Friday, December 21, 2018

அதிகாரிகள் வேலைநிறுத்தம்; வங்கிகள் இன்று முடங்கும்?

Added : டிச 21, 2018 05:15



சென்னை : 'இன்று(டிச.,21) நடக்கும் வேலைநிறுத்தத்தால், காசோலைகள் பரிவர்த்தனையில் பாதிப்பு இருக்காது' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக, வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பு முடிவுகளை கைவிட வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர், இன்று, நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கி அதிகாரிகள், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிகளின் செயல்பாடு பாதிக்கப்படும். நாளை, நான்காவது சனிக்கிழமை என்பதாலும், மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதாலும், இரண்டு நாட்கள், வங்கிகள் செயல்படாது. 24ம் தேதி, திங்கள் கிழமையும், வங்கிகளுக்கு விடுமுறை என, தகவல் கிளம்பியது. ஆனால், அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். திங்கள் கிழமை, வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். ஆனால், 25ம் தேதி செவ்வாய் கிழமை, கிறிஸ்துமஸ் விடுமுறை, அதற்கு அடுத்த நாள், 26ம் தேதி, அகில இந்திய வேலைநிறுத்தம் என்பதாலும், வங்கிகள் செயல்படாது.

காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், காசோலை பரிவர்த்தனைகளில் இன்று எந்த பாதிப்பும் இருக்காது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024