மகாளய அமாவாசை வழிபாடு : முன்னோருக்கு தர்ப்பணம்
Added : அக் 08, 2018 23:06
புரட்டாசி மகாளய அமாவாசையொட்டி, கடல், புண்ணிய நதிகள், நீர் நிலைகளில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.சென்னையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லுார், திருவான்மியூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி பூஜை செய்தால், முன்னோர் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசையான நேற்று, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி, தர்ப்பணம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராடினர். மடங்கள், சேவை அமைப்புகள் சார்பில், சாம்பார், தயிர், புளியோதரை, வடை, கூட்டு பொரியலுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜைக்கு, 1,000 -, 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
முன்னோருக்கு தர்ப்பணம் : கன்னியாகுமரியில், நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் குவியத் துவங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில், புனித நீராடினர். பின், கடற்கரையில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர்.திருமூர்த்திமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளிய அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று பாலாற்றின் கரையில், ஏராளமானோர் திதி கொடுத்தனர். காலை முதலே, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மழை காரணமாக, மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு, பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பாலாற்றிலேயே பக்தர்கள் புனித நீராடினர்.கூடுதுறை: ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் உள்ள, இரட்டை விநாயகர் கோவில் படித்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. இதனால், தென்னகத்தின் காசி, பரிகார தலம் என பெயர் பெற்றுள்ளது.நேற்றைய மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, பரிகாரம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும், பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
- நமது நிருபர் குழு -
No comments:
Post a Comment