட்டியத்தில் பாசவி, கர்நாடகாவில் சூலி அல்லது சானி, ஒடிசாவில் மக, உத்தரப் பிரதேசத்தில் பாமினி, விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் வட்டாரங்களில் பார்வதி எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டாலும், தொழில் ஒன்றுதான்!
குழந்தைகளும் கோயில்களும் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவை ஆகும். ஆனால், இன்றைக்கு ஒன்றை வைத்தே மற்றொன்றிற்குக் கொள்ளி வைக்கிறார்கள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

    No comments:

    Post a Comment

    Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

    Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...