Saturday, April 18, 2015

இணையத்தை குழப்பிய பள்ளிக் கணக்கு: உங்களுக்கு விடை தெரியுமா?

செரிலின் பிறந்தநாள் உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க இணையமே குழம்பித் தவித்திருக்கிறது என்பதும் தெரியுமா?

யார் இந்த செரில்? அவரது பிறந்தநாள் ஏன் தெரிய வேண்டும் என்றெல்லாம் கேட்பதற்கு முன் கவனிக்க, இது வெறும் கேள்வி அல்ல, பள்ளித்தேர்வு ஒன்றில் கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விதான் இது.

இந்தக் கேள்வி கேட்கப்பட்ட சுவாரஸ்யமான விதமும், இதற்கான பதிலை கண்டுபிடிக்க முடியாத குழப்பமும் இதன் செர்லி பிறந்தநாள் தெரியுமா? என இணையத்தை கேட்க வைத்துள்ளது.

இன்னும் கொஞ்சம் விரிவான பின்னணி வேண்டுமா?

சிங்கப்பூரில் நடைபெற்ற பள்ளி கணித தேர்வில் முதலில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

செரிலின் பிறந்தநாள் எப்போது? எனும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன. செரிலுக்கு ஆல்பர்ட் மற்றும் பெர்னார்ட் எனும் இரண்டு நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் செரில் தனது பிறந்த நாளுக்கான பத்து தேதிகளை கொடுத்ததாகவும், இருவரிடம் தனித்தனியே பிறந்த மாதம் மற்றும் பிறந்த தேதியை தெரிவித்தாகவும் அந்த குறிப்புகள் அமைந்துள்ளன.

இதன் பிறகு செரில் பிறந்த நாள் எனக்கு தெரியாது; ஆனால் பெர்னாடுக்கும் தெரியாது என்று ஆப்லர்ட் முதலில் சொல்கிறார். பெர்னாட்டோ முதலில் எனக்கு தெரியாது. ஆனால் இப்போது தெரியும் என்று சொல்ல உடனே ஆல்பர்ட், இப்போது எனக்கும் தெரியும் என்கிறார்.

எனில், செரில் பிறந்த நாள் எப்போது? இப்படி அமைந்திருந்தது அந்த கணக்கு?

இதற்கு எத்தனை மானவர்கள் சரியாக விடை கண்டுபிடித்தனர், எத்தனை பேர் தவித்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த கணக்கை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டது. உடனே இந்த கணக்கு இணையவெளி முழுவதும் வைரலாக பரவி விவாத்ததை ஏற்படுத்தியது. கூடவே குழம்பவும் வைத்தது.

இந்தக் கணக்கில் இருந்த புதிர் தன்மை பலரை கவர்ந்தது என்றால், இத்தனை கடினமான கேள்வியை பள்ளியில் கேட்கலாமா? என்ற கேள்வி இதன் மீதான கவனத்தை அதிகமாக்கியது.

இதனிடையே இது பள்ளி தேர்வில் கேட்கப்பட்டதல்ல, மேல்நிலை மாணவர்களுக்கான கணித ஒலிம்பியாடில் கேட்கப்பட்டது என தெளிவுபடுத்தப்பட்டது. இதனையடுத்து பலரும் கேள்விக்கான பதில் தேடலில் ஈடுபட்டு குழம்பினர். அதே குழப்பத்துடன் இதை ஆன்லைனில் மேலும் பகிர்ந்துகொள்ள கணக்கு இணையத்தை வலம் வந்தது.

இணையத்தை குழப்பும் பள்ளி கணக்கு என்னும் குறிப்பு மேலும் பலரை கவர்ந்தது. இப்படி தேடி வந்த பலரையும் இந்த கணக்கு தனது புதிர்த்தன்மையால் திகைக்க வைத்தது.

இதற்கான பதில் பற்றியும் அதை கண்டுபிடிக்கும் வழி பற்றியும் பலவித கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே இன்னும் சிலரோ, இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்ல என்பது போல, செரில் பிறந்தநாளை அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்த்தால் போச்சு என்பது போன்ற கருத்துக்களை கேலியாக பகிர்ந்து கொண்டனர்.

இதுதான் இணையத்தை குழப்பும் கணக்கின் கதை.

எல்லாம் சரி, செர்லின் பிறந்த நாளை கண்டுபிடித்துவிட்டீர்களா? விடைக்கான விளக்கம் தேவையா? இதோ: https://www.facebook.com/4sasmo/posts/983396811695295

* சைபர்சிம்மனின் வலைதளம் http://cybersimman.com/

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024