Wednesday, July 4, 2018

ராக யாத்திரை 10: துள்ளி துள்ளிப் பாடும் ராகம்

Published : 22 Jun 2018 10:54 IST
Updated : 22 Jun 2018 10:55 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



ராஜாவும் ரஜினியும்

சென்ற வாரம் கொஞ்சம் எளிமையான கேள்வி போலிருக்கிறது. பாரதிராஜாவின் அறிமுகத்தில் புதுமுகமாக நாயகன் நாயகி இருவரும் நடித்த ‘மண்வாசனை’ (1983) படத்தில் மத்தியமாவதி ராகத்தில் அமைந்த ஆனந்தமான பாடல் ‘ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலை’ என்னும் பாடல்தான் . மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாடலில் இந்த ராகத்தின் மென்மை காதுகளில் தேன்சிந்தும். சரியாகச் சொன்ன பலரில் முதலாகச் சொன்ன சிவகாசி கல்பனா ரத்தனுக்கும் நெய்வேலி ரவிக்குமாருக்கும் பாராட்டுகள். நட்சத்திர நாயகி என ரேவதிக்கு க்ளூ கொடுத்திருக்கத் தேவையேயில்லை போலிருக்கிறது.

மத்தியமாவதிக்கு வேறொரு வண்ணம்

எல்லா ராகத்தைப் போலவே வேறுவேறு தளங்களுக்கு, உணர்வுகளுக்கு இந்த ராகத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் இசைஞானி. நவரசங்களில் குறிப்பாக, சிருங்கார ரசத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ‘மூன்றாம் பிறை’ (1982) திரைப்படத்தில் வரும் ‘பொன்மேனி உருகுதே’ என்ற பாடலைச் சொல்லலாம். கர்னாடக சங்கீதத்தில் மிகவும் சுத்தபத்தமாகப் பக்திபூர்வமான மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது மத்தியமாவதி.

அதை மிகவும் வேறொரு பரிமாணத்தில் விரகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைத்திருப்பார். ஜானகியின் குரலுக்குக் கேட்க வேண்டுமா?. ‘பனிக்காற்றிலே தனனா தனனா...’ என்ற இடத்தில் அந்த ராகத்தின் சங்கதிகள் வந்து விழுவதைக் கவனியுங்கள். (கட்டாயம் இந்தப் பாடலின் புகைப்படம் போடப்பட மாட்டாது).

அதே பிக்பாஸின் இன்னொரு பாடல் இதே மாதிரியான ஒரு மாதிரியான பாடலுக்கும் இந்த ராகத்தை இளையராஜா பயன்படுத்தியிருப்பார். இரவு, நிலவு, காதல் போன்ற உணர்வுகளுக்கு மிகவும் ஏற்ற ராகம் எனச் சொல்லியிருந்தேன். அதேபோல் பல இடங்களில் இந்த ராகம் பயன்பட்டிருக்கும். ‘சகலகலாவல்லவன்’ (1982) திரைப்படத்தில் வரும் ‘நிலாக் காயுது’ என்ற பாடலும் இந்த மத்தியமாவதி ராகத்திலேயே அமைந்திருக்கும். ஜானகியுடன் மலேசியா வாசுதேவன். பாடலில் சில இடங்களில் வேறு ராகங்கள் தலைதூக்கினாலும் அடிப்படையில் இந்த ராகமே மேலோங்கி இருக்கும்.

காதல் இளவரசனுக்கு அதிரடியாக என்றால் காலாவுக்கு வேறு மாதிரியாக அமைதியான சிருங்கார ரசப் பாடல். முதலிரவுப் பாடல்தான். மகேந்திரனின் இயக்கத்தில் வந்த ‘கை கொடுக்கும் கை’ (1984) படத்தில் வரும் ‘தாழம்பூவே வாசம் வீசு’ என்ற பாடல்தான் அது. எஸ்.பி.பி., ஜானகி குரலில் இனிமையாக ஒலிக்கும் ஒரு மெல்லிய பூங்காற்றாக வரும். தாழம்பூவை ஒளித்து வைத்தாலும் வாசம் போகாது என்பது போல் மத்தியமாவதி எந்த உருவில் வந்தாலும் அதன் அடையாளமான இனிமையை வெளிப்படுத்திவிடும்.இன்னொரு அதிரடி சிருங்காரப் பாடலான ‘சின்ன மாப்பிள்ளை’ (1993) படத்தில் மனோ, சுவர்ணலதா குரலில் வரும் ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன’வும் மத்தியமாவதிதான்.

‘நாடோடிப் பாட்டுக்காரன்’ (1992) படத்தில் ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ என்ற பாடல் இரண்டு முறை வரும். ஆண்குரலில் ஒன்று; பெண்குரலில் ஒன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகம். அதில் எஸ்.பி.பியின் குரலில் வரும் பாடல் மத்தியமாவதியில் அமைந்தது. (சுசீலா பாடும் பாடல் லதாங்கி என்னும் அரிய ராகம்- அதுபற்றிப் பின்னர்). ‘கெட்டவர்க்கு மனம் இரும்பு, நல்லவரை நீ விரும்பு’ என்பது போன்ற எளிய வரிகளுடன் நாட்டுப் புற மெட்டில் இனிமையாக இந்த ராகத்தை அமைத்திருக்கிறார் இசைஞானி.

ஆனால், மேக்னம் ஓப்பஸ் என ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல் இந்த ராகத்தின் சிகரமாக அமைந்த பாடல் ஒன்று ராஜாவின் இசையில் அமைந்துள்ளது. தெலுங்கு டப்பிங் பாடல்தான் என்றாலும் கொஞ்சம்கூட ‘அக்கட’ உள்ள வாசனை தெரியாமல் இருக்கும் பாடல். எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை பாடத் தெரியாதவன் சுருதி சேர்ப்பதுபோல் (‘பாட்டும் நானே’ –சிவாஜி நினைவுக்கு வரும்) ஆரம்பித்துப் பின் ராகத்தின் மேடு பள்ளங்களிலெல்லாம் வேகமாக ஓடிவரும்.


சிப்பிக்குள் முத்து

தொடர்ந்து ஜானகி ‘நிஸரிமபநிஸரிநிரிஸநிபமபநிஸா’ என இந்த ராகங்களின் ஸ்வரங்களின் ஆரோகண அவுரோகணங்களில் ஒரு ரோலர்கோஸ்டர் ரங்கராட்டினம் போல் ஏறி இறங்கி வருவார். இந்த ராகத்தில் ஸரிமபநி மட்டும்தான் என்பது நினைவிருக்கிறதா?. சிப்பிக்குள் முத்து (1985) படத்தில் வரும் ‘துள்ளித் துள்ளி நீ பாடம்மா’ என்னும் பாடல்தான் அது. சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட அக்மார்க் மத்தியமாவதி ராகப் பாடல் அது. இடையில் வரும் குழல், வயலினிசை என எல்லாம் கலந்து ஓர் உன்னதமான அனுபவம் அளிக்கும் லேசான சோகத்தைச் சொல்லும் பாடல் அது.

இதற்குமேலும் ராஜாவின் மத்தியமாவதியை ஆராய வேண்டாம். பிற இசையமைப்பாளர்களில் ‘உயிருள்ளவரை உஷா’வில் (1983) டி.ஆர் ‘இந்திர லோகத்துச் சுந்தரி’ என அருமையான பாடலொன்றை இந்த ராகத்தில் போட்டிருப்பார். ‘கொடிபறக்குது’ (1988) படத்தில் வரும் ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ என்ற பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார் இசையமைப்பாளர் அம்சலேகா. நல்ல துள்ளலான இசை.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ராகத்தில் ஒரு பாடலில் பின்னியிருப்பார். ‘ஸ்டார்’ (2001) என்ற படத்தில் வரும் ‘தோம் கருவில் இருந்தோம்’ என்ற பாடல். சங்கர் மகாதேவனின் குரலில் வேகமும் ஆவேசமும் கலந்த அருமையான மத்தியமாவதி அது.

கொஞ்சம் சிலபஸ்சைக் கடினமாக்கிக் கேள்வி கேட்போம். மத்யமாவதியின் ஸரிமபநி ஸநிமபரி என்னும் சுரங்களில் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் இன்னொரு இனிய ராகம் வரும். அது?

படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...