அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தீர்களா? தி.நகர் உஸ்மான் சாலையில் ஓர் பெரிய கடையில் மகேசும், அஞ்சலியும் வேலை பார்ப்பார்கள். அவர்களது மேற்பார்வையாளர் அவர்களை நேரத்திற்கு சாப்பிட விடமாட்டார், தூங்க விடமாட்டார், ஏன் பேசக்கூட விடாமல் பாடாய் படுத்துவார்.
தங்குமிடமெங்கும் குப்பை, வேர்வை, நெருக்கடி. கீழ்நிலைப் பணியாளர்களின் அவல நிலையை அப்படம் தெளிவாகப் பிரதிபலித்தது.
அடுத்து இதையும் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். சண்டீகரில் பெரிய வங்கியின் முதன்மை மேலாளர் அவரது உயரதிகாரிகள் தகுதி இல்லாத ஒருவருக்குக் கடன் கொடுக்கச் சொல்லி செய்த சித்ரவதை காரணமாக ரயில் முன் விழுந்து தற்கொலையே செய்து கொண்டு விட்டார்!
அட, போங்கப்பா! கடைநிலை, இடைநிலை என்றில்லை. மேல்நிலை அதிகாரிகளுக்கும் அலுவலகத்தில் ஏகப் பிரச்சனைகள் உண்டு. இன்போஸிஸ் நிறுவனத்தின் ஓர் உயர்பதவியில் இருந்த பல்கேரிய-அமெரிக்கப் பெண் அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை தரப்படுவதாகப் புகார் செய்தார்.
இன்போஸிஸ் நிறுவனத்தின் இன்னுமொரு மூர்த்தி என்று புகழப்பட்ட பனீஷ்மூர்த்தி மீது தான் அந்தக் குற்றச்சாட்டு! அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருப்பது இந்த மாதிரியான தொல்லைகள்தான்!
அரசாங்கம் சட்டம் தான் இயற்ற முடியும். ஒவ்வொரு அலுவலகத்திற்குள்ளும் காவல் நிலையமா வைக்க முடியும்? பணியிடத்தில் இத்தவறுகள் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத் தலைவருடையது தானே?
முறைமையோடு ஆட்சிசெய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன் அம்மக்களுக்கு இறைவனைப்போல போற்றப்படுவான் என்கிறது குறள்! இன்றைய சூழலில் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளை பண்டைய அரசர்களுடன் ஒப்பிட்டு குறளின் பலன் பெறலாம்.
தற்காலத்தில் நிறுவனத்தில் சீரிய கொள்கை கோட்பாடுகளை வகுத்தல், அவற்றை நிறுவனமெங்கும் கொண்டு செலுத்துதல், அவை குறித்த புகார்கள் வந்தால் நெறி படுத்துதல் ஆகிய மூன்று அதிகாரங்களும் கடமைகளும் அதன் தலைவர்களுக்கே உள்ளன!
தப்பு நடக்காத, நடக்க முடியாத அமைப்பை ஏற்படுத்துவது முதல் கடமை! அமெரிக்காவில் மிராண்டா விதியின்படி ஓர் கைதியிடம் கூட “உங்களுக்கு மௌனம் சாதிக்கும் உரிமை உண்டு” என்று சொல்லிவிட்டுத்தான் விசாரிக்க வேண்டும்! அனாவசியமாகத் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளையும், சும்மா எரிச்சல் மூட்டி பணியாளர்களின் ஊக்கத்தைக் குறைக்கும் மேலாளர்களையும், அதிகார வரம்பை மீறும் உயரதிகாரிகளையும் கட்டுபடுத்தாவிட்டால் தினம்தினம் பிரச்சினைதான்.
வேலை வாங்குவதிலும் ஒரு தரம், தராதரம் வேண்டுமில்லையா? பணியாளர்கள் தம் குறைகள் கீழ்நிலையில் தீர்க்கப்படாவிட்டால் மேலதிகாரிகளைத் தயங்காமல் அணுகும் முறை வேண்டுமில்லையா? தப்பு செய்தவனை தப்பிக்கவிடுவது பெரும் தப்பாயிற்றே! இன்றைய உலகில் ஓர் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக உடனுக்குடன் எல்லோரையும் அடைந்து விடலாமே!
இங்கு தவறு நடக்காது, தலைவர் நடக்கவிட மாட்டார். மீறி நடந்து விட்டால் நீதி செய்வார் என்று பணியாளர் எண்ணும்படி நடந்து கொள்ள வேண்டியது தலைவரின் தலையாய கடமை! நல்முறை சொல்லும் திருமறை இதோ.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
No comments:
Post a Comment