Saturday, December 13, 2014

மின்சாரத்தை தொட்டால் மட்டுமல்ல இனி பயன்படுத்தினாலும் 'ஷாக்'தான் போல!



சென்னை: தமிழகத்தில் 15 சதவிகித மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாடகைதாரர்களுக்கு 'ஷாக்' ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின்தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மின்நுகர்வோர்களுக்கு 'ஷாக்'காக மின் கட்டணத்தை இன்று முதல் 15 சதவிகிதம் உயர்த்துவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலிருந்தும் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் வாடகை வீடுகளில் குடித்தனம் நடத்தி வருகின்றனர். வாடகை வீடுகளை பொறுத்தவரைக்கும் மாதந்தோறும் வீட்டு வாடகை தொகையோடு, மின் கட்டணத்தையும் வீட்டின் உரிமையாளர்கள் வசூலித்து வருகின்றனர். பெரும்பாலான வாடகை வீடுகளில் அரசு நிர்ணயித்த மின் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

அதாவது 100 யூனிட் வரை பயன்படுத்தியவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.60 என்றும் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டணம் என்று அட்டவணையை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதை வாடகை வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு இப்போது 8 ரூபாய் முதல் 10 ருபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் இடத்துக்கு இடம், வீட்டின் உரிமையாளர்களை பொறுத்து வேறுபடும். சில வீடுகளில் ஒரே மின்இணைப்பு எண் மூலம் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு சப் மீட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்படுவது சென்னையில் சகஜம்.

அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும் யாரும் புகார் கொடுப்பதில்லை. காரணம் வாடகைக்கு வீடு கிடைப்பது சென்னையில் குதிரை கொம்பாக இருக்கிறது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் மின் கட்டணத்தை வேறுவழியின்றி வாடகைதாரர்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் 15 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வீட்டின் உரிமையாளர்களும் ஒரு யூனிட் 15 ரூபாய் வரை உயர்த்துவதாக வாடகைதாரர்களிடம் சொல்லி விட்டனர். இதனால் இனி சாதாரண குடும்பங்களில் மின்கட்டணத்துக்கு மட்டுமே சில ஆயிரங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வாடகை தொகைக்கு பாதியாக மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு நடுத்தர மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே சமீபத்தில் ஆவின் பால் விலையை அரசு உயர்த்திய பாதிப்பிலிருந்து ஏழை, எளிய மக்கள் மீள்வதற்குள் அடுத்த அடி மின்கட்டணம் மூலம் விழுந்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போதிய சம்பளம் இல்லாமல் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்காகவே அரசு செயல்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இதுகுறித்து தேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், "சென்னையில் வசிக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் வாடகை வீடுகளில் குடியிருக்கின்றனர். இவர்களுக்கு மின்கட்டண உயர்வு நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வடசென்னை பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள், அரசு அறிவித்த உடனே யூனிட் 15 ரூபாய் வரை என்று மின்கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டனர். வீட்டின் உரிமையாளர்களிடம் இதுகுறித்து கேட்டால், 'வீட்டை காலி செய்யுங்கள்!' என்று கூறுகின்றனர். இந்த வீட்டை விட்டு அடுத்த வீட்டுக்கு சென்றால் அங்கேயும் இதே நிலை" என்றார்.

மின்சாரத்தை தொட்டால் மட்டுமல்ல இனி பயன்படுத்தினாலும் 'ஷாக்'தான் போல!

-எஸ். மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024