Monday, December 1, 2014

நான் ஒரு பாசிட்டிவ் பெண்’.......ஜி.ஞானவேல்முருகன்

விஜயலட்சுமி

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1

தன்னைப் பாதித்த நோயைக் காரணமாக்கி இந்தச் சமூகமும் உறவுகளும் தன்னை ஒதுக்கிவைத்தபோதும் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ்ந்துவருகிறார் விஜயலட்சுமி. திருச்சியைச் சேர்ந்த இவர், “நான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆம் நான் ஒரு பாசிட்டிவ் பெண்” என்று அழுத்தம் திருத்தமாகத் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். தன் முகத்தையோ அடையாளங்களையோ மறைத்துக்கொள்ள ஒருபோதும் விரும்பாதவர். “ஓடி ஒளிந்துகொள்ள நான் என்ன தவறு செய்தேன்? என்னைத் தாக்கிய நோய்க்கு எதிராகப் போராடுவதும் நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நம்பிக்கை தருவதும் குற்றமா என்ன?” என்று கேட்கும் விஜயலட்சுமியின் ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கை மீதான நம்பிக்கை மிகுந்த சிந்தனை வெளிப்படுகிறது.

தன் கணவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்தான், விஜயலட்சுமிக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களைப் போலவே விஜயலட்சுமியும் தன்னை மாய்த்துக்கொள்ளத்தான் நினைத்தார். ஆனால் பிறகு அந்த நினைப்பில் இருந்து மீண்டு தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரத்து 500 பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

தாக்கிய பேரிடி

விஜயலட்சுமி 10-ம் வகுப்பு முடித்த கையோடு 16 வயதில் முருகேசனை 1996-ல் வாழ்க்கைத் துணைவராகக் கரம்பிடித்தார். முருகேசனுக்குக் கட்டுமானத் துறையில் சென்ட்ரிங் வேலை. அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகவே, 2003-ல் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் முருகேசனை சிகிச்சைக்குச் சேர்த்தனர். அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதே நேரத்தில் விஜயலட்சுமியையும் பரிசோதிக்க, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதைக் கேட்டதுமே உடைந்துபோனார் விஜயலட்சுமி. அந்த நொடியிலும் அவருக்கு ஆறுதல் அளித்த ஒரே செய்தி, அவருடைய 5 வயது மகனுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பதுதான்.

மக்களிடையே எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டுவரும் இந்தக் காலத்திலேயே பலரது பிற்போக்கு சிந்தனை மாறவில்லை. அப்படியிருக்கும்போது 10 ஆண்டுகளுக்கு முன் விஜயலட்சுமி சந்தித்த துயரங்களைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன்னைச் சூழ்ந்த புறக்கணிப்பையும் தனிமையையும் சமாளிக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள விஜயலட்சுமி முடிவெடுத்தார். தூக்கமாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயன்றார்.

தன்னம்பிக்கைப் பயணம்

விஜயலட்சுமியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள், அவருக்கு ஆலோசனை வழங்கி தாம்பரத்தில் இதற்கென உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் கவுன்சலிங் பெற அறிவுறுத்தினர். ஆரம்பத்தில் திருச்சியில் இருந்து மாதம் ஒருமுறை என தாம்பரம் மருத்துவமனைக்கு 2 ஆண்டுகள் சிகிச்சைக்காகச் சென்றார்.

நன்றாகப் பழகியவர்கள்கூட தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்ததும் தன்னைவிட்டு ஒதுங்கினார்கள் என்று வேதனையுடன் சொல்கிறார் விஜயலட்சுமி. தன் வீட்டிலும் தனித் தட்டு, டம்ளர், தனிப் படுக்கை என அவமதிப்பு தொடர, ஒரு கட்டத்தில் மகனுடன் வீட்டைவீட்டு வெளியேறித் தனியே வாழப் பழகினார். தொடர்ந்து சில நல்ல உள்ளங்களின் உதவியால் மகனை வளர்த்து வருகிறார்.

எய்ட்ஸ் நோயைப் பற்றித் தன் மகனுக்குச் சிறு வயதில் இருந்தே விஜயலட்சுமி விளக்கியிருக்கிறார். மற்றவர்களுடன் உணவு, உடையைப் பகிர்ந்துகொள்வதாலும் ஒரே இடத்தில் வசிப்பதாலும் பரவாது என்பதையும், எப்படிப் பரவும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“சின்ன வயசுல இருந்தே என்கூட சிகிச்சைக்குத் துணையாக வருவதால் என்னைப் பத்தி என் மகனுக்கு எல்லாமே தெரியும். இப்போ டிப்ளமா படிக்கிற அவன்தான் தினமும் மாத்திரை எடுத்துக் கொடுப்பதில் தொடங்கி, சத்தான உணவு கொடுப்பது வரை ஒரு தாய்போல் என்னைக் கவனித்துக்கொள்கிறான்” என்று தன் மகனைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தயக்கம் தவிர்ப்போம்

தன்னைப் போல் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்கும்போது தன் வாழ்க்கையையே முன்னுதாரணமாக எடுத்துக் கூறுகிறார் விஜயலட்சுமி. “தயக்கம் இன்றி வெளியே தலை காட்டுங்கள். புதிய வாழ்க்கைக்குத் தயாராகுங்கள். இது நம்மை நம்பும், நம் மீது அன்பு செலுத்தும் ஒரே ஒரு உறவால் சாத்தியமாகும். நோய்த் தொற்று உள்ளவர்கள் மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தலைமுறையினர் நம்மை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் உள்ளனர். மற்ற வியாதிகளை வெளியில் சொல்வதைப் போல ஹெச்.ஐ.வி தாக்குதலையும் தைரியமாகச் சொல்லுங்கள்” - தான் சந்திக்கும் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் மனிதர்களிடம் விஜயலட்சுமி சொல்லும் தாரக மந்திரம் இதுதான்.

மணப்பாறையில் உள்ள ஏ.ஆர்.டி மையத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்க்கும் இவர், ‘நெட்வொர்க் ஆஃப் பீப்புள் லிவிங் வித் ஹெச்ஐவி/ எய்ட்ஸ்’ என்ற அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவராகச் செயல்படுகிறார்.

“ஹெச்.ஐ.வி பாதித்தவர்கள் மீது அன்பு காட்ட, தலை சாய்த்துக் கொள்ள, ஆதரவாய்த் தோள் கொடுக்க ஒரே ஒரு ஜீவன் இருந்தால் போதும். ஆயுள் மேலும் மேலும் நீடிக்கும்” என்று அன்பையும் புரிந்துகொள்ளுதலையுமே தீர்வாக முன்வைக்கிற விஜயலட்சுமி, நோயின் பாதிப்பில் சோர்ந்துபோகிறவர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறார்!

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024