Wednesday, July 4, 2018

திருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா?

துரை.நாகராஜன்

க .தனசேகரன்

எட்டு வழி பசுமைச்சாலையில் புது பிரச்னை!

“ஐயா... நாங்களும் இந்தியர்கள்தானய்யா. எங்களுக்கும் நாட்டின் மீது பற்று உண்டு. அதனாலதானய்யா சொல்றோம்... விவசாயம் செழிப்பா இருக்குற நிலமய்யா. இத அழிச்சிட்டு ரோடு போடுறது பாவமய்யா. பூமித்தாய்க்கு செய்யுற துரோகமய்யா...’’ - சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் இருக்கும் விவசாயி மோகனசுந்தரத்தின் குரல் இது.

‘‘சின்ன கல்வராயன் மலை, பல ஜீவராசிகள் வாழுற இடம். தும்பி பறக்குற வெளி தொடங்கி, யானை நடந்து போற பாதை வரைக்கும் இதை சுத்திதான் இருக்கு. இது அழிஞ்சா சூழலுக்குப் பெரும் கேடு. இன்னும் நூற்றுக்கணக்கான விவசாயக் கிணறுகள், சிற்றோடைகள், விவசாய போர்வெல்கள்னு பல நீர்நிலைகளும் அழிஞ்சே போகும். இந்தச் சாலை எங்களுக்கு வேண்டாமுங்க...” - தர்மபுரி மாவட்டத்தின் இருளப்பட்டி கிராமத்தில் இருக்கும் சந்திரகுமாரின் குரல் இது.

இந்தக் குரல்களைத் தமிழக அரசு கண்டுகொள்வதாக இல்லை. எல்லா எதிர்ப்புகளையும் மீறி சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலைக்கான வேலைகளைப் படுவேகமாக நடத்திக் கொண்டிருக்கிறது அரசு. ‘வளர்ச்சி’ என்று பேசும் தமிழக அரசின் இரட்டை வேடம், இப்போது நீதிமன்ற வழக்கு ஒன்றில் அம்பலமாகி யிருக்கிறது.



2006-11 தி.மு.க ஆட்சியின்போது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிதி ஒதுக்கப் பட்டு பணிகள் துவக்கப்பட்டன. அந்தப் பணிகள் முழுமையடையாத நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அந்த நெடுஞ்சாலைத் திட்டத்திற்குத் தடை விதித்தது. அதற்குக் காரணமாக அ.தி.மு.க அரசு சொன்னது... இன்று மோகனசுந்தரமும், சந்திரகுமாரும், இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் சொல்லும் அதே காரணத்தைத்தான். ‘திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படும், நீர்வழித்தடங்கள் தடைபடும். இயற்கைச் சூழலுக்குக் கேடு வரும். நீர்நிலைகளைப் பாதுகாத்து, இயற்கைச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது’ என்றது அரசு.

சென்னை - சேலம் திட்டத்தைச் செயல்படுத்தும் அதே தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI)தான், திருச்சி-காரைக்குடி திட்டத்தையும் செயல்படுத்தியது. ஒரே நிறுவனம் செயல்படுத்தும் ஒரே மாதிரியான இரண்டு திட்டங்களுக்கு, இரு வேறான முரண்பட்ட கருத்துகளைச் சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது தமிழக அரசு.

அப்போது அ.தி.மு.க அரசு விதித்த தடையை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தடையை விலக்கி உத்தரவிட்டது. ஆனால், மேல்முறையீடு செய்தது அ.தி.மு.க அரசு. அந்த வழக்கு இன்றுவரை நிலுவையில் இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். ‘இந்தப் பசுமைச்சாலை திட்டத்துக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. ஏராளமான நீர்நிலைகளும் அழிக்கப்பட உள்ளன. மரங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்படும் முன்னர், இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, இரண்டு பிரச்னைகள் தொடர்பான வழக்குகளையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வுக்கு மாற்றியுள்ளனர். இதனால், தமிழக அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். ‘‘ஜூன் 29-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலைக்கு எதிராக, சூரியபிரகாசம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதே விஷயத்தில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சூரியபிரகாசம் தொடுத்த வழக்கிலும் அதே பிரச்னைகள்தான் எழுப்பப்பட்டுள்ளன. எனவே, இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர் திருச்சி- புதுக்கோட்டை -காரைக்குடி நெடுஞ்சாலைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த வழக்கும் இவற்றுடன் சேர்த்து விசாரிக்கப்படும். இங்கு நீர்நிலைகளைப் பொறுத்தவரைப் பொதுப்படையான ஒரு சட்டம் கிடையாது. திட்டத்திற்கு தகுந்தவாறு மாநில அரசு தன் கொள்கையை மாற்றிக்கொள்கிறது. இதனால்தான் சிக்கல்” என்றார்.



பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், “சூழல் பாதுகாப்புக்காக உள்ள ஒரே சட்டம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்தான். அதன்படி, மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டே ஒரு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் தவிர்த்து மாநில அரசாங்கத்திடம் தெளிவான வேறு சட்டங்கள் இல்லை. அரசியல் காரணங்களுக்காக முடிவுகள் அவ்வப்போது மாறுகின்றன. 2003-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம், 2011-ம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டத்திற்காக நீக்கப்பட்டது. திட்டம் ஒன்றுதான்... கொள்கை மட்டும் மாநில அரசுக்கு வேறாக இருக்கிறது” என்றார்.

‘திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் நீர்நிலைகளைப் பாதுகாத்து, இயற்கைச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது’ என நீதிமன்றத்திலேயே உறுதி கூறியிருக்கிறது தமிழக அரசு. காஞ்சிபுரம் முதல் சேலம் வரையிலான மாவட்டங்களில் இந்தப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறதா, இல்லையா என்பது நீதிமன்றத்தில் விரைவில் தெரிந்துவிடும்.

- துரை.நாகராஜன், படம்: க.தனசேகரன்

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...