Friday, April 21, 2017

கவிதை அல்ல... உயிர்காக்கும் கவசம்! ஆரோக்கியம் சொல்லும் வைரமுத்து வரிகள்

பாலு சத்யா


தமிழ்நாட்டின் பெரு நகரம், சிறு நகரம், சிற்றூர்... அத்தனையிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியும்.... காலை நேரத்தில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் கையில் சீட்டோடு காத்திருக்கும் பெருங்கூட்டம். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை போன்ற சிறப்புப் பிரிவுகள் என்றால், கூட்டத்தின் அளவைச் சொல்லி முடியாது. இதற்குச் சற்றும் குறையாதது, மாலை நேரத்தில் அந்தந்தப் பகுதிகளில் பிரபலமான மருத்துவரின் கிளினிக்குகள். டோக்கன் வாங்கிக்கொண்டு, வரிசை வரிசையாகக் கிடக்கும் நாற்காலிகளில் சுருண்டுகொண்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை வெறித்துக்கொண்டிருப்பார்கள் எண்ணற்ற நோயாளிகள். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலோ, உள்ளிருப்பு நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகம். மருத்துவத் தொழில்நுட்பம் வெகு முன்னேற்றமடைந்துவிட்டது; ஆனாலும் நம்மைத் தாக்கும் நோய்க் கூட்டம் குறைந்தபாடில்லை. மருத்துவமனைகள் அதிகமாகிவிட்டன; நோயாளிகளின் எண்ணிக்கையோ பலமடங்கு அதிகமாகிவிட்டது. உண்மையில் நம் ஆரோக்கியம் நம் கையில் என்பது பலருக்குப் புரிவதில்லை.



அவர் ஒரு பெரு நிறுவனத்தில் நிதி மேலாளர். சமீபத்தில் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அந்தப் பிரச்னை தீர்ந்தது; புதிதாக ஒன்று முளைத்தது. வலது காலையும் வலது கையையும் அசைக்க முடியவில்லை; கூடவே கடுமையான வலி. பைபாஸ் செய்ததால் ஏற்பட்ட பக்கவிளைவாக இருக்குமோ என பயந்தவர், இதய மருத்துவரைப் போய்ப் பார்த்திருக்கிறார்.

`இது எங்க பிரச்னை இல்லை. நியூராலஜிஸ்டைப் போய்ப் பாருங்க!’ என நரம்பியல் நிபுணரிடம் அனுப்பியிருக்கிறார்கள். இப்போது நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர். `நோய் நாடி நோய் முதல்நாடி...’ என்கிற திருக்குறளுக்கு ஏற்ப ஆராய்ந்து சிகிச்சை தர மருத்துவர்களுக்கு நேரமில்லை. விளைவு, பெருகுகிறது நோயாளிகளின் எண்ணிக்கை! இன்னொரு பக்கம் ஆரோக்கியம் காக்கும் படலம்! உடல் இளைக்க டயட்... உடல் உறுதிக்கு எக்சர்சைஸ்... இரு மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை டெஸ்ட்... ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை... இப்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலின் பின்னால் ஓடி, ஓடிக் களைத்துப் போய்க்கிடக்கிறது இன்றைய தலைமுறை.

இந்தியாவுக்குள் நுழைந்து சில நூறு ஆண்டு காலமே ஆனாலும், அழுத்தமாக காலூன்றி நிற்கிறது ஆங்கில மருத்துவம். அதற்கு முன்னர் நம் பாரம்பர்ய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம்... இவ்வளவு ஏன்... வீட்டு வைத்தியமே போதுமானதாக இருந்தது நம் முன்னோருக்கு. நோய்க் கூட்டத்திலிருந்து தப்பிக்க, வியாதிகளிடம் இருந்து வருமுன் காக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்க, கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. ஒரு சராசரி மனிதன் ஆரோக்கிய வாழ்வுக்குப் பின்பற்றவேண்டிய எளிய வழிமுறைகளை அழுத்தமாகச் சொல்கிறது ஒரு கவிதை.... கவிஞர் வைரமுத்து `மருத்துவ அறிக்கை’ என்ற தலைப்பில் எழுதியது. அது இங்கே...

மருத்துவ அறிக்கை

டாக்டர்
மருத்துவ முறையை
மாற்றுங்கள்

*
``வாயைத்திற’’ என்பீர்கள்
வயிறு தெரியும்படி
வாய் திறப்போம்

``நாக்கை நீட்டு’’ என்பீர்கள்

கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்

``முதுகைத் திருப்பி
மூச்சிழு’’ என்பீர்கள்

அப்போது தான்
உண்மையாய் சுவாசிப்போம்
அவ்வளவுதான்!

``அஞ்சேல்’’ என்று
அருள் வாக்கு சொல்வீர்கள்

வாசிக்க முடியாத கையெழுத்தில்
வாயில் வராத பெயரெழுதிக்
காகிதம் கிழிப்பீர்கள்

மூன்று வேளை... என்னும்
தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்

போதாது டாக்டர்

எங்கள் தேவை
இது இல்லை டாக்டர்

நோயாளி பாமரன்
சொல்லிக் கொடுங்கள்

நோயாளி மாணவன்
கற்றுக் கொடுங்கள்

வாய்வழி சுவாசிக்காதே

காற்றை
வடிகட்டும் ஏற்பாடு
வாயில் இல்லையென்று
சொல்லுங்கள்

சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு

எத்தனை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொட வேண்டும்

தரையெங்கே தொடுகிறது?
தலைதானே தொடுகிறது

சொல்லிக் கொடுங்கள்

சாராயம் என்னும்
திரவத்தீயைத் தீண்டாதே

கல்லீரல் எரிந்துவிடும்

கல்லீரல் என்பது கழுதை
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது
பயமுறுத்துங்கள்

ஒருகால்வீக்கம்
உடனே கவனி
யானைக்காலின் அறிகுறி

இரு கால் வீக்கம்
இப்போதே கவனி
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்

வாயில் என்ன
ஆறாத புண்ணா?

மார்பகப் பரப்பில்
கரையாத கட்டியா?

ஐம்பது தொட்டதும்
பசியே இல்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா எழுதியிருக்கலாம்.

நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்

நோயொன்றும் துக்கமல்ல

அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது

சர்க்கரை என்பது
வியாதியல்ல
குறைபாடு என்று கூறுங்கள்

செரிக்காத உணவும்
எரிக்காத சக்தியும்
சுடுகாட்டுத்தேரின்
சக்கரங்கள் என்று
சொல்லுங்கள் டாக்டர்

*



ஊமை ஜனங்களிவர்
உள்ளொளி அற்றவர்

பிணி வந்திறப்பினும்
முனி வந்திறந்ததாய்
முனகுவர்
சொல்லிக் கொடுங்கள்

யோகம் என்பது
வியாதி தீர்க்கும்
வித்தை என்று
சொல்லுங்கள்
உயிர்த்தீயை உருட்டி உருட்டி
நெற்றிப் பொட்டில்
நிறுத்தச்சொல்லுங்கள்!

உணவு முறை திருத்துங்கள்
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம்வை

பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு

சொல்லுங்கள் டாக்டர்

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்

பச்சை உணவுக்குப்
பாடம் நடத்துங்கள்

மருந்தை உணவாக்காதே
உணவை மருந்தாக்கு


மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா

கோணாத ஒருவன்
கூனன் ஆனான் - ஏனாம்?

அவன்
டப்பா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை - ஏனாம்?

அவன்
உப்பில்லா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஆரோக்கிய மனிதத் தேவை
அரைகிராம் உப்புதானே

மனிதா

உப்பைக் கொட்டிக் கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே
செடி கொடியா நீ?
சிந்திக்கச்சொல்லுங்கள்

உண்மை இதுதான்

மனிதனைத் தேடி
மரணம் வருவதில்லை!
மரணம் தேடியே
மனிதன் போகிறான்

டாக்டர்
எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்:

``பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?

மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?’’

நன்றி: `வைரமுத்து கவிதைகள்’ நூல். வெளியீடு: சூர்யா வெளியீடு, சென்னை)

No comments:

Post a Comment

Recovery of commutation: Ex-forest officials move CAT .‘Officers Knew Rule When They Opted For Scheme’

Recovery of commutation: Ex-forest officials move CAT . ‘Officers Knew Rule When They Opted For Scheme’ SagarKumar.Mutha@timesofindia.com 29...