Wednesday, April 8, 2015

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவகழகம் அங்கீகாரம் கல்லூரி முதல்வர் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

மருத்துவகழகத்தின் அங்கீகாரம்

மருத்துவகல்லூரிகளை நடத்துவதற்கு இந்திய மருத்துவகழகத்தின் அங்கீகாரம் அவசியம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவகல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகள் இந்திய மருத்துவகழகம் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. திருவாரூர் மருத்துவகல்லூரியிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மருத்துவ கழகம் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கியது. இந்த ஆண்டு தொடர்ந்து 5–வது முறையாக அங்கீகாரம் வழங்குவது குறித்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தியது.

மருத்துவகழகத்தின் சார்பில் மேற்குவங்காளம், அரியானா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர்கள் தத்தா, ஷாம்சிங்க்லா, பிரிசில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மருத்துவ கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி, 17–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு பணி முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவகல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல் ஆய்வு

திருவாரூர் மருத்துவகல்லூரியில் தொடர்ந்து 5–வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவகழகம் ஆய்வு நடத்தியது. ஆய்வு குழுவினருக்கு எனது தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவகல்லூரி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி விவரித்தோம். உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவகழகம் திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின்போது மருத்துவகழகம் சில வசதிகளை செய்ய வேண்டும் என சுட்டி காட்டியது. அந்த வசதிகளை செய்த பின்னர் 2–வது கட்டமாக ஆய்வு நடத்தி அதன் பின்னர் தான் மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு முதல் கட்ட ஆய்வின் முடிவிலேயே மருத்துவ கழகம் திருப்தி அடைந்து திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அடுத்ததாக 2020–ம் ஆண்டு தான் மருத்துவகழகம் ஆய்வு நடத்தும்.

நன்றி

இந்த சாதனையை எட்டுவதற்கு உதவி புரிந்த உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...