Saturday, November 11, 2017

 தோண்ட,தோண்ட,வெளிப்படும்,,'மெகா' மோசடி.. பூதம்!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்து வரும், வருமான வரித்துறை சோதனையில், தோண்ட தோண்ட வெளிப்படும் பூதமாக, 'மெகா' மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இரண்டாவது நாளாக, 100 இடங்களில் நீடித்த சோதனையில், இதுவரை, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான,பினாமி சொத்து பத்திரங்கள் மற்றும் முறைகேடான முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்தையும், சசி குடும்பம் கபளீகரம் செய்த பின்னணி விவகாரங்கள், விசாரணையில் வெளிவர துவங்கி உள்ளன.





இதற்கிடையில், மூன்றாவது நாளாக, இன்றும் சளைக்காமல் சல்லடை போட, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதால், பொறியில் மாட்டிய எலி போல, மன்னார்குடி கும்பல் கதி கலங்கி நிற்கிறது.

ஜெயலலிதாவின் தோழியாவதற்கு முன், 'வீடியோ கேசட்' விற்பனை செய்த சசிகலா; போக வேண்டிய இடங்களுக்கு, பொடி நடையாக சென்று வந்த தினகரன், ஒரு சில ஆண்டுகளில், மதுபான ஆலை, தேயிலை எஸ்டேட், சினிமா கம்பெனி, 'டிவி' நிறுவனம் என, பெரும் பண முதலைகளாக உருவெடுத்துள்ளனர். அதன் பலனாக, தமிழகத்தின் பல பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், சசிகலா குடும்பத்தினர், சொந்தக்காரர்களாகி உள்ளனர்.

ஆட்டம்

ஜெ., முதல்வராக இருந்ததால், அவரது நிழலில், இதுவரை தப்பித்து வந்தனர். ஜெ., மறைந்ததாலும், சசிகலா சிறைக்கு சென்றதாலும், அவரது குடும்பத்தினரின் ஆட்டம் சரியத் துவங்கியது. இந்த நேரம் பார்த்து, ஆட்சியும், கட்சியும், தங்களை கை கழுவியதால், சொத்துக்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள, ஆதரவாளர் கூட்டத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில், வருமான வரித்துறை வளையத்தில், தங்கள் குடும்பம் சிக்கி இருப்பதை உணர்ந்த சசி குடும்பம், இரட்டை இலையை, லஞ்சம் கொடுத்தாவது பெற்று, இழந்த அரசியல் செல்வாக்கை பெற, காய் நகர்த்தியது. அதிலும் வழக்கு வரவே, தினகரன் சிக்கலில் மாட்டினார்.இந்த சூழலில், அவர்கள்



பயந்தபடியே, வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம், சசி சொந்தங்களை சல்லடை போடத் துவங்கினர்.

அதிரடி

சென்னையில் தினகரன், நடராஜன், விவேக், கிருஷ்ணபிரியா வீடுகள், ஜெயா, 'டிவி' மற்றும் 'நமது எம்.ஜி.ஆர்.,' அலுவலகங்கள் மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள, 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும், 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளிட்ட, 111 இடங்களில், அதிகாரிகள் படை, அதிரடியாக புகுந்தது.மேலும், மன்னார்குடியில் திவாகரன், தஞ்சையில் நடராஜன் வீடு, நீலகிரியில் கோடநாடு எஸ்டேட், குன்னுார் கர்சன் எஸ்டேட், புதுச்சேரியில் லட்சுமி நகைக்கடை, தினகரன் பண்ணைத் தோட்டம் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டில்லி என, மொத்தம், 187 இடங்களில் சோதனை நடந்தது.

அதில், 900 அதிகாரிகள் ஈடுபட்டனர். இரண்டாவது நாளான, நேற்று காலை, 140 இடங்களில் சோதனை நீடித்தது; மாலையில், 100 இடங்களாக குறைந்தது. அதில், முறை கேடான பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சசிகலா, இளவரசி உள்ளிட்டோரின் போலி நிறுவனங்களை, மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் முடக்கியுள்ளது. மேலும், சில போலி நிறுவனங்களையும், அவர்கள் நடத்தி வந்துள்ளனர். அந்த, 10 போலி நிறுவனங்கள் தொடர்பான சோதனையில், முறைகேடான பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் சிக்கி உள்ளன.இதேபோல், பல கோடி ரூபாய்க்கு, தமிழகத்தின் பல பகுதிகளில், வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. தற்போது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய் மதிப்புடையவை.

இது தவிர, நாளை, 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. அந்த சோதனைகள் முடிந்த பின் தான், அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகே, வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான வங்கி பரிவர்த்தனை, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த முறைகேடுகளின் முழு அளவு தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினகரன், 'கப்சிப்!'

தன் உற்றார், உறவினர் வீடுகளில் சோதனை நடப்பது தெரிந்ததும், தினகரன், நேற்று முன்தினம் கொதித்து எழுந்தார். 'இதற்கு காரணமானவர்களை, சும்மா விட மாட்டேன்' என, கொக்கரித்தார்.வரித்துறை சோதனையில், கிருஷ்ணபிரியா, பாஸ்கரன், திவாகரன்

போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து, கத்தை கத்தையாக முறைகேடான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல், நேற்று அவருக்கு தெரிய வந்தது. அதனால், நேற்று தினகரன் வாய் திறக்காமல் அமைதியானார்.அதேபோல், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள, தங்கதமிழ்ச்செல்வன் உதவியாளர் வீட்டிலும், நேற்று வரித்துறை சோதனை நடந்தது; அதனால், தினகரன் ஆதரவாளான அவரும், நேற்று வாயை மூடினார்.

எத்தனை பேர்?

வருமான வரித்துறை வரலாற்றில், ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடந்த, மிகப்பெரிய சோதனையாக, சசி கும்பல் மீதான நடவடிக்கை கருதப்படுகிறது. 187 இடங்களில் சோதனை நடந்ததால், ஒரு இடத்திற்கு, 10 பேர் என, உத்தேசமாக கணக்கிட்டு, 1,800 அதிகாரிகள், சோதனைக்கு சென்றதாக தகவல் வெளியானது. 'அது, தவறான தகவல்; முதல் நாள் சோதனையில், 1,000க்கும் குறைவான அலுவலர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டனர்' என, வரித்துறையினர் தெரிவித்தனர்.

கசிந்தது ரகசியம்!

முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், நேற்று சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர்.மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.

இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,யுடன் பேசி, பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்போது, 'ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று, வரித்துறை கூறியுள்ளது. ஆனாலும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது. சில இடங் களில், போலீசார் முறையாக ஒத்துழைக்க வில்லை என்கின்றனர், வரித்துறையினர்.

மன்னார்குடி ஜாதகம்!

சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள் என, ஒருவர் விடாமல், மன்னார்குடி கும்பலின் முழு ஜாதகத்தையும், வருமான வரித்துறையினர் கையில் வைத்தபடி, சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக போலீசாருக்கு கூட, இவ்வளவு தகவல்கள் தெரியுமா என, வியக்கும் அளவுக்கு, சசி சொந்தபந்தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை, வரித் துறையினர் சல்லடை போட்டு தேடி வரு கின்றனர். இதற்கு, அ.தி.மு.க.,வில், சில முக்கிய புள்ளிகள் உதவியதாக தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...