விஜய் சேதுபதிக்கு ஒரு ரசிகனின் அன்புக் கடிதம்
Published : 17 Dec 2018 12:20 IST
எஸ்.கோபாலகிருஷ்ணன் சென்னை
அன்புள்ள விஜய் சேதுபதி,
உண்மையான மக்கள் செல்வனாக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் வந்து மக்கள் மனங்களை முடிசூடா மன்னர்களாக ஆண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் தராசின் ஒரு தட்டிலும் உங்களை இன்னொரு தட்டிலும் வைக்கலாம் என்பேன் நான். இதை உங்களது ரசிகனாக மட்டும் அல்ல சினிமாவைக் கவனித்துவரும் ஆர்வலனாகவும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
நட்சத்திர விதிகளை உடைத்தவர்
ஒரு நட்சத்திரம் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று எழுதப்படாத விதிகள் உள்ளனவோ அதையெல்லாம் செய்தும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நீங்கள். பெரிய பட்ஜெட் படங்களில்தான் நடிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு படங்களுக்கு மேல் நடிக்கக் கூடாது, கதையில் நாயகனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும், வில்லத்தனங்கள் செய்யக் கூடாது, அப்படிச் செய்தாலும் அதையும் ஹீரோயிஸமாக மாற்றிக் காட்டும் காட்சிகள் அமைய வேண்டும், யாரிடமும் மொக்கை வாங்கக் கூடாது. எல்லாவற்றிலும் வெற்றி பெறுபவராகவே இருக்க வேண்டும் (சின்னச் சின்ன தோல்விகள் இருந்தாலும் அது அடையப் போகும் பெரிய வெற்றிக்கான தூண்டுகோலாக இருக்க வேண்டும்), வயதை மறைக்க வேண்டும், தோற்றம் இளமையாக இருக்க வேண்டும், ஒல்லியாக இருக்க வேண்டும்… நீங்கள் நடித்த ஒவ்வொரு படத்திலும் இந்த விதிகளில் ஏதேனும் ஒன்றையாவது மீறி இருப்பீர்கள். சில படங்களில் அனைத்தையும் மீறி இருப்பீர்கள். அதையும் தாண்டி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறீர்கள். மற்ற நாயக நடிகர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதற்குச் சொல்லும் சால்ஜாப்புகளை அர்த்தமற்றவை ஆக்கியிருக்கிறீர்கள்.
இதை தமிழ் சினிமாவில் ஒரு வசதியான நிலையை அடைந்தபின் செய்யவில்லை, ’பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என இரண்டே வெற்றிப் படங்களுக்குப் பிறகு மூன்றாவது படத்தில் 40+ வயதுடையவராக எல்லாரிடமும் மொக்கை வாங்குபவராக நடித்தீர்கள். அந்தக் கதாபாத்திரத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தீர்கள். “என் நிஜமான வயதும் தோற்றமும் அதுதான் என்று ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்த விரும்பினேன்” என்றீர்கள். அதுவரை உங்கள் மீது ஒரு சின்ன நல்லெண்ணம் மட்டுமே இருந்தது. நீங்கள் அப்படிப் பேசியதைக் கேட்டபின் உங்கள் மீது மரியாதை பிறந்தது. அந்தப் படத்தைப் பார்த்த பின் உங்களது ரசிகனாகிவிட்டேன். குறிப்பாக அந்த வங்கி மேலாளர் மகளைக் கடத்தி அவரிடம் நேரடியாகச் சென்று பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே நடந்துவரும்போது கூலர்ஸை அணிவீர்களே!!! தமிழ் சினிமாவில் என்னை உணர்ச்சிவசப்பட்டு விசிலடிக்க வைத்த வெகு சில மாஸ் காட்சிகளில் அதுவும் ஒன்று.
இமேஜுக்குள் சிக்காத நடிகர்
ஒரு நாயகனாகவோ நட்சத்திரமாக நீங்கள் இமேஜ் பார்ப்பதில்லை. ஆனால் இதுவே விஜய் சேதுபதி என்றால் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும்தான் நடிப்பார் என்ற இமேஜுக்குள்ளும் நீங்கள் சிக்கிக்கொள்ளவில்லை. அந்த வகையில் நீங்கள் ஒரு புத்திசாலியான நடிகராகவும் பரிணமித்திருக்கிறீர்கள். உங்களுக்கு 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் 57 வயதுக்காரராக நடிக்கும் துணிச்சல் உண்டு. அடுத்த படத்திலேயே (‘நானும் ரவுடிதான்’) முதல் முறையாக க்ளீன் ஷேவ் லுக்குடன் படத்தில் காதலிக்காக ரவுடியாக மாறும் வழக்கமான ஹீரோவாக நடித்து அதையும் ரசிகர்களை ஏற்க வைக்கும் திறமையும் உண்டு
அன்பு அண்ணன்
கலைத் துறையினரின் திரை ஆளுமையையும் நிஜ ஆளுமையையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு நடிகர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க அவர் எப்படிப்பட்ட மனிதராக இருக்கிறார் அல்லது வெளிப்படுகிறார் என்பதும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அந்தத் தேர்வில் நீங்கள் பெரும்வெற்றி பெற்றவர். உங்கள் பேச்சுகளிலும் செயல்பாடுகளிலும் மக்கள் உங்களை நல்ல மனிதராக மட்டும் அல்ல ‘அண்ணன்’ ஆகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதனால் உங்கள் மீது உரிமை எடுத்து விமர்சனங்களையும் உங்களிடம் நேரடியாகச் சொல்கிறார்கள் என்று நீங்களே பதிவு செய்திருக்கிறீர்கள். பல நடிகர்கள் நல்லவர்களாக வெளிப்படுவதுண்டு. ஆனால் உங்களிடம் அதில் உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் படங்களில் செய்பவை மற்றும் செய்ய மறுப்பவையை வைத்துப் புரிந்துகொள்ளலாம். என்றைக்கும் நீங்கள் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலோ வசனங்களிலோ நடித்ததில்லை. எந்த வகையிலேனும் ஒடுக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் படங்களில் நடித்ததில்லை.
படங்களிலும் சரி வெளியிலும் சரி அடித்தட்டு மக்களின் பக்கம் நின்று பேசுகிறீர்கள். இன்றைய மத்திய அரசின் மதவாத ஆதரவுப் போக்கை துணிச்சலுடன் எதிர்க்கிறீர்கள். நீட், நெடுவாசல், ஸ்டெர்லைட் என்று அனைத்துப் போராட்டங்களிலும் மக்கள் பக்கம் நிற்கிறீர்கள். இவற்றால்தான் இளைஞர்கள் உங்களை அண்ணனாகப் பாவிக்கிறார்கள்.
தோற்றம் முக்கியமல்ல
ஒரு நடிகன் என்றால் இத்தகு தோற்றத்தில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புகளையும் நீங்கள் உடைத்துவிட்டீர்கள். கடந்த பத்து ஆண்டுகளில் நடிகைகளும் நடிகர்களும் சற்று சதைப்பிடிப்பாக இருந்தாலே ரசிகர்கள் பலரால் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். ‘விக்ரம் வேதா’ படத்தில் நீங்கள் அதிக எடையுடன் தோன்றினீர்கள். அது அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாகத்தான் இருந்தது. ஆனாலும் உங்களைப் பலர் அதற்காகக் கிண்டலடித்தனர். அவர்களுக்கு எல்லாம் படத்தின் மாபெரும் வெற்றிதான் பதிலாக அமைந்தது. 'செக்கச்சிவந்த வானம்’, '96’ படங்களிலும் உங்கள் தோற்றம் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருந்தது. கதாபாத்திரத்தைப் பொறுத்துதான் நடிகரின் தோற்றம் அமைய வேண்டும் என்பதையும் உங்கள் மூலமாகவே அனைத்து ரசிகர்களும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கொஞ்சம் கவனம் தேவை
அடுத்ததாக உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் நீங்கள் அதிகப் படங்களில் நடிப்பதால் மாதம் ஒருமுறை நீங்கள் நடித்த படம் ஒன்றாவது வெளியாகிவிடுகிறது என்பது. சினிமா பற்றிய உங்கள் அணுகுமுறையைப் புரிந்துகொண்டவர்கள் இதைக் கிண்டலடிக்க மாட்டார்கள். முன்னணி நட்சத்திரம் ஆகிவிட்டாலும் ‘பாக்ஸ் ஆஃபீஸ் கிங்’ என்ற அந்தஸ்தை நோக்கிச் செல்லாமல் தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்கள் பல நடிகர்களைக் கொண்ட படங்கள், குறைந்த நேரம் மட்டும் வந்துபோகும் கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள். ஒரு படத்தின் திரைநேரத்தின் பெரும்பான்மைப் பகுதியை நாயகனே ஆக்கிரமித்துக்கொள்ளும் பார்வை உங்களிடம் இல்லை. உங்களைத் தேடி வரும் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைத் தவிர்க்க உங்களுக்கு மனதில்லை. இவை எல்லாம்தானே உங்களை அதிக படங்களில் நடிக்க வைக்கிறது. இதை உண்மையான ரசிகன் கொண்டாடத்தான் முடியுமே தவிர கிண்டலடிக்க முடியாது. இருந்தாலும் ஒன்று. நிறைய படங்கள் நடிக்கும்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியடையும் படங்களினால் ஏற்படும் ஆபத்து அதிகரித்துவிடும். அப்படிப்பட்ட படங்களில நீங்கள் அதிகம் தென்படுவதாகத் தோன்றிவிட்டால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடக் கூடும். எனவே கதைத் தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்.
கெத்து காட்டுங்க சார்
இன்னொரு விஷயம். நீங்கள் எல்லா விதமான படங்களிலும் நடிக்கிறீர்கள். எந்த இமேஜ் வட்டத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளவில்லை ஹீரோயிஸம் பற்றி அதிக அக்கறை காட்டுவதில்லை என்பதெல்லாம் சரிதான். ஆனால் வெத்து ஹீரோயிஸம்தான் தவறே தவிர கெத்தான வேடங்களில் நடிப்பதில் தவறில்லை., ‘சூது கவ்வும்’, ‘நானும் ரவுடிதான்’, ‘ஜுங்கா’ போன்ற படங்களில் நீங்கள் தாதா அல்லது ரவுடியாக நடித்தாலும் அவற்றிலும் உங்கள் கதாபாத்திரம் மொக்கை வாங்குவது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட படங்களில் அந்த அளவுக்கு யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
குறிப்பாக ‘ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருப்பீர்கள். அந்தப் படத்தில் நீங்கள் வந்துபோகும் தருணங்கள் ‘கெத்தான ஆள்’என்பதற்கு திரைப்பட உதாரணமாக இருந்தீர்கள். அதைப்போலவே ஒரு முழுநீளப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களாகிய நாங்கள் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட படங்களிலும் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல அதுபோன்ற கதைகள், கதாபாத்திரங்கள் உங்களது இமேஜை உயர்த்தும். ரஜினிக்கு ஒரு ‘பாட்ஷா’, விஜய்க்கு ஒரு ‘கில்லி’ மாதிரி உங்களுக்கு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு மாஸ் படம் அமைய வேண்டும். அந்தக் கட்டத்துக்கு சென்றாலும் நீங்கள் எல்லா வகையான படங்களிலும் நடிப்பதை நிறுத்திவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இதைக் கேட்கிறேன்.
பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
கிருஷ்ணா.
No comments:
Post a Comment