Thursday, April 2, 2015

பற்றெல்லாம் பற்றல்ல...

By அ. அறிவுநம்பி

பற்று. இந்தச் சொல் மூன்றே எழுத்துகளால் உருவாகியிருக்கலாம். ஆனால், அது தரும் பொருள் வானளவு பெரியது. இச்சொல்லினுடைய அடர்த்தியான அர்த்தம் புரியாததால்தான் மிகமிகச் சாதாரணமான ஆசை, விருப்பம், வேட்கை, தேவை, இச்சை, பிரியம் போன்றவற்றையும் பற்று எனத் தவறாகக் கருதுகின்றனர். கணவன் மனைவியிடம் காட்டும் அன்போ, பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் பாசமோ, மாணவர் தம் ஆசிரியரிடம் காட்டும் குருபக்தியோ பற்றாகாது.

உண்மையான பற்று எது? இலக்கு ஒன்றைப் பற்றிக் கொண்டு தன்னலம் மறந்து, தன் சுற்றம் துறந்து, தன்னையே மறந்து நிற்பதுவே.

மனிதர்களின் பற்றுகள் பலவகையாக அமையக்கூடும். அவற்றுள் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவை முதன்மையானவை. அதனாலேதான் பாரதி "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்று நிரல்படுத்திப் பாடம் தந்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பற்றுகள் பொலிவுடன், அணுக்க உணர்வுடன் மேற்கொள்ளப் பெற்றன.

எங்கோ, கண்காணாத வட்டாரத்தில் தன் இன மக்கள் அன்றாடம் காயம்படுகின்றனர் எனக் கேட்டறிந்தவுடன் கரும்புத் தோட்டத்துத் தமிழர்க்காகப் பாப் புனைந்தவன் பாரதி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' என்பது வள்ளுவவழி.

தன் இனமக்களின் அழிவுகளைக் கண்டு இனப்பற்று மீதூரத் தீக்குளித்தவர்களை எப்படிப் போற்றுவது? இன்னும் ஒரு படி மேலே போய்த் "தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இவ்வுலகை அழிக்கவும் முன்வருவோம்' என்ற முழக்கம் எழுந்தது இந்த மண்ணில்தானே!

தன் சுகம், குடும்ப வளம், உறவினர் நலம் போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டு விடுதலைப் பற்றைத் தன் மனம், மொழி, மெய் எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்ட தியாகிகள் பலர்.

வருமானந்தரும் வழக்குரைஞர் பதவியை உதறிவிட்டு மக்கள் நலனுக்காகச் சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன் போன்றோரின் அருஞ்செயல்கள் அவர்களின் தேசப்பற்றை எடுத்தோதும்.

காலம் அவ்வப்போது மாற்றங்களை தரும். அவை நல்ல மாற்றங்களாக அமையின், உலகிற்குப் பயன் கிடைக்கும். மாறிப்போனால் மக்களின் வாழ்வியல் நெறி சிதிலமடையும். இந்தச் சேதாரம் எல்லாக் கூறுகளிலும் ஏற்படும். இன்றைய பற்றுகளை உற்றுநோக்கினால் பலவற்றை இனங்காண முடியும்.

லால் பகதூர் சாத்திரி அமைச்சராக ஆகும் முன் கட்சிப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். கட்சிக் கூட்டங்களில் அவர் பேசுவதற்காக அந்தக் காலத்தில் அவருக்கு வழங்கப்பெற்ற மாத ஊதியம் ஐம்பது ரூபாய்.

ஒருமுறை மாதத்தின் கடைசி நாள்களில் திடீர்ச் செலவு ஏற்பட்டு அவர் திண்டாடியபோது, அவருடைய மனைவி ஐந்து ரூபாயை அவரிடம் நீட்டி, "கடந்த மாதம் மிகவும்

கடினப்பட்டு மாதச் சம்பளத்தில் இந்த ரூபாயை மிச்சம் பிடித்தேன்' என்று கூறியபோது மனைவியை அவர் பாராட்ட முன் வரவில்லை.

உடனடியாக "என்னுடைய மாதச் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் நாற்பத்தைந்து ரூபாயாக மாற்றிக் கொள்ளுங்கள்' எனக் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பினார். தன் இல்ல வசதியைவிடக் கட்சிப் பற்றைக் கருதிய சிலர் வாழ்ந்தனர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.

இன்றும் அரசியலில் ஒரு பற்று உண்டு. அதன்பெயர் நாற்காலிப் பற்று. இதையடைய அரசியல்வாதிகள் கொள்கைகளைக் காற்றில் விடுகின்றனர். அரசியல் நெறிகளை அடமானம் வைக்கின்றனர். போற்றிக்கொண்டிருந்த கட்சித் தலைமைகளைத் தூற்றி நிற்கின்றனர்.

"இலக்கு' என்பது "வருமானம் தரும் பதவி' என்பதால் பகையை நட்பாக்கிக் கொள்ளவும், நட்பைப் பகையாக்கிக் கொள்ளவும், இவர்கள் தயங்குவதேயில்லை. இது சுயநலப் பற்றாகும்.

அரசியல் உலகைப் போலவே பிற உலகிலும் சில உண்டு. நடிகர், நடிகை, விளையாட்டு வீரர் போன்றாரின் திறமைகளைப் புகழுவது என்பது சரி. அவர்களை இறைவன் நிலைக்கு உயர்த்துவதும் கோயில் கட்டுவதும் எப்படி உவப்பானதாகும்? உறுதியற்றவை இப்பற்றுகள்.

எப்படி ஒரு நடிகரின் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் முன்னொட்டாக்கும் இரசிகன் அந்த நடிகரின் "கட் அவுட்' எனப்படும் ஓட்டுமர உருவுக்குப் பாலாபிடேகம் செய்கிறான். அந்த நடிகரின் படம் சரியாக ஓடவில்லை என்றால் வேறொரு நடிகரின் பெயரைச் சூட்டிக் கொள்வதும், சுவரொட்டி ஒட்டுவதும் என அந்த இரசிகன் மாறிக் கொள்கிறான்.

ஒரே உணவகத்தில் உணவு உண்டு வந்த ஒருவர் அதே ஊரில் புதியதாக வந்த கடையில் நல்ல உணவு கிடைக்கும்போது கடையை மாற்றிக் கொள்ளுவதைப் போன்றது இது. இது நிலையற்ற பற்று.

இன்றைக்குக் கட்சி மாறுபவர்களின் கொடி வண்ணம், துண்டு வண்ணம், சட்டை வண்ணங்களை அலசினால் அவர்களின் சாயம் வெளுத்துவிடும். தனக்குப் பிடிக்காத ஒரு குறிப்பிட்டவண்ண ஆடையைக் கட்சி அல்லது இயக்கம் அல்லது அமைப்பின் கட்டுப்பாட்டுக்காக அணிபவர்கள் பலர். வேறு வழியில்லாமல் அந்த வண்ணத் துணிகளை அவர்கள் அணிய வேண்டியதாகிறது. மனம் ஒன்றாப் பற்று இது.

தந்தை ஒருவர் தன் மகனையோ மகளையோ நன்கு படிக்கவைப்பதும், நல்லவிதமாக வளர்த்து வருவதும் பற்றாகா. அவை அவரின் கடமைகள். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' என்பது சங்கப் பா வரி.

முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்பித் தந்தையை இழந்த ஒருத்தி இரண்டாம் நாள் கணவனை அனுப்பி அவனையும் இழக்கிறாள். கவலையில் சிக்காமல் அந்த மங்கை அடுத்த கட்டமாகத் தனக்குத் துணையாக எஞ்சியுள்ள மகனையும் மூன்றாம் நாள் போர்க் களத்துக்கு அனுப்பும்போதுதான் நாட்டின் மீதான அவளின் பற்று வெளிப்படுகிறது.

அண்மையில் தென் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது. மணமகனின் தம்பி அயல் நாட்டில் பணிபுரிகிறார். அவரிடம் வயது

முதிர்ந்த உறவினர் ஒருவர் "நம்ம நாட்டுக்கு எப்பப்பா வருவ படிச்ச படிப்புக்கேத்த வேலை இங்கயும் கெடைக்குமே' எனக் கேட்டார். "ஒங்க நாட்டைக் குப்பைல போடுங்க' இது

அந்த இளைஞரின் விடை.

பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் குடும்ப நண்பர் அந்த இளைஞர் முன்பாக "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்காக நீ என்ன செய்தாய்' என்று யோசி எனக் கென்னடி சொல்லியிருக்கிறார் என ஒரு கருத்தைப் பரிமாறினார்.

இதற்கு அந்த இளைஞர் தந்த பதிலிது: "இந்த நாடு எனக்கு எதுவும் செய்யவில்லை நானும் அதற்கு எதுவும் செய்யவில்லை. எனவே இதுக்கும் அதுக்கும் சரியாய்ப் போயிற்று'.

வெளிநாடுகளில் பணிபெற்றுக் குடும்பம் நடத்துபவர்களில் பலபேர் தங்கள் மகளின் திருமணத்திற்கு வரன்தேடும்போது மட்டும் தாய் நாட்டைத் திரும்பிப் பார்க்கின்றனர்.

அதே வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதே நடப்பியல்.

இங்கே வருந்தத்தக்க செய்தி எதுவென்றால் அவர்களின் மகள்கள் அந்தந்த அயல்நாடுகளிலே வாழ்க்கைபெற நினைக்கிறார்களே தவிரத் தாய் நாட்டிற்குத் திரும்ப ஆசைப்படவில்லை. பூர்வீகம், பாரம்பரியம், சொந்த ஊர், உறவின் முறை என்ற சொற்கள் யாவும் இன்று செல்லாக் காசுகளாக, உள்ளீடற்றவையாகக் காணப்படுகின்றன. திசை மாறிய பற்று இது.

பக்தி உலகிலும் வேரற்ற பற்றுகள் தென்படுகின்றன. இறைவனின் திருவடிப் பேறே தன் பற்று என முடிவு செய்தவர் காரைக்காலம்மையார். இதற்காகத் தன் இளமைக் கோலத்தைத் துறந்தவர். வாழ்வு நலத்தை இழந்தவர். பேயுருவாக அமர்ந்து ஈசனில் கரைந்தவர்.

இன்றைய நிலைக்கு வரலாம். மூன்று பெரிய ஆலயங்களில் கள ஆய்வு செய்தபோது ஆய்ந்து பெற்ற முடிவுகள் இங்கே பதிவாகின்றன. கோயிலுக்கு வருபவர்களில் அறுபது விழுக்காட்டினர் மட்டுமே மெய்யன்பர்கள். இருபது விழுக்காட்டினர் கோயிலுக்கு வருவதை ஒரு பகட்டு நாகரிகமாகக் கொண்டவர்கள்.

குழுக்களாக வருபவர்களில் பாதிப்பேர் பிறருக்குத் துணையாக வந்தவர்கள் என்பதையும் இதிலடக்க வேண்டும். மீதி இருபது விழுக்காட்டினர் பொய்யான பக்தியால் ஆலயத்திற்கு வருவோர். இது போலிப்பற்று.

நின்று உயரத்துடிக்கும் ஒரு முல்லைக்கொடி காற்றில் அலைந்து தவிக்கும்போது பக்கத்தில் இருக்கும் கள்ளிச்செடியில்கூடப் பற்றிப் படரும். அறிவுடைய மனிதர்கள் அப்படிச் செய்யலாமா? இவ்வுலகில் இருவகைப் பற்றுகள் உள.

முதலாவது, மெய்யை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு, தூய்மை நிறைந்ததாக, உண்மை மாறாமல் அமையும் முறையானபற்று. இது குன்றின் மீது செதுக்கப்பட்ட உருவங்களைப் போன்றது. காற்றின், மழையின், வெயிலின் வீச்சுகளால் அவை கலங்குவதில்லை.

இரண்டாவது, பொய்யை அடிநாதமாகக் கொண்டு, போலித்தனத்தை மூலமாக்கிக் கொள்ளும் விளம்பரப் பற்றுகள். இவை நீர்க்குமிழிகள் போன்றவை. இவை பார்க்க அழகாகத் தோன்றும் அடுக்கடுக்காய் வரும். ஆனால், நிலைப்புத் தன்மை இல்லாதவை.

இந்த இருவகையில் எந்தப் பற்றைப் பற்றிக் கொள்ளப் போகிறது உங்கள் பற்று?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024