Wednesday, July 4, 2018

வாடகைக்குக் குடியிருப்பவரால் பெண் இன்ஜினீயருக்கு நடந்த துயரம்- சிசிடிவி கேமராவால் சிக்கினார்



எஸ்.மகேஷ்



சென்னையில் வாடகைக்கு குடியிருந்தவர், வீட்டின் உரிமையாளரின் மகளிடம் எல்லை மீறி நடந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

வடசென்னையைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றம்). இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் உதவி கமிஷனர் அரிக்குமாரிடம் கண்ணீர் மல்க புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் சுமதி வீட்டில் குடியிருந்த பெயின்டர் பரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் நவரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு அரிக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் பரமேஸ்வரனைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுமதியின் அப்பா, ரயில்வேயில் பணியாற்றுகிறார். அம்மா இந்தி டீச்சராக உள்ளார். தம்பி, கல்லூரியில் படிக்கிறார். சுமதியின் அப்பா நான்கு வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதில் ஒரு வீட்டில் கடந்த ஓராண்டுக்கு மேல் பரமேஸ்வரன் என்பவர், குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரனின் மனைவி டீச்சராக பணியாற்றுகிறார்.

கடந்த சில மாதங்களாக பரமேஸ்வரனின் அநாகரிகமான செயல்களால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சுமதியின் அப்பா தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு, தகாத வார்த்தைகளால் பரமேஸ்வரன் பேசியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுமதியிடம் எல்லை மீறி பரமேஸ்வரன் நடக்க முயன்றுள்ளார். அந்தக் காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இதனால் பாதிக்கப்பட்ட சுமதிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் பரமேஸ்வரனைக் கைது செய்துள்ளோம். அப்போது அவர், தெரியாமல் தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என்று போலீஸிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், பரமேஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ ஆதாரங்கள் இருந்ததால் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,``பரமேஸ்வரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததும் வழக்கறிஞர்கள் சிலர் வந்தனர். அவர்கள், பரமேஸ்வரனுக்கு ஆதரவாகப் பேசினர். அப்போது, எங்களிடமிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வழக்கறிஞர்களிடம் காண்பித்தோம்.இதனால் அவர்கள் கிளம்பிவிட்டனர். பரமேஸ்வரனின் மனைவி, முதலில் எங்களிடம் மன்னிப்புக் கேட்டார். பிறகு அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். ஆனால், அவரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படவில்லை. பரமேஸ்வரன், பெயின்டர் வேலை செய்கிறார். அவர் மீது அசிங்கமாக திட்டுதல், கையால் தாக்குதல், மானபங்கப்படுத்துதல், பாலியல் வன்கொடுமை, தாக்குதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்

வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபரால் உரிமையாளரின் மகளுக்கு நேர்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024