Sunday, October 7, 2018

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் கவர்னர் பேச்சால் திடீர் சர்ச்சை

:சென்னை ''முன்பு நடந்த, துணை வேந்தர்கள் நியமனத்தில், கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளது. தற்போது, தகுதி உள்ளவர்களை மட்டும் நியமிக்கிறேன்,'' என, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேசியது, அரசு வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

dinamalar 07.10.2018



சென்னை, தி.நகரில், பாரதிய சிக் ஷான் மண்டல் அமைப்பு சார்பில், உயர் கல்வி மேம்பாடு குறித்த, ஒரு நாள் கருத்தரங்கு, நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் பேசியதாவது: நவீன கல்வி, நம் பாரம்பரியத்தை காலாவதியாக்கி விட்டது. தற்போது, மெக்காலே கல்வி முறையை பின்பற்றுகிறோம். சுதந்திரத்திற்கு பின்,

ஏராளமான பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், நம்நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறையை, அவை கற்றுக் கொடுக்கவில்லை. கல்வியுடன் சமத்துவம், சமூக நீதி, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றையும், கற்றுத் தர வேண்டும்.

தமிழகத்திற்குகவர்னராக வந்தபோது, துணை வேந்தர்கள் நியமனத்தில், பல கோடி ரூபாய் பணம் கைமாறுவதாக கூறினர். முதலில், அதை நம்பவில்லை. பிறகு, உண்மை என அறிந்து வருத்தமடைந்தேன்; அதை மாற்ற நினைத்தேன். ஒன்பது துணை வேந்தர்கள், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இதில், தவறு நடந்ததாக, ஒருவரும் கை காட்ட முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னருக்கே அதிகாரம்: அமைச்சர் பதிலடி! :

''பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்தில், கவர்னருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் கூறினார்.தர்மபுரியில், கவர்னரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, நேற்று அவர் கூறியதாவது: துணை வேந்தரை, தமிழக அரசு நியமிப்பதில்லை. அவர்களை, கவர்னர் தான்நியமிக்கிறார். இதில், அரசுக்கோ, உயர் கல்வி துறைக்கோ, எந்த தொடர்பும் இல்லை. துணை வேந்தர்கள் நியமனத்தில், தேடுதல் குழு அமைப்பது மட்டும் தான், அரசின் வேலை. தேடுதல் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை, கவர்னர் நியமிக்கிறார். தேடுதல் குழு, மூன்று பேரை தேர்வு செய்து, கவர்னரிடம் சமர்ப்பிக்கும். அதன் விபரத்தை கூட, தேடுதல் குழு, அரசுக்கு தெரிவிப்பது இல்லை. அந்த மூன்று பேரையும் அழைத்து, கவர்னர் நேர்காணல் நடத்தி, ஒருவரை துணை வேந்தராக நியமிப்பார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், எதை மனதில் வைத்து, அவ்வாறு பேசினார் என்பது, எனக்கு தெரியவில்லை. அவரின் பேச்சு வியப்பாக உள்ளது. இவ்வாறு அன்பழகன் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024