Sunday, October 14, 2018

ஓட்டு போட பணத்தை பெற்றுக்கொண்டு ‘5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு கொடுத்து விடாதீர்கள்’ மேட்டூரில் கமல்ஹாசன் பேச்சு




ஓட்டு போட பணத்தை பெற்றுக்கொண்டு உங்களின் 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு கொடுத்து விடாதீர்கள் என்று மேட்டூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

பதிவு: அக்டோபர் 14, 2018 04:30 AM
சேலம்,

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார். இதன்படி சேலம் மாவட்டம் ஓமலூருக்கு நேற்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வந்தார். பின்னர் அவர், ஓமலூர் பஸ் நிலையம் பகுதியில் காரில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுடனான பயணத்தில் நேற்றைய தினம் சிறிய ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று வந்தேன். அப்போது, பொதுமக்கள் என்னிடம் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையும், பெரும்பாலான பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே குடிநீர் வருவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது எல்லா ஊர்களிலும் டாஸ்மாக் கடைகளை திறந்து டாஸ்மாக் தண்ணீர் எப்போதும் கிடைக்கிறது. எந்த தண்ணீர் கிடைக்க வேண்டுமோ? அது மக்களுக்கு கிடைப்பதில்லை. மக்களுக்கு எந்த தண்ணீர் தேவை? என்பது தமிழக அரசுக்கு தெரியவில்லை. எது தேவையில்லாத தண்ணீரோ அது தடையின்றி கிடைக்கிறது. அதனால், எது வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மின்தடையால் கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மாட மாளிகை, கூட கோபுரம் கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை. தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் நிறைய குறைகள் உள்ளது.

மக்கள் தேவைகளை நிறைவேற்றாத அரசை அகற்றி மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும். மக்கள் நீதி மய்யத்தை நோக்கி இளைஞர்கள் வாருங்கள். பெரியவர்களுக்கு குழப்பம் இருக்கும். மக்களுக்கு யார் நல்லது செய்வார்களே அவர்களை நோக்கி வாருங்கள். மற்ற அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்கின்றனர். ஆனால், நான் எப்போதும் மக்களை சந்திப்பேன். இங்குள்ள பிரச்சினைகளை மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்களிடம் கூறுங்கள். அப்போது தான் தமிழகத்தில் உள்ள குறைகள் எனக்கு தெரியும். நாளை நமதே. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இதையடுத்து மேட்டூர் சதுரங்காடி பகுதியில் காரில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:- மேட்டூர் அணை இருந்தும் கூட மேட்டூருக்கு தண்ணீர் வினியோகம் சீராக இல்லை என்று பொதுமக்களே கூறி வருகிறார்கள். ஆதாரம் இருந்தும், செய்ய வேண்டியவர்கள், அவர்களுடைய வேலையை செய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொதுமக்கள் காசு, பணத்திற்கு அடிமையாக மாட்டோம் என வாக்குறுதியை அளிக்க வேண்டும்.

தேர்தலின் போது ஓட்டு போட பணத்தை பெற்றுக்கொண்டு உங்களின் 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு கொடுத்துவிடாதீர்கள். உங்களை பிச்சைக்காரர்களாக ஆக்குகிறார்கள். அந்த அவமான காசை நீங்கள் தொடக்கூடாது. கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள். அவர்கள் தரும் பணத்தைவிட பலமடங்கு பணத்தை நீங்களே சம்பாதிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் நிரம்பியுள்ள தண்ணீரை கமல்ஹாசன் பார்வையிட்டார். பின்னர் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கமல்ஹாசன் காரில் நின்றவாறு பேசியதாவது:-

இங்கு இருக்கும் கூட்டம் அன்பை வெளிப்படுத்துவதற்காக கூடிய கூட்டம். நீங்களும், நானும் கையசைத்து விட்டு சென்று விட கூடாது. உங்களிடம் ஒரு வலிமை உள்ளது. அது ஓட்டு வலிமை. அதை எக்காரணம் கொண்டும் பணத்துக்காக விற்று விடாதீர்கள். அது உங்கள் பையில் இருக்கும் பணத்தை எடுத்து கையில் கொடுத்து விட்டு பெருமளவில் கொள்ளையடிக்கும் வியாபாரம். அந்த வியாபாரம் சரியல்ல. இங்கு நிறைய பேர் நிறைய குறைகளை சொன்னார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வோம். அதற்கு நீங்கள் எனக்கு துணையாக இருக்க வேண்டும். இருப்பீர்களா?. உங்களை நம்பி தான் அரசியல் களத்தில் இறங்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கெங்கவல்லி அண்ணா சிலை முன்பு கமல்ஹாசன் பேசும் போது, இங்குள்ள மக்களில் இளம் வயது உடைய புதிய முகங்கள் அதிகம் தெரிகிறது. நீங்கள் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும். நீங்கள் கேள்வி கேட்டு விடுவீர்கள் என்ற பயத்துடன் வேலை செய்யும் சேவகன் வேண்டும். தலைவன் இல்லை. நீங்களே தலைவர்கள் தான். ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கு தெருவிளக்கு எரியவில்லை. சுவேதா ஆற்றில் மணல் கொள்ளை போகிறது என்று எங்களுக்கு தெரியும். அதை சரி செய்ய நல்ல ஆட்சியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் அயோத்தியாப்பட்டணத்தில் கமல்ஹாசன் பேசும் போது, இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாது எங்கள் மக்கள் நீதிமய்யம் தொண்டர்கள் மூலம் நான் அறிவேன். இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் கேட்க தவறி விட்டீர்கள். அதை கேட்க கூடிய தருணம் வந்து விட்டது. உங்கள் ஓட்டுகள் விலை மதிப்பில்லாது. அவை விலை போக விட மாட்டோம் என்று நீங்கள் வாக்குறுதி தர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

How twins evaded arrest for long time

How twins evaded arrest for long time TIMES OF INDIA NEW DELHI   25.09.2024  On Sept 21, a woman was purchasing fruits at Burari Chowk when ...