Thursday, April 2, 2015

தடம் மாறும் இளம் தலைமுறை

Dinamani

ஒரு தந்தை "என் மகன் தலையெடுத்துட்டான்னா, எனக்கு கவலையில்லை' என எண்ணுவார். ஓர் ஆசிரியர் "மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்' என்பார்.

ஒரு நாட்டின் தலைவர் "இளைஞர்களின் வலிமையால், எழுச்சியால் இந்த சமுதாயத்தையே மாற்றிக் காட்டுவேன்' என்று மேடைகளில் பேசுவார். இவ்வாறு நாட்டின் சாதாரண குடிமகனில் இருந்து, அந்நாட்டின் தலைவர் வரை இளம் ரத்தத்தைச் சார்ந்தே சிந்திக்கிறார்கள்.

உலக நாடுகள் அனைத்துமே தத்தம் நாடுகளின் வளர்ச்சியை இளைஞர்களின் சிந்தனை, செயலாற்றலைக் கொண்டே நிர்ணயித்து வருகின்றன.

கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அந்தத் துறையில் இளைஞர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.

இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களின் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இளைஞர்களின் எதிர்காலம் சிதைந்து வருவதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கக் கூடிய மாபெரும் அழிவு சக்தியாக போதைக் கலாசாரம் பெருகி வருகிறது.

நாட்டையே உலுக்கிய தில்லி மாணவி மானபங்க சம்பவத்திலும், இன்னும் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட முக்கிய குற்றச் செயல்களுக்கும் ஊக்கியாக இந்த உற்சாக பானம் என்றழைக்கப்படும் மது இருந்து வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

முன்பெல்லாம் இளைஞர்கள், தெரிந்தவர்களோ, உறவினர்களோ பார்த்துவிடக்கூடாது என்பதற்காக புகைப்பதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்துக்கோ, குளத்துக்கரைக்கோதான் செல்வார்கள்.

இன்றோ கடையின் ஒரு பக்கம் நின்று தந்தை புகைத்தால், மறுபக்கம் நின்று மகன் புகைக்கும் அளவுக்கு, புகைப் பழக்கம் என்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. இதேபோலதான் மதுப் பழக்கமும்.

இதில், அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல், தற்போது மாணவர்களும் பெருமளவில் புகை, போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வருவதுதான்.

முன்பெல்லாம் கல்லூரிக் கல்வி முடித்த பிறகு அல்லது திருமணத்துக்குப் பிறகுதான் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகும் நபர்களைக் காண முடியும். ஆனால், தற்போது 8}ஆம் வகுப்பு மாணவர்கள்கூட சாலைகளில் சர்வ சுதந்திரமாக தைரியமாக நின்று புகைப்பதைக் காண முடிகிறது.

10}ஆம் வகுப்பு வரும்போது, இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்துக்கும் "பார்ட்டி' என்ற பெயரில் சிறுவர்களும் இளைஞர்களும் புகைப்பதையும், மது அருந்துவதையும் கண்கூடாகக் காண முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள்கூட விதவிதமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவலாக இருக்கிறது.

முன்பு பள்ளிகளில் எழுதப் பயன்படுத்தும் குச்சி, சாக்பீஸ் போன்றவற்றைச் சாப்பிடும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதையும், தண்டிப்பதையும் பார்த்திருப்போம்.

ஆனால், இன்று சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் இரு சக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்க்கை திறந்து, அதனை முகர்ந்து ஒருவிதமான போதையில் கிறங்கி இன்புறுகின்றனர்.

அதேபோல், பந்துமுனை பேனாவால் எழுதியதை அழிக்கப் பயன்படும் ஒயிட்னருடன் ஒருவித ரசாயனத்தையும் முகர்ந்து போதையில் லயிக்கின்றனர்.

மேலும், இருமல் மருந்தாகப் பயன்படும் டானிக்கை மருத்துவர் குறித்துக் கொடுக்கும் அளவுக்கும் மேலே பருகி, அதனால் ஏற்படும் போதையில் திளைக்கின்றனர். வலி நிவாரணியாகப் பயன்படும் ஒரு சில மாத்திரைகளை குளிர்பானங்களில் போட்டு அதைப் பருகி ஏற்படும் போதையில் மகிழ்கின்றனர்.

இவை தவிர, அரசால் தடை செய்யப்பட்ட பாக்கெட் புகையிலை, போதைப் பாக்குகள், கிளர்ச்சியூட்டிகள் என மாணவர்களை போதையின் பாதையில் தள்ளுவதற்கு ஏராளமான பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

இவற்றையெல்லாம் வெளியுலகுக்கும், தங்களது பெற்றோருக்கும் தெரியாமல் மாணவர்களும், இளைஞர்களும் பயன்படுத்தி போதையில் சுகம் (?) காணத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது மிகக் கொடூரமான முறையில் பாம்புக் குட்டியை வைத்து இளைஞர்கள் போதையேற்றிக் கொள்வது இணையதளம் மூலம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு முறை பாம்புக் கடி போதைக்கு ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

இப்படி போதையில் மூழ்கி வீணாகும் இளைஞர்களையும், சிறுவர்களையும் மீட்டெடுக்க கேரள அரசு "கிளீன் கேம்பஸ்' எனும் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கி போதை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான, மறுமலர்ச்சித் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால்கூட நல்லதுதான்.

ஏனெனில், போதையின் பாதையில் இளைய சமுதாயம் தடுமாறி, தடம் மாறி போனால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

By இராம. பரணீதரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024