Thursday, July 5, 2018


6 வார கால அவகாசத்திற்குள் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்பட்ட சோதனை முடிவை வெளியிட வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

2018-07-05@ 00:16:04



புதுடெல்லி: மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் சோதனையின் முடிவுகளை 6 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடர்பாக ஆண்டுதோறும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தி வரும் மதிப்பீடு அறிக்கையை கேட்டு தீபக் எஸ் மாராவி என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு மனு செய்தார். இதற்கான பதிலை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. மேலும், மதிப்பீடு அறிக்கையை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்த முடிவை எதிர்த்து தீபக் மாராவி, மத்திய தகவல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த ஆணையர் யசோவர்தன் ஆசாத், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: தகவல் ஆணைய சட்டப்பிரிவு 8ன்படி மருத்துவ கல்லூரி ஆய்வறிக்கை முடிவுகளை மருத்துவ கவுன்சில் மனுதாரருக்கு வழங்கியிருக்க வேண்டும். அதை வழங்காததற்கு மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி எந்தவித காரணத்தையும் சொல்ல முடியாது. தகவல் வழங்க விலக்கு பெற்ற பிரிவு 8(1)ஐ தவிர மற்ற தகவல்களை அவர் வழங்க மறுத்து இருப்பது சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல்.

மேலும், வெளிப்படை தன்மையில் இருந்து மருத்துவ கல்லூரி மதிப்பீடு அறிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சில் மறைத்து வைப்பது மருத்துவ கல்லூரி தரத்தை குறைக்கும் செயல். நிர்வாகத் தெளிவின்மைக்கு இங்கு இடமில்லை. அனைத்து நிர்வாக வழிகளிலும் ஊழலை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது. எனவே, மருத்துவ கவுன்சில் அதன் இணையதளத்தில் மருத்துவ மதிப்பீட்டு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். மருத்துவ மாணவர்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள், அரசு உள்பட அனைத்து தரப்பினரும் தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு மருத்து நிறுவனங்கள் குறித்த அறிக்கையை, அந்த நிறுவனங்களில் ஆய்வு மற்றும் சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு 6 வார காலத்துக்குள் வெளியிட வேண்டும்.

ஏனெனில், மருத்துவ கல்வியை தற்போது ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். அதற்கு ஒவ்வொரு மருத்துவ கல்லூரி தொடர்பான முழு அறிக்கை அவசியம். மதிப்பீடு அறிக்கையை நாடாளுமன்றம் கூட தர மறுப்பதில்லை. அப்படி இருக்கும்போது இந்திய மருத்துவ கவுன்சில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட ஏன் தயங்கியது என்று தெரியவில்லை. எனவே, இந்த ஆண்டு முதல் மருத்துவ கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனை மற்றும் ஆய்வு தொடர்பான அறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் இன்னும் 6 வாரத்தில் வெளியிட உத்தரவிடுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024