சொந்த செலவில் 22 முதியவர்களை விமானத்தில் அழைத்து சென்ற விமானி
Added : அக் 08, 2018 23:32
ஹிசார் : ஹரியானா மாநில கிராமத்தை சேர்ந்த, 70 வயதுக்கு மேற்பட்ட, 22 முதியவர்களை, விமானி ஒருவர், தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றதை, கிராம மக்கள் பாராட்டிஉள்ளனர்.
ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம், சாரங்பூர் கிராமத்தை சேர்ந்தவர், விகாஸ் ஜியானி, 22. தான் விமானியானால், கிராமத்தில் உள்ள முதியவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக, சிறுவயதில், விகாஸ் ஜியானி கூறியிருந்தார். சமீபத்தில், விமான பயிற்சி முடித்த விகாஸ், 'இண்டிகோ' நிறுவனத்தில், விமானியாக சேர்ந்தார்.
இதையடுத்து, சாரங்பூர் கிராமத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட, 22 தாத்தா, பாட்டிகளை, தன் சொந்த செலவில், டில்லியில் இருந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு, 'இண்டிகோ' விமானத்தில் அழைத்துச் சென்றார். மேலும், அமிர்தசரசில் உள்ள பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் மற்றும் வாகா எல்லையில் ராணுவத்தினரின் அணி வகுப்பை பார்ப்பதற்கும், அவர்களை அழைத்துச் சென்றார். அவரது இந்த செயலை, கிராம மக்கள் பாராட்டினர்.
இது வரை விமானத்தை அருகில் பார்த்திராத, முதியவர்களில் ஒருவரான அமர்சிங் கூறியதாவது: சிறு வயதில் கூறுவதை, பெரும்பாலோர் நிறைவேற்றுவதில்லை. ஆனால், விகாஸ், எங்களை விமானத்தில் அழைத்துச் சென்றதுடன், பல இடங்களை சுற்றி காண்பித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment