Tuesday, November 21, 2017

 போயஸ் கார்டன்,  ஆவணங்கள்... 'திடுக்!'
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் வாயிலாக திரை மறைவில் நடந்த பண பரிவர்த்தனைகள், சொத்து பேரங்கள் உட்பட ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும் அங்கு மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பல விவகாரமான தகவல்கள் கிடைத்துள்ளதால் சசி கும்பலுக்கு எதிராக மீண்டும் சாட்டையை சுழற்ற வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சசிகலா மற்றும் உறவினர்கள் தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா, சிவகுமார், பாஸ்கரன் உட்பட அவரது கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 215 இடங்களில் நவ.,9ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் 'பினாமி' பெயரில் வாங்கிய சொத்துகளின் பத்திரங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் கணக்குகளை வரித்துறையினர் அள்ளினர்.
முதற்கட்ட ஆய்வில் 1,500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது; 12 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வைர நகைகளும் சிக்கின.இந்த சோதனையை அடுத்து வருமான வரித்துறையினருக்கு 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும் சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் ஜெ., வசித்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்நவ., 17 இரவு வரித்துறை திடீர் சோதனை நடத்தியது.


அதில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், கடிதங்கள், போலி கம்பெனிகளின் கணக்கு விபரங்களை அள்ளியது.சோதனையில் கிடைத்த சில கடிதங்களில் சொத்து தொடர்பான மோதல் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. திரை மறைவில் நடந்த ஏராளமான முறைகேடுகள், பேரங்கள் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தோண்ட, தோண்ட பூதம் கிளம்புவது போல சசி கும்பலின் 'தகிடுதத்தங்கள்'அம்பலத்துக்கு வந்தபடி உள்ளன. அதனால் மன்னார்குடி வட்டாரங்கள் மீது மீண்டும் சாட்டையை சுழற்ற வரித்துறை முடிவு செய்துள்ளது.

மீண்டும் ரெய்டு!

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: போயஸ் கார்டனில் சசி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய அறைகளில் கிடைத்த லேப் - டாப், கம்ப்யூட்டர் மற்றும் பென் - டிரைவ்களில் நாங்கள் சற்றும் எதிர்பாராத பல விபரங்கள் கிடைத்துள்ளன.
அதாவது 2000ம் ஆண்டுக்கு பின் பெரும்பாலான சொத்துகள் ஜெ., அல்லது சசிகலாவின் பெயரில் வாங்காததும், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் குடும்பத்தினர் பெயரில் வாங்கியதும், அவை தற்போது அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சசி கும்பலுக்கு சொந்தமான நிறுவனங்கள் எவ்வித முதலீடும் இன்றி, கோடிக்கணக்கில் பணப்புழக்கம் செய்ததற்கான புதிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அத்துடன் நாங்கள் எதிர்பாராத வகையில் சிக்கிய கடிதம் மற்றும் ஆவண குவியலில் சசி கும்பலுக்கு சொந்தமான பல சொத்துகளின் விபரங்களும், அசல்பத்திரங்களும் இருந்தன.

கடிதங்களை பொறுத்தவரை பணப்பரிவர்த்தனை தொடர்பு இல்லாதவற்றை விட்டு விட்டோம். பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய விபரங்கள் அடங்கியவற்றை பறிமுதல் செய்தோம்.
அதில் கிடைத்துள்ள முக்கிய தகவல் அடிப்படையில் போயஸ் கார்டன் மற்றும் பினாமிகளின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

காகித ஆலையை வாங்கிய சசி கும்பல்

வருமான வரித்துறையினர் கூறியதாவது:சசி கும்பல் கோடிகளை கொட்டி, காற்றாலைகளை வாங்கி குவித்தது மட்டுமின்றி வேறு சில ஆலைகளையும் வளைத்து போட்டுள்ளது.
அதில் நாமக்கல்லை சேர்ந்த சசியின் வழக்கறிஞர் செந்திலுக்கு சொந்தமான காகித ஆலையை வாங்க பெரும் தொகை கைமாறியுள்ளது. அது போல வேறு சில ஆலைகளையும் வாங்கி மத்திய கம்பெனி விவகார துறையிடம் பதிய அவர்கள் அனுமதி கோரியுள்ளதும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசியிடம் விசாரணை எப்போது

சசி கும்பல் குவித்துள்ள பினாமி சொத்துகள் குறித்து விசாரித்து வருவதால் தற்போது அவற்றின் மீது வரித்துறையினர் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சசிகலா தான் சொத்துகள் வாங்கி குவிப்பதற்கு முக்கிய கருவி என்றாலும் அவர் சிறையில் இருப்பதால் எங்கும் தப்ப முடியாது. அதனால் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் அவசரம் காட்டவில்லை. எனினும் விசாரணைக்கு கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி பெறும் நடவடிக்கைகளை விரைவில் துவக்க உள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...