Tuesday, October 9, 2018

தசரா, புஷ்கர விழா எதிரொலி: விடுதிகள், 'ஹவுஸ் புல்'

Added : அக் 08, 2018 22:46

திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கரவிழா, குலசை தசரா விழாவையொட்டி நெல்லை, திருச்செந்துாரில் உள்ள விடுதிகள், 'ஹவுஸ் புல்'லாகி வருகின்றன.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி நதியின் மகாபுஷ்கர விழா வரும், 11ல் துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. 

இவ்விழா, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். விழாவில் பாபநாசம் படித்துறையில் துவங்கி, புன்னகாயல் வரை உள்ள, 149 முக்கிய படித்துறைகளில் பக்தர்கள் நீராடவும், வழிபாடு செய்யவும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருப்பினும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வேலைகள் எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் உறுதி செய்ய, காவல்துறை சார்பில் பாபநாசம், அருகன்குளம் படித்துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, ஆலோசனை செய்யப்பட்டன.விழா துவங்க இரு நாட்களே உள்ள நிலையில், வடமாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக நெல்லை, பாளை, பாபநாசம், அம்பை போன்ற நகரங்களில் உள்ள விடுதிகள் ஆன்லைனில், 'புக்' செய்யப்படுகின்றன.

வட மாநிலங்களைச் சேர்ந்த ஆன்மிக வாதிகள், மடாதிபதிகள், மதகுருக்கள் மற்றும் பக்தர்கள் புக்கிங் செய்துள்ளனர். இதனால், இங்குள்ள முக்கிய விடுதிகள், அனைத்தும் நிரம்பி விட்டன. இதை பயன்படுத்தி, விடுதி உரிமையாளர்கள் அதிக கட்டணமும் வசூலித்து வருகின்றனர்.இதுபோல், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, நாளை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.மைசூரு தசரா விழாவிற்கு, அடுத்த படியாக, 11 நாட்கள் நடக்கும் இத்தசரா விழாவில், பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி வேடங்கள் அணிந்து கலந்து கொள்கின்றனர். தசரா விழாவையொட்டி, குலசேரன்பட்டினத்தில் உள்ள விடுதிகள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. தவிர, தனி தனி வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.தற்போதுள்ள வாடகையை விட, விடுதி, வீடுகளுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குலசை மட்டுமில்லாமல், அருகில் உள்ள உடன்குடி, நாசரேத், திருச்செந்துாரில் உள்ள விடுதிகளும் வேகமாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.



No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024