Thursday, April 2, 2015

காவிரி மேலாண்மை வாரியம்

நடந்தாய் வாழி காவிரி என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளெல்லாம் தங்கள் வாழ்க்கையின் வசந்தமாக போற்றிப்பாடுவதுதான் காவிரித்தாய். ஒரு பெண்ணின் பிறந்த வீடு ஒன்று என்றாலும், புகுந்த வீடுதான் அவள் வாழ்க்கையில் பெருமை சேர்க்கும். புகுந்த வீட்டுக்குத்தான் அவள் பங்களிப்பு அதிகமாக இருக்கும், இருக்கவேண்டும், இருப்பதுதான் காலத்தின் நியதி என்பதுபோல, காவிரி கர்நாடகத்தில் உள்ள தலைக்காவிரியில் பிறந்தாலும், அவளுக்கு புகுந்த வீடு தமிழ்நாடுதான் என்ற வகையில்தான் எப்போதும் ஆண்டாண்டுகாலமாக கருதப்பட்டுவருகிறது. அந்த வகையில், எப்படி புகுந்தவீட்டுக்கு வந்த ஒரு பெண், அந்த வீட்டின் குடும்பத்தலைவியாக சகல உரிமைகளும் பெற்று வலம் வருவாளோ அதுபோலத்தான், காவிரியையும் விவசாயிகள் கருதுகிறார்கள். அந்த நிலையில், புகுந்த வீட்டுக்கு போகக்கூடாது என்று ஒரு பெண்ணை பிறந்தவீடு தடுப்பது எந்த வகையிலும் அவளுக்கு சிறப்பு சேர்க்காது. அதுபோல, ஒரு நிலையைத்தான் இப்போது காவிரி ஆற்றுக்கு மேகதாது அணை மூலமாக எற்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் காவிரியை தடுக்கும் வகையில் தமிழக எல்லையில் மேகதாது அணையைக் கட்டினால், காவிரி ஆற்றுத்தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் ஓடி வருவது பெரிதும் தடைபட்டுப்போய்விடும். வாழி காவிரி என்று பாடவேண்டியதற்கு பதிலாக வறண்ட காவிரி என்ற நிலை உருவாக வழிவகுத்துவிடும்.

கர்நாடகத்தில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி ஓடிவரும் காவிரி கனகபுரா தாலுகாவில் சில இடங்களில் பாறை இடுக்குகளுக்கு இடையில் ஓடிவருகிறது. மிகவும் குறுகலான அந்த இடம் ஒரு ஆடு தாண்டிவிடும் அளவிலேயே இருப்பதால், அந்த இடத்தில் ஓடிவரும் காவிரியை ஆடு தாண்டும் காவிரி என்பார்கள். ஆடு தாண்டி என்பதற்கு கன்னட மொழியில் மேகதாது என்பார்கள். அந்த மேகதாதுவில்தான் கர்நாடக அரசு அணைகட்டி காவிரியின் ஓட்டத்தை தடுக்க முயல்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி கர்நாடக அரசாங்கத்தால் இப்போது மட்டுமல்ல, 1981–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதியே தொடங்கிவிட்டது. அப்போது கர்நாடகத்தில் குண்டுராவும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும் முதல்–அமைச்சர்களாக இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அடுத்த ஒரு மாதத்துக்குள் அப்போது ஜனாதிபதியாக இருந்த சஞ்சீவ ரெட்டியை வைத்து அடிக்கல் நாட்டவும் ஏற்பாடு நடந்தது. இந்த தகவலை அப்போது எம்.எல்.ஏ.யாக இருந்த பழ.நெடுமாறன், எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு கொண்டுவந்த நேரத்தில், உடனடியாக எம்.ஜி.ஆர் மிகவும் ராஜதந்திரத்தோடு எடுத்த நடவடிக்கைகள் அப்படியே இந்த திட்டத்தை முடக்கிப்போட்டுவிட்டது.

மீண்டும் இப்போது இது தலையெடுத்துள்ளது. இதற்கு ஒரேவழி காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் ஆணையத்தையும் அமைக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இதுபோன்ற புதிய திட்டங்கள் எதையும் அது கர்நாடகம் என்றாலும் சரி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என்றாலும் சரி, அந்த வாரியத்தின் அனுமதியில்லாமல் தொடங்கவே முடியாது. எனவே, இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். நாளையும், நாளை மறுநாளும் பெங்களூருவில் நடக்கும் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசி தீர்மானம் நிறைவேற்றச் செய்யவேண்டும். 2012–ம் ஆண்டு நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் இவ்வாறு தாமதம் செய்வதில் நியாயமே இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024