ஜப்பானில் புல்லட் ரெயில் எவ்வளவு வேகமாக செல்கிறது, சீனாவில் பெய்ஜிங் நகருக்கும், ஷாங்காய் நகருக்கும் இடையில் உள்ள 1,318 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் சென்றுவிடமுடிகிறது. இந்த வசதிகள் மட்டுமல்லாமல், அங்குள்ள ரெயில்களில் வேகத்தோடு, ரெயில் முழுவதும் மட்டுமல்ல, பிளாட்பாரம், ரெயில்பாதை எங்கும் ஒரு குப்பைகூட இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது, அதுபோல இந்தியாவுக்கு என்று வருமோ? என்பதுதான் மக்களின் இப்போதைய கனவு.
ரெயில்வே பட்ஜெட்டில் சென்னை–டெல்லி இடையே புல்லட் ரெயில், சென்னை–மைசூரு இடையே இப்போது ஓடும் ரெயிலின் வேகம் அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளெல்லாம் காற்றிலே கலந்த கீதமாகிவிடாமல், அதை நிறைவேற்றுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மத்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும். சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதத்தில் டெல்லி வந்திருந்தார். அப்போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இந்தியாவில் புல்லட் ரெயில் சேவை தொடங்க சீனா ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வை சீனா இலவசமாக செய்துகொடுக்கும் என்று கூறப்பட்டது. இந்த சாத்தியக்கூறை ஆராயவும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப்பெறவும், ரெயில்வேயின் உயர் அதிகாரிகள் குழு கடந்தவாரம் சீனா சென்று, அங்குள்ள அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன்படி, 1,754 கிலோமீட்டர் தூரம் உள்ள சென்னையில் இருந்து டெல்லியை இந்த புல்லட் ரெயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் 6 மணி நேரத்தில் சென்றடையும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், உலகிலேயே சீனாவுக்கு அடுத்து 2–வது நீள புல்லட் ரெயில் வழித்தடம் இந்தியாவில்தான் இருக்கிறது என்ற பெருமையை பெறுவோம்.
இந்தியாவில் இருந்து அதிகாரிகள் குழு சீனா சென்றிருந்த அதே நேரத்தில், சீனாவில் இருந்து அதிகாரிகள் குழு சென்னை வந்தது. இந்த குழு சென்னையில் இருந்து மைசூருக்கு செல்லும் ரெயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அதிகரிக்கவும், சதாப்தி ரெயிலின் வேகத்தை மணிக்கு 250 கிலோ மீட்டர் என்ற வகையில் அதிகரிக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்தது. நிச்சயமாக இதையெல்லாம் நிறைவேற்றியே தீருவார்கள். ஆனால், இந்த திட்டங்களெல்லாம் நிறைவேற நிச்சயமாக சிலஆண்டுகள் ஆகும் என்றாலும், இதை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் எடுக்கும் அதிவேக நடவடிக்கை, மக்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது.
இதேவேகத்தை தற்போது ரெயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு வசதிகள் அளிப்பதிலும் காட்ட வேண்டும். ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் பயணிகளுக்கு வசதிகள் இல்லை என்பதை பிரதமர் நரேந்திரமோடியே பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ரெயிலையே பார்த்திராத மேகாலயா மாநிலத்தில் ரெயில்பாதையை தொடங்கிவைத்தபோது, ரெயில்வே வசதிகளைப் பொருத்தமட்டில், 100 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வசதிகளே இன்னமும் இருக்கிறது என்று கூறிவிட்டார். பிரதமரே சொல்லிவிட்டார், இதற்குமேல் வேறு யார் சொல்லவேண்டும்?. சீனாவில் உள்ள புல்லட் ரெயில்போல, அங்குள்ள ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் உள்ள சுத்தமான நிலை, பயணிகளுக்கு உள்ள வசதிகள், உணவு வசதிகளை இந்தியாவிலும் அளிக்க கூடுதல் நிதியும் தேவையில்லை, காலஅவகாசமும் தேவையில்லை. ஏற்கனவே உயர் அதிகாரிகள் மக்களோடு மக்களாய் பயணம் செய்து, அவர்கள் குறைகளைக்கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை இன்னும் யாரும் கடைப்பிடிக்கவில்லை. பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தொடக்கவிழாவின்போது மட்டும் ரெயில் நிலையங்களை சுத்தம் செய்தனர். அந்த ஒரு நாளோடு நின்றுவிட்டது. ஒவ்வொரு அதிகாரியும், ஒரு ரெயில் நிலையத்தை தத்து எடுக்கவேண்டும் என்பதும் நிறைவேற்றப்படவில்லை. புல்லட் ரெயில் வேகத்தில் பிரதமர் கூறியதுபோல, பயணிகளுக்கு பாதுகாப்பும், வசதிகளும், சுத்தம் உள்பட உணவு வசதிகளும் முதலில் அளிக்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment