மரண தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பிய பெண்
Added : அக் 14, 2018 00:46
தன் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த பெண்ணுக்கு, மரண தண்டனை நிறைவேற்ற, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஹரியானாவில், 2009ல், சோனம் என்ற பெண், 27, காதலன் நவீன் குமார், 28, என்பவனுடன் சேர்ந்து, தன் பெற்றோர், தம்பி, பாட்டி, சித்தப்பா மகன்கள் மூன்று பேர் என, ஏழு பேரை கொலை செய்ததாக, போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த, ரோதக் நகர நீதிமன்றம், இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த உத்தரவை, ஹரியானா உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இவர்கள் இருவருக்கும், வரும், 16ல் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தை அணுகிய நவீன் குமார், மரண தண்டனைக்கு இடைக்கால தடை பெற்றான்.இந்நிலையில், மரண தண்டனைக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், சோனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில், நவீன் குமாருக்கு மரண தண்டனை நிறைவேற்ற, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதேபோல், சோனமுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற, இடைக்கால தடை விதிக்க வேண்டும்.நவீன் குமார், சோனம் ஆகியோர், ஏழு பேரை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நேரடி சாட்சி இல்லை. இறந்தோரின் உறவினர்கள் கூறியதை அடிப்படையாக வைத்து, இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, சோனமுக்கு மரண தண்டனை நிறைவேற்ற, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment