ஒரு திரைப்படத்தை குறைந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு, ஓடும் நாட்களின் அடிப்படையில் வெற்றியைக் கணித்தது ஒரு காலம். அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்து, முதல்நாள் வசூல் அடிப்படையில் திரைப்படம் வெளியான அன்று மாலையே படத்தின் வெற்றிவிழா கொண்டாடுவது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலை.
அந்த அளவுக்கு டெக்னாலஜியின் வேகத்துக்கு சினிமாவும் ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிலையான காலக்கட்டத்திலும் ஒரு படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, தொடர்ந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அதுதான் ஒரு படைப்பின் உச்சகட்ட வெற்றி!
அந்த உச்சகட்ட வெற்றியைத் தொட்டுத் தொடர்ந்துகொண்டிருக்கிறது 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' என்ற இந்திப்படம். ஷாரூக்கான், கஜோல், அனுபம் கெர், கரண் ஜோஹர் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படம் வெளியானது அக்டோபர் 20, 1995. காதலை மையமாகக்கொண்ட சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம்தான், ஷாரூக்கானை இந்தியாவைக் கடந்தும் பரவலாக்கியது.
படம் வெளியான நாளிலிருந்து மும்பை 'மரதா மந்திர் சினிமா' திரையரங்கில் 19 வருடங்களாகத் தொடர்ந்து திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லி ஜாயங்கே' திரைப்படம் நேற்றுடன் 1000 வாரங்களை நிறைவு செய்திருப்பதோடு, பகல் 11.30 மணிக்காட்சியாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
- கே.ஜி.மணிகண்டன்
No comments:
Post a Comment