தொழில்நுட்பம் மாறுவதற்கு ஏற்ப வியாபார சூழ்நிலைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் பொருட்களின் பட்டியலைக் கொடுத்து வாங்கினோம். அதன் பிறகு நாமாக டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட், துணிக்கடை என்று வாங்கி வந்தோம். இப்போது இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கி வருகிறோம்.
இந்த வர்த்தகம் உயர்ந்துவரும் சூழ்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் (மொபைல் மூலமான பொருட்களை வாங்குவது) மிஞ்சும் என கேபிஎம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
முதலாவதாக மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வது. 2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் 17.3 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தினார்கள். இதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
வரும் 2019-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 21 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் வரும் 2019-ம் ஆண்டு 45.7 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்.
தவிர செயலிகளை (ஆப்ஸ்) அதிகம் தரவிறக்கம் செய்வதில் நான்காவது இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் 90 சதவீதம் செயலிகள் இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும் என்பதால் அதிக தரவிறக்கம் நடக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக செயலிகளை தரவிறக்கம் செய்வது இந்தியர்கள்தான். மொத்த சந்தையில் 7 சதவீதம் இந்தியர்கள் வசம் உள்ளது.
கால் டாக்ஸி நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயலிகளைப் பயன்படுத்தும் போது இலவச பயணச் சலுகை அளிப்பதால், அது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்வது அதிகரித்துள்ளது. அதை தவிர மொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும்.
இதற்கு உதாரணமாக ஸ்நாப்டீல் நிறுவனத்தின் விற்பனையை பார்க்கலாம். 18 மாதங்களுக்கு முன்பு வெறும் 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது. ஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்று ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இன்னும் ஒரு படி மேலேபோய் மிந்திரா நிறுவனத்துக்கு ஆர்டர் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் மொபைல் மூலமாகவே வருகிறார்கள் என மிந்திரா தெரிவித்திருக்கிறது. இதே போல ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைலே ஆதிக்கம் செலுத்துகிறது. 2020ம் ஆண்டுக்கு பிறகு 70 சதவீத வர்த்தகத்தை மொபைல் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
கடைக்குப் போய் பொருட்களை வாங்கும் போது தேவையானதை மட்டுமே வாங்கினோம், இணையம் மூலம் பொருட்கள் வாங்கும் போது கொஞ்சமாவது யோசிக்க நேரம் இருக்கும். ஆனால் மொபைல் மூலம் எப்போது வேண்டுமானாலும் பொருட்கள் வாங்க முடியும் என்பதால் யோசிக்க நேரமிருக்காது.
உங்களை நுகர்வு கலாசாரத்துக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் மட்டுமே இருக்கிறது.
No comments:
Post a Comment