Thursday, April 2, 2015

முட்டாள் யார்? - விடை சொல்லும் டிராபிக் ராமசாமி!

01.04.1934 அன்றுதான் இந்த அவதாரப் புருஷன் அவதரித்த நாள். ஆமாம்... அன்றைய தினம் முட்டாள்கள் தினம். ‘குற்றங்களையும் குணக்கேடுகளையும், சமூக அவலங்களையும் எவனொருவன் சகித்துக்கொள்கிறானோ அவனே முட்டாள்’ என உரத்துச் சொல்லும் இந்தக் கிழட்டுப்பயல், முட்டாள்கள் தினத்தில் அவதரித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஊரே கூடும் அளவுக்கு ஒப்பாரி வைத்து புழுதி கிளம்பும் அளவுக்குப் பூமியை உதைத்த பிறகே நான் பிறந்தேன் என்றாள் என் அம்மா சீத்தம்மாள்.

புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில்தான் வீடு. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்குதான். என் அப்பா ரெங்கசாமி எங்கள் ஏரியாவில் பெரிய மனிதர். இங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் பக்த சபாவின் தலைவராக இருந்ததால் ஏரியாவாசிகளிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. தீவிர காங்கிரஸ்காரர். நேர்மைமிகு ராஜாஜியின் பக்தர்.
நான் வீட்டுக்குத் தலைப்பிள்ளை. எனக்கு அடுத்து ஐந்து தம்பிகள், ஐந்து தங்கைகள். வீடு குழந்தைகளால் நிரம்பி வழிந்தது. வீட்டு வேலைகள் செய்யவும், அப்பாவுக்குப் பணிவிடை செய்யவுமே அம்மாவுக்குத் தலைசுற்றும். தம்பி, தங்கைகளைக் கவனிப்பதுதான் என் முதல் முக்கிய வேலை. அவர்களுக்கு ஆயா முதல் அம்மா வரை எல்லாம் நான்தான். பிறகுதான் படிப்பு, பள்ளிக்கூடம் எல்லாம். தம்பி தங்கைகளைப் பராமரித்தப் பிறகு, அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பிப் போவேன். தெருவுக்குப் பக்கத்தில் இருந்த கார்ப்பரேசன் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியையும் முடித்தேன்.

அப்பா பெரம்பூர் பி.என்.சி. மில்லில் வேலை செய்தார். அவரின் வருமானம் மட்டும்தான். பிள்ளைகளின் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்குப் போராடுவார். நானும் வேலைக்குப் போனால் அப்பாவின் கஷ்டத்தைக் குறைக்கலாம் என்று எண்ணி ஒரு வேலையில் சேர்ந்துவிட முடிவெடுத்தேன்.

அப்பா வேலை பார்த்த பி.என்.சி. மில்லில் எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். 1954ல், 48 ரூபாய் சம்பளத்தில் வீவிங் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று வருடம் ட்ரெய்னியாக வேலை. தேடும் நேரத்தில் கிடைக்கிற வேலை வயிற்றைப் பிடித்து இழுத்தபோது கிடைக்கிற ஆகாரத்தைப்போல். அதனால், அந்த வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு பணியாற்றினேன். இதுதான் வேலை, இத்தனை மணிக்கு வந்தால் போதும் என்கிற சுதந்திரத்தை எல்லாம் சட்டை செய்யாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தேன். எவனொருவன் கடிகாரத்தைப் பார்க்காமல் உழைக்கிறானோ... அவனே கடமைக்காரன். வயிற்றுக்குப் படியளப்பவனிடம் வரையறைக் காட்டி உழைப்பது தவறு. வேலை முடிய இரவு எந்நேரமானாலும் அதுவரை இருந்து பணியை முடித்த பிறகே கிளம்புவேன். இந்தக் கடமை உணர்வு மில்லின் மேலாளர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. அதனால், என்னை விரைவிலேயே பாராட்டி பணி நிரந்தரம் செய்தார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கியதால் அந்த மில்லில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். எல்லா விதத்திலும் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். ஒரு மிலிட்டரி கேம்ப்போல் அந்த மில் இயங்கும்.

நேரம் எவ்வளவு நெகிழ்வானது, நேர்த்தியானது, நேரத்தின் நாடிபிடிக்கும் வித்தையை இங்குதான் கற்றுக்கொண்டேன். நேரத்தை நேர்மையாகச் செலவிடக் கற்றுக்கொண்டால் வாழ்வின் நேர்கோட்டுப் பயணத்தில் நாம் எந்த நெருடலுக்கும் ஆளாக மாட்டோம் என்பது என் எண்ணம்.

மில்லில் நல்லபடியான உத்யோகம்தான் என்றாலும், என் சமூக ஆர்வம் அடிக்கடி கண்விழித்து என்னை உசுப்பேற்றும். காக்கி யூனிபார்முடன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெறிப்படுத்துதலில் இயங்கும் போலீஸாரைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசையாக இருக்கும். எத்தகைய அர்ப்பணிப்பான பணி இது? காக்கி உடுப்பை உடுத்திக்கொள்ளும்போது எவ்வளவு பெருமிதமாக இருக்கும்? கைநிறையச் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும், இந்த போலீஸ் அதிகாரிகளைப்போல் சமூகப் பொறுப்பு மிக்க மனிதனாக உருவெடுக்க முடியவில்லையே என்கிற உறுத்தல் எனக்கு மிகுதியாக இருந்தது.

வேலையை விட்டுவிட்டு போலீஸ் பயிற்சி, அதற்கான படிப்புகளில் இறங்கிவிடலாமா என்கிற எண்ணம் பெருக்கெடுத்து ஓடியது. காக்கிச் சட்டையின் மீது நான் கட்டி வைத்திருந்த காதல் அத்தகையது. எந்தக் காக்கி உடுப்பை விரும்பினேனோ... எதை அணிய முடியவில்லை என ஏங்கித் தவித்தேனோ... அந்தக் காக்கிச் சட்டைகளையே பிடித்து உலுக்கும் ஒருவனாக நான் உருவெடுத்தது காலத்தின் கோலம். இன்றைக்கு வேண்டுமானால் காக்கி உடுப்பின் மீது எனக்கு தீராதக் கோபமும், ஆத்திரமும் இருக்கலாம். ஆனால், அன்றையக் காலகட்டத்தில் நான் காவல்துறை மீது வைத்திருந்த மரியாதை சாதாரணமானது அல்ல.

‘போலீஸ் உத்தியோகம் பார்க்கிறோமோ இல்லையோ... அவர்கள் செய்யும் சேவையில் பாதியையாவது செய்தே தீருவது’ என முடிவெடுத்தேன். சனி, ஞாயிறு நாட்களில் மில் விடுமுறை என்பதால், ஊர்க்காவல் படையில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். அப்போது ஊர்க்காவல் படை, போலீஸுக்கு நிகராக இருந்தது. அதில் வேலைக்குச் சேர்ந்தது கிட்டத்தட்ட பாதி போலீஸ் அதிகாரி ஆனதற்குச் சமம்? அதனால், எனக்குப் பெருமை பிடிபடவில்லை. 1963ல் இருந்து 1971 வரை அதில் பணிபுரிந்தேன். 3 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள்.

கோவிந்தசாமி நாயுடு அவர்கள்தான் அப்போது ஏரியா கமாண்டராக இருந்தார். கடமையைக் கண்ணியத்தோடு செய்யக் கூடியவர். சனி, ஞாயிறுகளில் ஜெயின் ஜார்ஜ் ஸ்கூலில் (புத்தகக் கண்காட்சி நடக்குமே) ட்ரெய்னிங் இருக்கும். ட்ரெய்னிங்கில் உடற்பயிற்சி ஹெவியாக இருக்கும். டிராஃபிக் கிளியர் செய்வது எப்படி என்கிற பயிற்சியை இங்குதான் தெரிந்துகொண்டேன். போலீஸின் அதிகாரங்கள் என்னென்ன என்றும், அவர்களின் வேலை என்ன என்பதையும் விளக்கமாக அறிந்தேன்.

மில்லில் வேலை செய்வது, ஊர்க்காவல் படையில் பணியாற்றுவது என 24 மணி நேரமும் பிஸியாக இருந்தாலும், நிமிட நேரத்தைக்கூட வீணடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி ஜவுளி தொடர்பான உயர் படிப்பை (A.I.M.E.) அஞ்சல் வழியில் படித்து பாஸ் செய்தேன். டாடா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பிவிட்டு, பழைய மில் வேலையிலேயே தொடர்ந்தேன்.

நிர்வாகம் நடத்திய பதவி உயர்வுத் தேர்வுகள் பலவற்றை பாஸ் செய்து மேலாளருக்கு அடுத்த நிலையில் வந்து அமர்ந்தேன். பொறுப்பு அதிகரிக்கும்போது வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். ஒருகட்டத்தில் 24 மணி நேரமும் போதாது என்கிற அளவுக்கு வேலைப்பளு. வேலையைப் பார்த்து அலுத்துக்கொள்கிற ஆள் இல்லை நான். ஆனாலும், வெளி உலகக் கவனிப்புகள் மீது ஆர்வம் பூண்டிருந்த என்னால் ஒரு கட்டடத்துக்குள் அடைபட்டுக் கிடக்க முடியவில்லை என்பதே உண்மை. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நமக்குக் கீழே நான்கு பேர் கைக்கட்டி நிற்பதைப் பார்த்துப் பெருமிதப்படுவது என நம் எண்ணங்களுக்கு எதிரான சூழல் உருவாகிவிடுமோ... நாமும் அதற்குப் பழக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயம் எனக்குள் உருவானது. அதனாலேயே மில் வேலையில்  இருந்தப் பிடிப்பு மெல்ல மெல்லத் தகர்ந்தது. இருப்பது ஒரு வாழ்க்கை. இந்த வேலையிலேயே நம் ஆயுள் கரைந்து போய்விடுமோ என்கிற யோசனை என்னை விழுங்கத் தொடங்கியது. எப்போது நாம் பார்க்கின்ற வேலையில் நம் பிடி தளர்கிறதோ... அப்போதே அதில் இருந்து வெளியேறுவது நல்லது. நமக்கு மட்டும் அல்ல... நாம் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அது நல்லது.
அதனால், மிக நல்ல பதவி, கைக்குப் போதுமான சம்பளம் என்கிற நிலையிலும் தைரியமாக ராஜினாமா கடிதம் எழுதினேன். மேல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. ‘என்னாச்சு உங்களுக்கு?’ எனப் பதறினார்கள். 48 ரூபாயில் தொடங்கிய என் ஊதியம் 2,700 ரூபாயாக உயர்ந்து நிற்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அன்றைய காலகட்டத்தில் 2,700 ரூபாய் என்பது இன்றைய அரை லகரத்துக்குச் சமம். ‘இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்யணும்னு நினைக்கிறேன் சார். இந்த மில்லுக்குள் அடைந்து கிடந்தால் என்னால் ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அதனால்தான் வெளியே போறேன்’ எனச் சொன்னேன். ஏதோ பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள்.

வேலையை உதறிவிட்டு வீட்டுக்கு வந்தால்... டாடா மில்லில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்திருந்தது. எந்த வேலைக்காக நான் விண்ணப்பம் அனுப்பிக் கனவுகளோடு காத்திருந்தேனோ... அதே வேலை! உடனே கிளம்பி பம்பாய்க்கு வரச் சொல்லி இருந்தார்கள். சம்பளம் 4,500 ரூபாய். ‘அலுவலக வேலைகளே வேண்டாம்... இந்த சமூகம் சார்ந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமே’ என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்க எத்தனை விதமான தூண்டில்கள் என்னை மொய்க்கின்றன? எப்போதுமே எதை நாம் விட்டுவிட நினைக்கிறோமோ... அதுதான் நம்மை விடாப்பிடியாகத் துரத்தும். வேலை கேட்டு நாயாக அலைந்தபோது கிடைக்காத வேலை... அதைவிட்டுவிடத் துடிக்கிறபோது வீடு வரை துரத்தி வருகிறது. அதுதான் விதி. அதுவும் பெரிய அளவு சம்பளம் என்கிறபோது கொள்கையாவது கோட்பாடாவது என மனதைத் தோற்கடித்துவிடுகிறது புத்திசாலி மூளை.

நீண்ட நேரம் யோசனையில் இருந்தேன். 4,500 ரூபாய் அல்ல... நாலு லட்சமே சம்பளம் கொடுத்தாலும் அது எனக்குத் தேவை இல்லை என உறுதியாக முடிவெடுத்தேன். பம்பாய் டாடா கம்பெனியின் அழைப்புக் கடிதத்தை சட்டெனக் கிழித்துப் போட்டேன். காரணம், அது கையில் இருக்கும் வரை மனதும் சலனத்துடனேயே இருக்கும். எந்த முடிவையும் யோசித்து எடுப்பது நல்லதுதான். ஆனால், அந்த யோசனை ஒருபோதும் நம்மை சபலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.

சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்கிற உந்துதல் ஒருபக்கம்... அதே நேரம் குடும்பத்தினரைப் பிரிந்து பம்பாய்க்குப் போய் வாழ்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த ஒரு பிறப்பில் நம் உறவுகளாக வாய்த்தவர்களைப் பிரிந்துபோய் லட்சக்கணக்கில் சம்பாதித்துத்தான் என்ன புண்ணியம்? குடும்பத்தைப் பிரிந்து போனால் கோடி ரூபாய் லாபம் என்றாலும், அது நமக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன். அன்பின் கதகதப்பை இழந்து எதையும் சம்பாதித்துவிட முடியாது என்பது என் எண்ணம். ஆனால், எந்தக் குடும்பத்தைப் பிரியக் கூடாது என்றெண்ணி பம்பாய் வேலையை உதறினேனோ... அந்தக் குடும்பமே என்னை அநாதையாகத் தவிக்கவிட்டுப் போனதுதான் வாழ்க்கையின் விசித்திரம்!

- டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி’ நூலில் இருந்து...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024