தள்ளுபடி எனும் பேராபத்து!
By ஆசிரியர் | Published on : 20th December 2018 01:34 AM |
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். பதவியேற்ற உடன் தனது முதல் உத்தரவாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ரூ.2,00,000 வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். சத்தீஸ்கரில் கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது ராஜஸ்தானிலும் விவசாயக் கடன் தள்ளுபடி முதல்வர் அசோக் கெலட்டால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் மத்தியில் பதவிக்கு வந்தால் தற்போது வெற்றி பெற்ற மாநிலங்களில் அறிவித்ததுபோலவே தேசிய அளவில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.
விவசாயக் கடன் தள்ளுபடி என்கிற வாக்குறுதி, நிதி நிர்வாகம் குறித்தான புரிதலே இல்லாமல் நமது அரசியல் கட்சிகள் கையாளும் விபரீதம். இந்திய விவசாயிகள் கடன் வலையில் சிக்காமல் லாபகரமாக விவசாயம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து சற்றும் கவலைப்படாமல், அவ்வப்போது விவசாயக் கடன் ரத்து என்கிற எலும்புத் துண்டை வீசியெறிந்து வாக்குகளுக்காக அவர்களை நமது அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிய முதல்வர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புகளை எதிர்கொள்ள போதுமான நிதியாதாரம் அந்த மாநிலங்களில் இல்லை. அந்தந்த மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து போதுமான நிதியாதாரப் பின்னணியுடன் அறிவிக்கப்பட வேண்டிய விவசாயக் கடன் தள்ளுபடி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக செய்யப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து அந்த முதல்வர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
சத்தீஸ்கரில் தனது தேர்தல் வாக்குறுதியில் குவிண்டாலுக்கு ரூ.2,000 வீதம் நெல் கொள்முதலுக்கு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. இதற்கே ரூ.3,750 கோடி தேவைப் படும். அதற்கான நிதியாதாரமே இல்லாத நிலையில், கூட்டுறவுக் கடன் தள்ளுபடியை எந்த அடிப்படையில் சத்தீஸ்கரின் புதிய முதல்வர் பூபேஷ் பகேல் அறிவித்திருக்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இதே நிலைமைதான் மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் நிலவுகிறது.
மொத்த ஜிடிபி-யில் மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக நிதிப்பற்றாக்குறை இருந்துவிடலாகாது என்பது அடிப்படை விதிமுறை. மத்திய அரசேகூட இந்த விஷயத்தில் தடம் புரள்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலங்களின் மொத்த நிதிப்பற்றாக்குறை 3 சதவீத வரம்பைவிட அதிகமாக இருப்பது தொடர்கிறது. இந்தப் பின்னணியில்தான் இப்போது இந்தியாவின் மூன்று முக்கியமான மாநிலங்கள் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கின்றன.
மாநில நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று நிதிநிலைமையை ஆய்வு செய்திருக்கிறது. புதிதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதை அந்த அறிக்கை அடிக்கோடிட்டு தெரிவிக்கிறது. ஏனென்றால், ஏற்கெனவே மாநிலங்களின் மொத்த நிதிப் பற்றாக்குறை இந்தியாவின் ஜிடிபியில் 0.65 சதவீதம். அதாவது ரூ.1,07,700 கோடி என்று இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவிக்கிறது.
விவசாயக் கடன் தள்ளுபடி எந்தவிதத்தில் பாதிக்கும் என்று கேட்கலாம். மாநிலங்களில் உபரி வருவாய் இல்லாத நிலையில், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையுடன் போராடிக் கொண்டிருக்கும் மாநிலங்கள், விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்கொள்ள கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதுபோல பெறப்படும் கடனுக்கு அதிகமான வட்டி செலுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் நிதிச்சம நிலையை கடன் தள்ளுபடிகள் பாதித்து விடுகின்றன. நியாயமாக வேளாண் உற்பத்திப் பெருக்கத்துக்கும், விவசாயிகளின் மேம்பாட்டுக்கும் செலவிடப்படும் ஒதுக்கீடுகள் நிச்சயமாக இதனால் நிறுத்தப்பட்டு, கடன் தள்ளுபடியை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டு விடுகின்றன. இதன் விளைவாக அடுத்த ஆண்டு விவசாயிகள் மீண்டும் கடனாளிகளாக, அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை அவர்களது உற்பத்திக்குப் போதிய விலை கிடைக்காமல் இருப்பது. 2004-05-லிருந்து 2013-14 வரை வேளாண் ஏற்றுமதி 8.7 பில்லியன் டாலரிலிருந்து 42.7 பில்லியன் டாலர் என ஐந்து மடங்கு உயர்ந்தது. சர்வதேசச் சந்தை வீழ்ச்சியால் அதற்குப் பிறகு வேளாண் ஏற்றுமதி குறைந்துவிட்டிருக்கிறது. அதிக உற்பத்தி காரணமாக பல விவசாயிகளும் போதுமான விலை கிடைக்காமல் பெரும் இழப்பை எதிர்கொண்டு கடனாளியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் 24 வேளாண் பொருள்களில் 21 பொருள்கள் உற்பத்திக்கேற்ற விலையில்லாமல் விவசாயிகளை தெருவில் நிறுத்தியிருக்கின்றன.
அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முறையான வேளாண் பயிர் ஊக்குவிப்புத் திட்டமும், ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கையும் இல்லாததுதான் விவசாயிகளின் வேளாண் இடருக்கு முக்கியமான காரணம். அதை விட்டுவிட்டு தற்காலிக நிவாரணமாக விவசாயக் கடன் ரத்து என்று அறிவித்து, விவசாயிகளையும் திருப்திப்படுத்தாமல் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் செயல்பாடு பேராபத்தில் முடியும்.
No comments:
Post a Comment