Sunday, October 7, 2018

கடையநல்லுாரில் திராட்சை சாகுபடி

Added : அக் 07, 2018 00:25




திருநெல்வேலி:விலை வீழ்ச்சி, விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், கடைய நல்லுாரில், 3,000 ஏக்கராக இருந்த திராட்சை சாகுபடி, தற்போது, 3 ஏக்கராக சுருங்கி விட்டது. 

திருநெல்வேலி மாவட்டத்தில், புளியங்குடி, எலுமிச்சை சாகுபடிக்கும், கடையநல்லுார், திராட்சை சாகுபடிக்கும் பெயர் பெற்றது. கடையநல்லுார், குமாந்தாபுரம் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன.இதமான கால சூழலும், ஆண்டிற்கு ஆறு மாதங்கள் பரவலாக பெய்யும் மழையாலும், இப்பகுதியில், 3,000 ஏக்கரில், திராட்சை சாகுபடி அமோகமாக நடந்தது.

திண்டுக்கல், வத்தலகுண்டுக்கு அடுத்தபடியாக கடையநல்லுாரில் சாகுபடியாகும் திராட்சை, பிற மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு சென்றன. ஒருமுறை, விளை நிலங்களில் வேலி அமைத்து, கம்பி சுற்றி, சாகுபடி செய்தால், ஆண்டிற்கு மூன்று முறை என, 18 ஆண்டுகள் வரை, விவசாயிகள் திராட்சை சாகுபடியில் பயன் அடைந்தனர். 

வறட்சி, விலை வீழ்ச்சி மற்றும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால், திராட்சை சாகுபடி படிப்படியாக குறைந்து, தற்போது, வெறும், 3 ஏக்கராக சுருங்கி விட்டது. 'மீண்டும் திராட்சை சாகுபடியில் சாதனை படைக்க, திராட்சை விவசாயிகளுக்கு தனியாக கூட்டுறவு சங்கம் அமைத்து கடன் வழங்கி, விலை நிர்ணயம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024