வெள்ளிவிழா இயக்குநர்
425 நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த 'கரகாட்டக்காரன்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன.. அந்தப் படத்தை, எழுதி இயக்கிய கங்கை அமரன் வெள்ளி விழா இயக்குநராகக் கொண்டாடப்பட்டார். டிசம்பர் 8-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய கங்கை அமரன் கடைசியாக இயக்கிய படம் ’தெம்மாங்கு பாட்டுக்காரன்’. படம் இயக்கவில்லை என்ற வருத்தமில்லை அவருக்கு. எனக்கும் சேர்த்து என் மகன் வெங்கட் பிரபு கலக்குகிறான் என்கிறார் அமரன். இங்கே கரகாட்டக்காரன் படப்பிடிப்பில் நாயகி கனகாவுக்கு நடித்துக் காட்டும்போது க்ளிக்கியவர் ஸ்டில்ஸ் ரவி.
கலகல மனோபாலா
பாரதிராஜாவின் பட்டறை வழியே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி சுமார் 40 படங்களையும் 15 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கிய மனோபாலா டிசம்பர் 8-ம் தேதி தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இம்முறை மனோபாலாவை தேடிவந்து வாழ்த்திச் சென்றவர் விஜய். ரஜினியை வைத்து ‘ஊர்க்காவலன்’, ராதிகாவை வைத்து ‘தென்றல் சுடும்’, விஜயகாந்தை வைத்து ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, சத்யராஜை வைத்து ‘மல்லு வேட்டி மைனர்’ என்று வரிசையாக வெற்றிப்படங்களைக் கொடுத்த மனோபாலா கடைசியாக ஜெயராம் நடித்த ‘நைனா’ என்ற படத்தை இயக்கினார்.
தயாரிப்பாளரின் பணத்தைக் காப்பாற்றும் இயக்குநர் என்று பெயரெடுத்த இவரை தனது ‘நட்புக்காக’ படத்தின் மூலம் நடிகராக்கினார் கே.எஸ். ரவிக்குமார். அன்றுமுதல் இயக்கத்தை நிறுத்திவிட்டு முழுநேர நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் மனோபாலா, இந்த ஆண்டு ‘சதுரங்க வேட்டை’ என்ற வெற்றிப்படத்தைத் தயாரித்துக் கவனம் பெற்றார். இங்கே ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ஹன்சிகாவுடன் போஸ் கொடுக்கிறார். இவர் இருக்கும் படப்பிடிப்பு தளம் மட்டுமல்ல, திரைவிழாக்களும் கலகலப்பால் ஹிட் அடிக்கும்.
No comments:
Post a Comment