Sunday, December 23, 2018

அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு

By DIN | Published on : 23rd December 2018 03:27 AM 




பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தைப்பொங்கல் திருநாள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இயற்கையின் அருளாலும் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருள்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார்கள்.

அனைத்து அட்டைதாரர்கள்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
இந்தத் தொகுப்பானது, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு அளிக்கப்படும்.

பொங்கலுக்கு முன்பு: பரிசுத் தொகுப்பானது, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்படும். அரசின் நடவடிக்கை மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெற்று பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாட வழிவகுக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை குடும்ப அட்டைகள்: தமிழகத்தில் 1.87 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகளுக்கு, விலையில்லாமல் அரிசி, கோதுமை, மானிய விலையில் சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் சுமார் 1,200 முதல் 1,400 குடும்ப அட்டைகள் வரை உள்ளன. எனவே, ஒவ்வொரு நாளும் 200 முதல் 300 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். எந்தெந்த குடும்ப அட்டைகளுக்கு எந்தெந்த நாளில் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என்கிற விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையின் அறிவிப்புப் பலகையிலேயே தெரிவிக்க கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024