Thursday, October 18, 2018

``பக்தர்கள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை" பாதியில் திரும்பிய பெண் பத்திரிகையாளர் பேட்டி #sabarimala

பிரேம் குமார் எஸ்.கே.


பதற்றமான சூழ்நிலையில் இன்று காலை சபரிமலைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜ், பாதி வழியில் திரும்பியுள்ளார்.



Photo Credit: Twitter/Mathrubhumi‏

கேரள மாநில சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக நேற்று கோயில்நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று சில பெண்கள் சபரிமலை செல்ல வந்தனர். ஆனால் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று பக்தர்கள் அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அத்தன்காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்நிலையில் இன்று காலை லக்னோவைச் சேர்ந்த சுஹாசினி ராஜ் என்றப் பெண் பத்திரிகையாளர்சபரிமலை சென்றுள்ளார். ஆனால் பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக அவர் திரும்பி செல்லும் முடிவை எடுத்தார். அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுஹாசினி ராஜ், ``சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு வெளியான காரணத்தால் வந்தேன். நான் செய்தி சேகரிக்கவே இங்கு வந்தேன். அதிகாலையில் மலை அடிவாரத்தில் யாரும் இல்லை. அதனால் எளிதாக உள்ளே வந்துவிட்டேன். ஆனால் பாதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த போலீஸாரிடம், நான் ஒரு பத்திரிக்கையாளர். மேலே செல்ல எனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர்களும் எனது பாதுகாப்புக்காக உடன் வந்தனர். வழியில் போலீஸாருக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் பதற்றமான சூழல் உருவானது. பக்தர்கள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அதனாலே திரும்பிச் செல்லும் முடிவை எடுத்தேன். மீண்டும் செல்லும் எண்ணமில்லை” என்று தெரிவித்தார்.

சுஹாசினி ராஜ், அப்பாச்சிமேடு செல்லும் வரையில் பெரிதாக சிக்கல் ஏற்படவில்லை. அப்பாச்சி மேடு பகுதியில் சில பக்தர்கள் GoBack என்று கோஷம் எழுப்ப, அதன் பின்னர் மற்ற பக்தர்களும் சேர்ந்து கொண்டனர். இதனால் அங்குப் பதற்றம் உருவானது. இதனால் அவர் போலீஸ் பாதுகாப்பை நாடியுள்ளார். பக்தர்கள் சிலர் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய போலீஸாரின் கால்களைத் தொட்டு, `சுஹாசினியை மேல செல்ல அனுமதிக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டனர். மரகூட்டம் என்னும் இடத்தில் பிரச்னை அதிகமாகவே, அவர் கீழே செல்லும் முடிவை எடுத்தார். தற்போது போலீஸ் பாதுகாப்புடன் அவர் பம்பை அழைத்துவரப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024