Monday, January 15, 2018

ஒன்பது வயதிலேயே பெரியார் முன்பு பேசியவள் நான்!'  - விருது சர்ச்சையை விளாசும் வளர்மதி #VikatanExclusive

  மிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த அறிஞர்களுக்கு தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில். தந்தை பெரியார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி. ' ஜெயலலிதாவுக்காக தீச்சட்டி ஏந்திய வளர்மதிக்கா பெரியார் விருது?' என சமூக ஊடகங்களில் சிலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதியிடம் பேசினோம். 

தமிழக அரசின் விருது அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``சிறுவயதில் இருந்தே பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவள் நான். ஒன்பது வயது குழந்தையாக இருந்தபோது, என்னுடைய சொந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் கலந்துகொண்டார். என்னுடைய தந்தையின் முயற்சியால், அவர் முன்னால் மேடையில் பேசியிருக்கிறேன். அப்போது பெரியாரைச் சுட்டிக்காட்டி, ' நீயும் இந்த தாத்தா மாதிரி பெரிய ஆளா வரனும்' எனச் சொன்னார் என் அப்பா. அவர் இறுதிவரையில் திராவிட இயக்கக் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். எனக்கு இப்படியொரு விருது கிடைக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. மிகப் பெரிய தலைவராக பெரியாரை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். தி.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்து பின்னர் அ.தி.மு.கவில் இணைந்து இத்தனை ஆண்டுகாலமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூன்று பெரும் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். திராவிட இயக்கத்துக்காக உழைத்த காரணத்துக்காக அம்மாவின் அரசு சார்பாக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த விருதை எனக்கு அறிவித்திருக்கிறார்". 

இப்படியொரு விருது கிடைக்கும் என முன்னரே எதிர்பார்த்தீர்களா? 

``இல்லை. பெரியார் விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை." 

பெரியார் கொள்கைகள்குறித்து உங்களுடைய பார்வை என்ன? 

`` பெண்களின் முன்னேற்றத்துக்காக பெரியார் செய்த சமூகசீர்திருத்தம் மிக முக்கியமான ஒன்று. பெண்ணுரிமைக்காக அவர் உழைத்த உழைப்புதான் இன்று பல துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கக் காரணம். அவருடைய கொள்கைகள் எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். பெண்ணுலகம் இந்தளவுக்கு உயர்ந்த நிலையை அடைந்ததற்கு அடிப்படை ஆதாரம் பெரியார்."

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் தீச்சட்டி ஏந்தினீர்கள். இந்தப் படங்களைப் பதிவிட்டு, இவருக்கா பெரியார் விருது என சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளதே? 

`` எவ்வளவு பெரிய கொள்கைகளைத் தாங்கியவர்களாக நாம் இருந்தாலும், வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஆண்டவனைத்தான் கும்பிடுவோம். ' என் அப்பா, அம்மா நல்லா இருக்கனும்' என வேண்டிக்கொள்வோம். அப்படித்தான் அம்மாவுக்கும் பிரார்த்தனை செய்தோம். இது சாதாரண நிகழ்வுதான். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் அனைத்தையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் யாரைத்தான் விமர்சனம் செய்யவில்லை. விமர்சனங்களை எப்போதுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எதாவது உயர்வு வந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா என அனைவருமே விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள்தான். இன்று வரையில் அரசியலில் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் விமர்சனத்துக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்."

சரியான நேரத்தில் இந்த விருது கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா? 
`` அப்படிச் சொல்லத் தெரியவில்லை. திராவிட இயக்கத்தில் நான் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த பரிசாக இதைப் பார்க்கிறேன். 1967-ல் இருந்து தி.மு.கவில் தீவிர பேச்சாளராக இருந்தேன். அதன்பிறகு தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த பிறகு, அவருடைய தலைமையில் அ.தி.மு.கவில் இணைந்தேன். இத்தனை வருட உழைப்புக்கு விருது கிடைத்திருக்கிறது. பெரியார் விருது என்பது மிகப் பெரிய விஷயம். சும்மா இருந்தால் யாராவது விருது கொடுப்பார்களா? பொதுநல நோக்கோடு பாடுபடாதவர்களுக்கு விருது கொடுத்தால் விமர்சிக்கலாம். நெற்றில் திருநீரும் பொட்டும் வைத்துக்கொள்வதால் மட்டும் திராவிட இயக்கக் கொள்கைகளை இழுத்து மூடிவிட முடியுமா? பெரியாரைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர் கருணாநிதி. இன்று, 'அவர் நன்றாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆலயத்துக்குச் செல்கிறார்கள். அதற்காக பெரியார் கொள்கையில் இருந்து தி.மு.க விலகிவிட்டது எனச் சொல்ல முடியுமா?"

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...