Tuesday, December 18, 2018

சுகமான சுமைகள் தேவை

By இரா. கதிரவன் | Published on : 18th December 2018 01:33 AM |

குறிப்பிட்ட சில பணிகளைச் செய்பவர்களுக்கு, அவர்களின் பணிச்சூழல், பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை அவர்களுக்கு உடல்நலக் கேட்டை, பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ரசாயனக் கூடங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு, தோல், நுரையீரல் சார்ந்த நோய்களும், தொடர்ந்து பல மணி நேரம் நின்றுகொண்டே பணி செய்பவர்களுக்கு மூட்டுப் பிரச்னைகளும் வரக்கூடிய வாய்ப்பு அதிகம்.

இவை தொழில்சார் நோய்கள் எனப்படும். தொழிலாளர்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் அவர்களது கல்விச் சுமை சார்ந்த விஷயங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது வருத்தமான விஷயம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்விச் சூழல், கல்வித் திட்டம் , பள்ளியில் மாணவர்களின் லேசான மனநிலை இவையெல்லாம் மாறி, தற்போது அவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.ஆரம்ப வகுப்புகளிலிருந்தே மனரீதியான அழுத்தம், பெற்றோர் -ஆசிரியர் என இருபுறமிருந்தும் தரப்படுகிறது. இவை தவிர, அவர்கள் நாள்தோறும் சுமக்கும் புத்தக மூட்டை அவர்களை உடல் ரீதியாகவும் பாதிக்கின்றது.
மேலை நாடுகள், மாணவர்கள் சுமக்கும் புத்தகங்களின் எடை, பைகளின் அமைப்பு, அவை மாணவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த ஆய்வுகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டன.
அந்த ஆய்வுகள், மாணவர்கள் அதிக எடையுள்ள புத்தகச் சுமையை சுமப்பதால் , தோள்பட்டை மற்றும் கழுத்துப்பகுதிகளில் தசைப் பிடிப்பு, முதுகு வலி மற்றும் அவை சார்ந்த பிரச்னைகள், சுமையைத் தூக்கிச் செல்லும்போது தடுக்கி விழுவதற்கான சாத்தியம், அதனால் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறிந்தது.
தொடர்ந்து பல ஆண்டுகள் தனது உடல் அமைப்புக்கும், சக்திக்கும் ஒவ்வாத சுமையைத் தூக்குவதால், நாளடைவில் அது அவர்களின் நிற்றல்- நடத்தல் போன்றவற்றைக்கூட பாதிக்கக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது .
இந்த ஆய்வின் அடிப்படையில், மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை, அவர்களின் உடல் எடையில் பத்து சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நெறிமுறை மேலை நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது.

இந்தியாவில், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்னர், புத்தகச்சுமை மேலும் மேலும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை. இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் தொடுத்த வழக்கின் அடிப்படியில் மஹாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றம், மாணவர்கள் சுமக்கும் புத்தகங்கள் அவர்களது எடையில் பத்து சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதனை கல்வித் துறை உறுதி செய்ய வேண்டுமென்று கூறியிருந்தது.

தெலங்கானா மாநிலம், மாணவர்களின் புத்தகச் சுமை குறித்து தெளிவான நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. இந்நெறிமுறைகளை பிற மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.
இச்சூழலில் தமிழ்நாட்டிலும், மாணவர்களின் புத்தகச்சுமை குறித்து, கருத்தினையும் தீர்ப்பினையும் உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கிறது . இத்தீர்ப்பு, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஆறுதல் தருவதாக இருப்பினும், இதன் முழுப்பயன், இத்தீர்ப்பினை அரசு சரிவர நடைமுறைப்படுத்துவதிலேதான் இருக்கிறது.

உயர்நீதிமன்றம், மாணவர்களின் புத்தகப்பை எடை, அதிகபட்சம் ஐந்து கிலோவிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, புத்தகச்சுமை குறித்த வழிமுறைகளைத் தெளிவாக இயற்றுமாறு அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. இவை உடனடியாக செய்யப்படவேண்டும்.

இது ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன்னர், தமிழக அரசு மாணவர்களுக்கான இலவசப் புத்தகப்பைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அதில், முதல் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, குறைந்தபட்சம் பத்து கிலோவிலிருந்து அதிகபட்சம் இருபது கிலோ வரை சுமப்பதற்கு ஏற்ப இருக்கவேண்டும் என்று நிர்ணயம் செய்திருப்பது நெருடலான விஷயமாகும். இது, அதிகபட்ச எடை ஐந்து கிலோ என்ற வழிமுறைக்கு முரண்பட்டதாகும். அரசு இதனைக் கருத்தில் கொண்டு உடனே சரிசெய்ய முன்வர வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு எளிய குடும்பத்துக் குழந்தைகள் வருவதை உறுதி செய்வதற்கும், முக்கியமாக சிறார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு பெரும் பொருளினை சத்துணவு திட்டத்துக்காக செலவிடுகிறது.

ஆனால், அத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, பெரும் புத்தக மூட்டையை சுமப்பதனால், நேரெதிர் விளைவான ஆரோக்கியக் குறைவுதான் ஏற்படும். 

புத்தக மூட்டை பிரச்னைக்கான தீர்வு, புத்தகப் பைகளின் அளவிலோ, புத்தகங்களின் எடையிலோ மட்டுமல்லாது, தினசரி பாட அட்டவணை போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. அவையும் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

அரசு, கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி, பள்ளி நிர்வாகம், பெற்றோர் -ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு ,தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அவை வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருந்தால்தான் நல்ல பலன் கிட்டும். 

நம் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அது பெரும் சுமையாக மாறிவிடாமலும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...