Sunday, October 14, 2018

மலைக்க வைக்கும் வியாபாரம்: விஜய் படங்களில் முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’

Published : 13 Oct 2018 17:40 IST




விஜய் நடிப்பில் வெளியான படங்களின் விநியோக வியாபாரத்தில் ‘சர்கார்’ முதல் இடத்தை பிடித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

எப்போதுமே ஒரு படத்தின் வெளியீட்டுக்கு முன்பு, விநியோகஸ்தர்கள் மத்தியில் தங்களுடைய ஏரியாவின் விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவும். குறிப்பாக ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு சமீபத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போது இப்போட்டியில் ‘சர்கார்’ இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணம் ‘மெர்சல்’. தயாரிப்பாளருக்கு லாபமில்லை என்று தகவல் வெளியானாலும், அப்படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது.

மேலும், 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகி மக்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. முழுக்க அரசியல் சார்ந்த படம் என்பதும் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

தேனாண்டாள் நிறுவனத்திடமிருந்து சேலம் உரிமையை 7ஜி சிவா, கோயம்புத்தூர் உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ், திருச்சி - தஞ்சாவூர் உரிமையை எல்.ஏ சினிமாஸ், மதுரை உரிமையை ப்ரவீன் மற்றும் சென்னை உரிமையை அபிராமி ராமநாதன் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள். இவர்கள் கொடுத்திருக்கும் தொகை என்பது ஒவ்வொரு ஏரியாவுக்கும் விஜய்யின் முந்தைய படங்களின் தொகையை விட அதிகம் என்று முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

பட வெளியீட்டுக்கு முந்தைய வியாபாரத்தில், விஜய்யின் முந்தைய படங்களின் வியாபாரத்தை எல்லாம் விட பல மடங்கு அதிகம் ‘சர்கார்’ வியாபாரம். கண்டிப்பாக இப்படம் போட்டிருக்கும் பணத்தை எடுத்துவிடும் என்றும் நம்புகிறார்கள். காரணம், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களுடைய தொலைக்காட்சியில் அதிகமாக விளம்பரம் செய்து, மக்களை திரையரங்கிற்கு இழுத்துவிடுவார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களும் பிரம்மாண்டமான வெற்றி. இதனால் ‘சர்கார்’ மூலம் மக்களிடையே மட்டுமன்றி விநியோக வியாபாரத்தில் ஹாட்ரிக் அடித்திருக்கிறது படக்குழு என்று சொல்லலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024