Saturday, December 13, 2014

மாலைப்பொழுது...மயக்கும் கடை வீதி!


ஜில்லுனு அடிக்கிற காற்று... இதமா இருக்கிற கால நிலை... சுளீர்னு அடிக்கிற வெயிலின் தாக்கம் குறைந்து சூரியனின் அழகான இன்னொரு முகம்... மாலை ஒரு 5 மணி இருக்கும்.
இடம்- புதுக்கோட்டை கலெக்டர் ஆபீஸ் நோக்கி  செல்லும் வீதி...

ரோட்டு ஓரத்துல இருக்குற மாலை நேரக் கடைகள் எல்லாம், மழை பொழிந்த உடனே தலை நீட்டும் காளான்களை போல மெல்ல மெல்ல தனது இடங்களில் முளைக்க ஆரம்பிக்கின்றன. சும்மா "கம கம"னு அடிக்கிற மசால் வாசம்,  ரோட்ல போறவங்களை எல்லாம் தன் பக்கமா ஈர்க்க ஆரம்பிக்க, சுடச்சுட உடனே ரெடியாகுற ஃபாஸ்ட்புட் வியாபாரம் களைக்கட்ட ஆரம்பிக்குது...
"வாங்க சார் என்ன சாப்பிடுறீங்க? வாங்க சார் நம்ம கடைக்கு வாங்க சார்! வாங்க சார்..!."னு ரிசர்வேசன் இல்லாத லாங்க் டிராவல் பஸ்ல, டிக்கெட் ஃபில் பண்ற மாதிரி பாஸ்ட்புட் கடைகளிலும் வாடிக்கையாளர்களை புக் பண்றதுக்குன்னே நிறைய ஆளுங்க அங்கேயும் இங்கேயும் தங்களோட ஆள் பிடிக்கிற வேலையில மும்முரமா இருக்காங்க!

அந்த வழியா போன நம்மளையும் "வாங்க சார்!., சூடா சிக்கன் 65, காளான் கிரேவி, மட்டன் சுக்கா, பானி பூரி, பேல் பூரி, போலி, சிக்கன் பக்கோடா, சிக்கன் நூடல்ஸ், சிக்கன் ரைஸ், எக் நூடல்ஸ், எக் ரைஸ், மட்டன் சூப்!..." இப்படி எல்லா வகையான டிஷ்சையும் ஒரே மூச்சுல சொல்லிமுடிச்சு நம்மள கையோட அவங்க கடைக்கு கூட்டிட்டு போய் உட்காரவைச்சுட்டாரு ஒரு ஆள் பிடிக்கிறவரு!

மேலும் கீழுமாக பார்வையை ஓடவிட்டோம். 20 பேர் ஒரே நேரத்துல உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி மரத்துக்கு கீழே டேபிள் எல்லாம் போட்டு, மழை பெய்தால் வாடிக்கையாளர்கள் நனையாம இருக்க, மரக்கிளைகளில் தார்பாய்கள் எல்லாம் விரிச்சு, ஒரு மினி ஹோட்டல் பீலிங்ஸ் ஏற்பட்டது.  நம்மளோட ஆர்டரை வாங்கிட்டு போய்ட்டு மூணே நிமிடத்துல, சுடச்சுட கொண்டுவந்து "சார் இந்தாங்க சார் உங்களோட ஆர்டர்"னு பணிவோட ஒரு பிளேட் நீட்டப்பட்டது!
அதை ருசி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,  நம்மை மாலைப்பொழுதின் மயக்கத்திலிருந்து விழித்தெழ வைப்பதுபோன்று, "பளீர்னு நம் கண்களை கவரும் மின்விளக்குகளும், சீரியல் செட்டுகளும் மினிமினுப்புடன் ஒளிருகின்றன.  நேரம் செல்லச்செல்ல கூட்டம் அலைமோதுகிறது. கடையைச்சுற்றி நிற்பதற்கு கூட இடமில்லை எங்கின்ற போது "ஆள் பிடிப்பவர்கள்" பார்சல் கட்டும் டிபார்ட்மெண்ட்டிற்கு உடனடியாக மாற்றப்படுகிறார்கள்.

கேஷ் கவுண்டரில் இருக்கும் இருவர் பணத்தை உள்ளே வைப்பதும், வெளியே எடுப்பதுமாக மாறி மாறி கணக்கில் தவறில்லாமல் தனது வேலையை செய்கின்றனர். "வியர்த்து விறுவிறுத்துக்கிட்டே நிற்பதற்கு கூட நேரமில்லாமல் கேட்குற ஆர்டரை உடனே செஞ்சு தர ஷெப்தான் அங்க ஹைலைட் பர்சன்!
"ஆர்டர் மொத்தத்தையும் காதுல வாங்கி உடனே செஞ்சு, அத கேட்குற வாடிக்கையாளர்களுக்கு கரெக்டா சப்ளையரை கூப்பிட்டு சர்வ் பண்ற வேலையை கொஞ்சமும் சலிப்பு இல்லாம தொடர்ந்து செய்யுற ஷெப்ப்பிடம் பேச்சுக்கொடுத்தோம்.
" என் பேரு ஜெயராமன். நான் 8-வது வரைக்கும் படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே நல்லா சமைப்பேன் சார்.  சாயங்காலம் 5 மணிக்கு திறக்குற நம்ம கடை இரவு 10 மணிக்கு தான் மூடுவோம். கடைய திறந்த 1.30 மணி நேரத்துலயே போட்ட முதலீட்டை எடுத்துடுவோம். மத்தது எல்லாம் லாபம் தான். இப்ப நம்ம கடைக்கு நிறைய ரெகுலர் கஸ்டமர்ஸ் வர்றாங்க!. சிலர் நம்ம கடையோட டேஸ்ட்ட கேள்விப்பட்டு வர்றாங்க. அவங்களோட உடல் நலத்தையும் கருத்துல எடுத்துக்கிட்டு நாங்க நல்ல சுத்தமான முறையில சமைக்கிறதுனால நிறைய வாடிக்கையாளர்கள் மன நிறைவோட சாப்பிடுறாங்க!..." என்றார் உற்சாகத்துடன்!
"இப்ப நமக்கு போட்டியா நிறையபேர் ஃபாஸ்ட்புட் கடையை நமக்கு பக்கத்துல திறந்துருக்காங்க. ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் இடையே இருக்கிற நட்பும் ஆதரவும்தான் நம்ம வியாபாரத்தை நல்ல முறையில கொண்டுசெல்லுது!..." என்று பேசிமுடித்துவிட்டு மீண்டும் தனது ஆர்டர்களை கேட்டு விறுவிறுப்புடன் வேலையை தொடங்கிவிட்டார்!.

நாம் நடை கட்ட துவங்க, மீண்டும் அந்த "வாங்க சார்! வாங்க சார்! " குரல்,  மெல்ல மெல்ல சுருதி குறைந்து கேட்டுக்கொண்டிருந்தது.

ர.நந்தகுமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024