திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது
மேடைகளில் கொண்ட பற்று காரணமாக பாடசாலைகளைத் துரிதமாகத் துறந்தவர் பத்மினி. பால்யத்தில் சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நீடித்த அவரது தொடர் பங்களிப்பு உன்னதமானது. நடித்த அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியது அன்றைக்கு அபூர்வம். அவரது சாதனைகளின் பிள்ளையார் சுழி அது!
அதனாலேயே, தமிழில் பத்மினி நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், அவர் ஏற்று ஜொலித்த பாத்திரங்கள் தந்த மன நிறைவில், யாரும் அதை உணர்ந்ததே கிடையாது. அவரது படப் பட்டியலை சற்றே எண்ணிப் பார்த்தபோது வியப்பு தோன்றியது. ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்திருந்தார். 1970-களில் அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடும்பம் நடத்தச் சென்றார். அப்போது, ஏறக்குறைய எட்டுப் படங்கள் (1971-ல்) பத்மினி நடிப்பில் ஒரு சேரத் தமிழில் வெளிவந்தன. அவற்றில் அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி போன்ற பக்திச் சித்திரங்களும் அடங்கும்
வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.
தமிழில் பத்மினி பங்கேற்ற நூற்றுச் சொச்சம் படங்களில், அவர் கணேசனோடு நடித்ததே அதிகம். பணம் படத்தில் தொடங்கி லட்சுமி வந்தாச்சு (சூப்பர் டைட்டில் பொருத்தம் இயல்பாகவே அமைந்துவிட்டது. திரையில் அவர்களது முதலுக்கும் நிறைவுக்கும்) கடந்தும், கடைசி வரையில் நட்போடு நீடித்தது அவர்களின் மிக நீண்ட கலைப்பயணம், தோழமை யாவும்.
85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.
திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும் (பப்பி) அக்கா லலிதாவும் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. பப்பியின் எட்டு வயசுக்கெல்லாம் அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம் சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்துக்கு, சிறப்பு விருந்தினர் ஜோத்பூர் மகாராஜா ஜோராகக் கை தட்டினார்.
அக்கா லலிதாவோடு ஏழு வயது பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில் பங்கேற்றார். அன்றைக்குப் 'பாரிஜாத புஷ்பகரணம்' நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம். தலைமை கலைவாணர்.
'தேவலோகத்தில் எல்லாரும் அழகாக இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்'. என்.எஸ்.கே.யின் பாராட்டில் த்வனித்த கிண்டலுக்கும் கேலிக்கும் எல்லாரும் சிரித்தார்கள். ஆனால் பப்பிக்கோ, வெட்கச் சிறகுகள் முளைத்தன. தம்பூராவால் தன் தாழம்பூ முகத்தை மூடிக்கொண்டார்.
பரம்பரையான கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல லலிதாவும் பத்மினியும். அவர்களுக்குள் அந்த ஆசை விதையை ஆழமாக ஊன்றியவர் மிஸஸ் பிள்ளை. பப்பியின் அம்மாவுக்கு அக்கா. பெரியம்மாவுக்கு, ஆறுமுகங்கள்போல் அத்தனையும் ஆண் பிள்ளைகள். எனவே, தங்கை மகள்களின் மீது தனிப் பிரியம்! பெரியம்மாவுக்கு, மலேசியாவில் நாலாயிரம் ஏக்கரில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. வசதியான வாழ்க்கை. பணம் லட்சியமில்லை. தங்கை பெற்ற செல்வங்களுக்குத் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிப் போட்டார்.
பப்பியின் மாமா, பம்பாயில் கடற்படையில் கமாண்டர். உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் பெண்களை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சலங்கைகள் பேசின. இளம் தளிர்களின் அங்க அசைவுகளில், ஜதிக்குப் பதில் சொல்லும் நயண பாஷைகளில், நான்கு பாதங்களின் அதிவேகப் பாய்ச்சலில், கலா மேதை கண் கலங்கினார். ஏற்கெனவே திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளையிடம் தேர்ச்சி பெற்றவர்களை சினிமாவில் ஆட அழைத்தார்.
'ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவில் கல்பனா என்ற பெயரில் முழுநீள நாட்டியச் சித்திரம் தயாரிக்கப்போகிறேன். அதில் நீங்களும் ஆடுகிறீர்களா' என்றார். நிஜத்தில் மெய்சிலிர்த்துப் போனது இருமலர்களுக்கும். கலைச் சமூகத்தின் மேட்டுக்குடிகளிடம் வாசம் பரப்ப வந்திருக்கும் வசந்த அழைப்பைத் தவறவிடலாமா? எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பா அது!
அரண்மனை அந்தப்புரங்களில் ஆடியவர்கள், சினிமா ஸ்டுடியோவில் தடம் பதித்தார்கள். சந்திரலேகா ஷூட்டிங்கும், கல்பனாவுக்கான நடனப் பயிற்சிகளும் வருடங்களை விழுங்கியபடி நடந்தன. ராஜ வம்சத்து யவன ராணிகளை, வாசனின் ஊழியர்கள் பிரியத்தோடு கவனித்தார்கள். அவர்களில் நல்ல பெர்சனாலிடியும் சுறுசுறுப்பும் உடையவராக, பத்மினியின் கண்களுக்குத் தட்டுப்பட்டவர் ஜெமினி கணேசன்!
கல்பனா ரிலீஸுக்கு பிறகு காலத்தை விரயம் செய்யாமல் 'டான்ஸ் ஆஃப் இந்தியா'வைத் தொடங்கினார்கள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவாபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்றச் சின்னச் சின்ன அயிட்டங்களைத் தாங்களே உருவாக்கி ஆடினர்.
சென்னைக்கு வந்தால், பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில் நின்றவை, லலிதா - பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.
'ஆஹா, எவ்வளவு களையான முகம் இருவருக்கும். அவர்கள் தன் சொந்த மண்ணான காரைக்குடியில் வந்து ஆடமாட்டார்களா. வேதாள உலகத்தில் நடிக்கவைத்தால் வசூல் கூடுதலாக இருக்குமே...' இதய வீணை மீட்டிய இனிய ராகத்துக்கு விடை தேடிப் புறப்பட்டார்.
'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்'. கலை உலகம் தேடிச் சென்று கேட்டபோதெல்லாம் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பினார்கள் ஆடல் அரசிகள் இருவரும்.
சொல் புதிது. பொருள் புதிது என்று புதுமை விரும்பியாக வாழ்ந்தவர் மெய்யப்பன். நினைத்ததை முடிக்கும் திறமைசாலி. பலமுறை தீர யோசித்துத் தொண்டைக்குழிக்குள் ஒத்திகை பார்க்காமல் ஒரு வார்த்தை பேசமாட்டார்.
'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும்'. உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் செட்டியார்.
வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது பதிந்தது. விளைவு, திருவிதாங்கூர் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் படமும் போணி ஆகாது என்ற நிலை விரைவில் வந்தது. சுமார் நூற்றைம்பது சினிமாக்களில் வெறும் நடனம் மாத்திரம் ஆடினர்
எல்லோரையும் போலவா கிருஷ்ணன். குடும்ப நண்பர் ஆயிற்றே! தேவதைகளின் தாயாரை நேரடியாகவே அணுகினார், நாயகி வாய்ப்போடு.
மணமகள்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன். அதில் ஹீரோயின்களா உங்க பொண்ணுங்க நடிக்கணும்'.
சரஸ்வதி அம்மாளுக்குச் சந்தேகம். பப்பிக்குள் அந்தத் திறமையெல்லாம் அடங்குமா? டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, அஞ்சலி, வசுந்தராபோல் நடிப்பதெல்லாம் அவளுக்குச் சாத்தியமா? தகுதி இருக்கட்டும். அதற்கான பக்குவம் இன்னமும் வரவில்லையே. இந்தக் கார்த்திகை போனால்தானே பதினாறும்கூடப் பூர்த்தி ஆகும். (பத்மினி பிறந்த தேதி டிசம்பர் 13).
'சினிமால நடிக்கிறதுன்னா கதையை காட்சியைப் புரிஞ்சிக்கிட்டு செய்யணுமே. அவ சின்னவ. இன்னும் விவரம் போதாது' அன்னை சிந்தித்தார். அவரது தயக்கத்தின் நொடிகளில், கலைவாணர் தாயம் போட்டார்.
'நல்லா நடனம் ஆடறவங்களால நல்லா நடிக்கவும் முடியும். நீங்க சம்மதம் சொல்லுங்க. உங்க பப்பியை ஸ்டார் ஆக்கிக் காட்டறேன்'.
கிருஷ்ணன் சொன்னது அதுவரையில் நிரூபிக்கப்படாத ஒன்று. ஏவிஎம்மின் வாழ்க்கை படம் மூலம் வைஜெயந்திமாலா அறிமுகமாகிய நேரம். குமாரி கமலா, குசலகுமாரி, சாய் சுப்புலட்சுமி போன்றோர் நாட்டியத் தாரகைகளாக ஒளி வீசிய அளவு, நடிப்பில் அரிச்சுவடி வகுப்பைக்கூடத் தாண்டாமல் போனார்கள்.
தண்டவாளத்தின் இரு பக்கங்கள்போல் நடனம், நடிப்பு இரண்டிலும் எடுத்த எடுப்பில் எழிலரசி பத்மினிபோல் புகழின் தொடர்வண்டியை ஓட்டி, சிகரம் தொட்டவர் இன்றுவரை எவரும் கிடையாது.
சரஸ்வதி அம்மாளுக்குக் கண்டிப்பு ஜீவ நாடி. அவரது விழி அசைவுகளுக்குள் பத்மினியின் கால்ஷீட் கடைசிவரையில் கட்டுண்டு நின்றது. ரசத்துக்குப் பெருங்காயம் போடுவதில் சந்தேகம் வந்தாலும், நியூஜெர்ஸியில் இருந்து ட்ரங்க்கால் போட்டு அம்மாவிடம் கேட்பார் திருமதி பத்மினி ராமச்சந்திரன்.
டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டைரக்டர் கே.சுப்ரமணியம் போன்ற கலை மேதைகள் மிக வேண்டியவர்களாக இருந்ததால், சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கே.சுப்ரமணியம், கதகளி ஆடிக்கொண்டிருந்த சகோதரிகளுக்கு, பரதநாட்டியத்தையும் கட்டாயமாகக் கற்றுத் தரச் சொன்னப் பிதாமகன். 1944-ல் பத்மினியின் குடும்பம் சென்னைக்குக் குடி வந்தபோது, தன் வீட்டில் தங்க இடம் தந்து ஆதரவு அளித்தவர்.
1950-ம் ஆண்டின் மிகச் சிறந்த காவியம், ஏழை படும் பாடு. கே.ராம்நாத் என்ற மாபெரும் திரைச்சிற்பி இயக்கியது. அதில், வி.கோபாலகிருஷ்ணனுடன் கனவுக் காட்சியில் பத்மினி தோன்ற வேண்டும்.
'பப்பி அப்படி நடிக்கமாட்டாள்' என, தயாரிப்பாளரைத் தவிக்க வைத்தார் தாயார். இயக்குநர் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், தங்கை ராகினிக்கு ஆண் வேடம் போடப்பட்டது. இளைய சகோதரியுடன் தன் முதல் காதல் பாடலைப் பாடி நடித்தார் பத்மினி.
மணமகள் தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில், வியர்வைக் குளத்தில் நீராடினார் பத்மினி. தமிழை கொச்சையாகப் பேச மட்டும் தெரிந்த அவரிடம், மு.கருணாநிதியின் வசனத்தைக் கொடுத்தார்கள். அடுத்து, புடைவையை நீட்டி கட்டிக்குங்க என்றார் காஸ்ட்யூமர். சேலை, இடுப்பை விட்டு நழுவிற்று. நாயகியின் தவிப்பைப் புரிந்துகொண்டார் மதுரம். 'போய் ரெடிமேட் ஸாரியை வாங்கிட்டு வாங்க என்றார் தயாரிப்பு நிர்வாகியிடம்.
பத்மினி அணிந்துகொண்டு நடிக்க, தன் சொந்த நகைகளைப் பூரிப்போடு வாரி வழங்கினார் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மற்றொரு சங்கீதவாணி எம்.எல்.வசந்தகுமாரி, பத்மினிக்காகத் திரையில் பாடினார். எல்லாம் இன்பமயம் எனத் தொடங்கி, 65 ஆண்டுகளாக வசீகரிக்கிறது அந்த அற்புத கீதம்.
மணமகளில் பத்மினிக்குக் காதலன் யார் தெரியுமா? பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம். பாவம் பத்மினி. சிவாஜி கணேசனின் இணையற்ற ஜோடியாகப் புகழ்பெறும் வரையில், அவருக்கு நாயகனாக வாய்த்தவர்கள் அவரைவிட வயதில் மூத்த டி.எஸ்.பாலையா, கே.ஆர்.ராமசாமி, நாகையா, எஸ்.வி.சுப்பையா எனப் பட்டியல் நீள்கிறது.
மணமகள் மகத்தான வெற்றியைப் பெற்றது. கலைவாணர், பப்பியை விடுவதாக இல்லை. தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அவரது பணம், சிவாஜி கணேசனின் இரண்டாவது படமாக வெளியானது. அதைத் தயாரித்தபோதும் பத்மினியை மறக்கவில்லை.
கணேசனுக்குப் பத்மினியோடு நடிப்பது கனவுபோல் இருந்தது. பராசக்தி எப்போது ரிலீஸாகும் என்று தெரியாத நிலை. பப்பி ஏற்கெனவே புகழ் பெற்ற நட்சத்திரம். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பது போன்ற அற்புதமான முகத்தோற்றம்! அழகின் ஆலயத்துடன் நடிக்கும் ஆனந்தத்தில், இளமை கரை புரண்டு ஓடியது புதுமுகத்துக்கு.
அவர்கள் இருவரும் நடித்த முதல் காட்சி, மங்களகரமாக ஆரம்பித்தது. அன்றைய இரவு, தன்னுடைய நிஜ திருமணத்துக்காக சுவாமிமலைக்குச் செல்ல வேண்டியவர் கணேசன். காலையில், மணமகள் பத்மினியின் கழுத்தில் சினிமா தாலியைக் கட்டி அவரை மாமியார் வீட்டுக்கு அழைத்து வருவதாகப் படம் பிடித்தார்கள். பிற்பாடு சந்தித்த வேளைகளில் சிரித்துச் சிரித்து மகிழ, சிவாஜிக்கும் பத்மினிக்கும் கிடைத்த இனிப்பு அவல், அந்தத் தித்திப்பான முதல் சம்பவம்.
பணம் படத்தைத் தொடர்ந்து அன்பு, இல்லற ஜோதி எனத் தொடர்ந்தது சிவாஜி - பத்மினி ஜோடி. இரண்டிலும் ஒரு விசேஷம். படங்களுக்கு நடுவில் ஓரங்க நாடகம். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவாக கணேசனும், டெஸ்டிமோனாவாக பத்மினியும், அன்பில் வாழ்ந்து காட்டினார்கள்.
கண்ணதாசன் வசனம் எழுதிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான இல்லற ஜோதியில் சலீம் - அனார்கலியாக சிவாஜி - பத்மினியைச் சந்தித்தார்கள் ரசிகர்கள். ஓரங்க நாடகத்துக்கு மட்டும் காதல் வசனம் எழுதியவர் கலைஞர்!
தினம் ஓயாமல் ஒலித்த சலங்கை ஒலிகளுக்கு நடுவே, பத்மினி கேமரா முன்பு தோன்றினார் என்றே சொல்ல வேண்டும். தூக்கம் தொலைத்த இரவுகளில், பத்மினியின் பஞ்சுப் பாதங்கள் ஓய்வுக்காக ஏங்கும். கடிகாரங்கள்கூட சாவி கொடுத்தால்தான் ஓடும். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ராத்திரி பகல் பார்க்காமல், பதத்துக்கு ஆடினார்கள். ராமாயணம், கண்ணகி, தசாவாதாரம், வள்ளித் திருமணம் என நீண்ட நெடிய நாட்டிய நாடகங்கள். கலைத் தாகமா... புகழ் மோகமா எனப் பட்டிமன்றம் நடத்தலாம். வெகு சீக்கிரத்தில், சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த 12 பங்களாக்கள் அவர்களுக்குச் சொந்தமானது.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் தேதியை பாரதப் பிரதமருக்காக ஒதுக்கினார்கள். பத்மினி குழுவினரின் 'கீதோபதேசம்', நேருவுக்கு மிகவும் பிடிக்கும். பாதி ஆட்டத்தில் தன்னை மறந்து அபாரம் அபாரம் என்று கைகளைத் தட்டுவார் ஜவஹர். இந்தியர்களின் ரசிப்புத்தன்மைக்கு நேற்றைய உதாரண புருஷர். உலகின் ஒப்பற்ற தலைவரின் முன், அவரது பிறந்த நாள் தோறும் ஆடும் பாக்கியம், இந்தியாவில் எத்தனை நடன மணிகளுக்குக் கிடைக்கும்!
பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம்.
1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா...
2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி...
3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி...
4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி...
5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி
ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த சௌகார் ஜானகி, கிரிஜா, மாலதி, சாவித்ரி போன்றோர், ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். ஏறக்குறைய நவரத்தினங்கள் மாதிரி அவர்கள் அனைவரும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சேர ஒளிவீசினார்கள்.
அத்தகைய போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி. எழுத்தாளர் லஷ்மியின் காஞ்சனையின் கனவு, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. அதில், லலிதாவும் பத்மினியும்தான் நடிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் தாய்க்குலங்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். தட்டாமல் அதை நிறைவேற்றினார், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, லஷ்மியின் படைப்பு காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது.
திரையில் பத்மினியை ரசிகர்கள் ஏனோ அதிகம் சிரிக்க விடவில்லை. அவர் அழும்போதும் அழகாக இருந்தார். இறைவனின் வரப்பிரசாதம். அதுவே போதும் என திருப்தி அடைந்தார்கள். புகழின் சமுத்திரத்தில் உற்சாக அலைகளில், தமிழ் சினிமா உலகம் பப்பியைக் கொண்டாடியது.
பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.
தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.
1954. சிவாஜிக்கும் பத்மினிக்கும் மறக்க முடியாத மன்மத ஆண்டு. வருடக் கடைசியில் வெளியான எதிர்பாராதது, நிஜத்திலும் அப்படியே. தமிழ் சினிமாவின் முதல் மாறுபட்ட காதல் சித்திரம். ஸ்ரீதர் எழுதியது. அன்றைய கல்லூரிகளில் பாடத்தைவிட அதிகம் ஒப்பிக்கப்பட்டவை ஸ்ரீதரின் வசனங்கள். சுமதியாக பத்மினியும் சுந்தராக கணேசனும் பேசியதில் இருந்து சில வரிகள்
சுந்தர் - சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்மறந்து...
சுமதி - தூங்கிட்டீங்களா!
சுந்தர் - இல்லை சுமதி. நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்புகளை ஒவ்வொன்றாக மீட்டி...
சுமதி - அடடே, வர்ணனை பண்ணக்கூடத் தெரியுமா?
சுந்தர் - இதென்ன பிரமாதம்! இன்னும் கேள். அந்தரங்கத்தில் அரங்கம் நிர்மாணித்து... அ... அ...
சுமதி - என்ன அ'னாவிலே வரணும்னு தேடறீங்களா?
சுந்தர் - ஆமா... இரு இரு. ஆழ்கடலின் நீளத்தைச் சுவராக நிறுத்தி, தவழ்ந்து செல்லும் காற்றைத் தரையாக்கி, வண்ணமலர் இதழ்களை வகையாக அதில் பரப்பி, அந்த இனிய மாளிகையில் இதய ராணியான உன்னோடு இரவும் பகலும் இன்பத்தின் எல்லையில் மிதக்கத் துடிக்கிறேன் சுமதி!
சுமதி - ஒன்ஸ்மோர்!
சுந்தர் - நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல்லை. ஒன்ஸ்மோராம்லே ஒன்ஸ்மோர்!
அதன் உச்சகட்டக் காட்சியில், நடிப்பு என்பதை மறந்து கணேசனைக் கன்னத்தில் அறைந்தார் பத்மினி. அந்த நிகழ்வு, பப்பியின் வார்த்தைகளில்..
'சிவாஜியின் காதலியான நான், விதி வசத்தால் அவருக்குச் சித்தி ஆகிறேன். கணேசனுக்கோ பார்வை பறி போய்விடுகிறது. அப்பா நாகையாவின் இளம் மனைவியான என்னிடம், பழைய ஞாபகத்தில் சிவாஜி பழகுவதாக நினைக்கிறேன். மனம் பதறி அதைத் தவிர்க்க அவரை அறைவதாக சீன்.
டைரக்டர் சி.எச்.நாராயணமூர்த்தி என்னிடம், 'ரியலிஸ்டிக்கா இருக்கணும். கணேசனை நீ நிஜமாகவே அடிக்கணும்' என்றார். சிவாஜியும், 'பரவாயில்ல தைரியமா விடு ஒரு அறை. சீன் பிரமாதமா வரணும்' எனத் தூண்டினார். இருவருக்குமே அப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும் என்று தெரியாது.
ஒரு ஆவேசத்தில், பளார் பளாரென்று சிவாஜியை அடித்து வெளுத்து வாங்கிவிட்டேன். சிவாஜியின் கன்னமெல்லாம் வீங்கிவிட்டது. உடம்பு சரி இல்லாமல் ரெண்டு மூன்று நாள்கள் செட்டுக்கே வரவில்லை.
'பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறாய். உனக்கு எப்படி இவ்வளவு பலம் இருந்தது...?' என்று திகைப்புடன் கேட்டார்.
'நான் பரத நாட்டியம் ஆடி ஆடி, கை விரல்களுக்கு அதிகம் பயிற்சி கொடுத்திருக்கேன் சார். உடல் பலம் எப்படியோ. கைகளின் வலுவுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்றேன்.
சிவாஜிக்கு என்னால் நேர்ந்த கதியை நினைத்து வருத்தப்பட்டேன். சிவாஜி அதை சட்டை செய்யவில்லை. 'ரொம்ப இயற்கையாக நடித்தாய். அடியால் வலி இருந்தாலும், உன் நடிப்புத் திறமையை நினைத்து சந்தோஷமாகவே இருந்தது பப்பி' என மிகவும் பெருந்தன்மையோடு சொன்னார்.
எதிர்பாராதது படத்தின் இமாலய வெற்றி, சிவாஜி - பத்மினி ஜோடியைத் திரையில் நிரந்தரமாக்கியது.
No comments:
Post a Comment