Monday, December 9, 2019

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் 2,668 அடி உயர மலைஉச்சியில் ஏற்றப்படுகிறது



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பதிவு: டிசம்பர் 09, 2019 02:30 AM திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான், திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னிபிளம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் அந்த மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தனாரீஸ்வரர், சாமி சன்னதியிலிருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தனாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றியபின்னர் அன்று இரவு தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. மகாதீபத்தை தொடர்ந்து 4 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவடைகிறது

பாதுகாப்பு பணிக்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். மகாதீபம் ஏற்றும் மலைஉச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024